எதிர்பார்த்தது போலவே சிரியாவின் அதிபர் பஷார் - அல் - அஸாத் கடந்த வாரம் நடந்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றியடைந்திருக்கிறார். அதிபர் அஸாதின் அரசு அதிகாரத்தில் இருக்கும் பகுதிகளில் மட்டும்தான் தேர்தல் நடத்தப்பட்டது. அவரது எதிர்ப்பாளர்களின் பிடியில் இருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவில் தேர்தலே நடக்கவில்லை. இந்த நிலையில் இதை எதிர்பார்த்த வெற்றி என்று குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவுக்கு துருக்கி, இராக், ஜோர்டான், இஸ்ரேல் ஆகியவை அண்டை நாடுகள். ஆர்மேனியர்கள், அசிரியர்கள், குர்துக்கள், துருக்கியர், கிறிஸ்தவர்கள் என்று பல்வேறு இனத்தவர்கள் சிரியாவில் இருந்தாலும் அடிப்படையில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அரேபியர்கள்தான் பெரும்பான்மையானவர்கள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாடாளுமன்ற ஜனநாயக நாடாக உருவான சிரியா, பல ராணுவப் புரட்சிகளை சந்தித்துத் தொடர்ந்து அரசியல் நிலையின்மையில் தத்தளித்து வந்தது. 1970இல் ஹபீஸ் அல் அஸாத் ஆட்சியைக் கைப்பற்றினார். முப்பது ஆண்டுகள் அவரது ஆட்சிக் காலம் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டு முதல் கடந்த 14 ஆண்டுகளாக அவரது மகன் பஷார் - அல் - அஸாத் அதிபராக இருந்து வருகிறார். இதுதான் சிரியா நாட்டின் சுருக்கமான சரித்திரப் பின்னணி.
இதற்கு முன்னால் நடந்த அதிபர் தேர்தல்களுக்கும் இப்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தலுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. முந்தைய தேர்தல்கள் அதிபராக பஷார் - அல் - அஸாத் தொடர வேண்டுமா, வேண்டாமா என்கிற ஒப்புதல் தேர்தல்களாக மட்டுமே இருந்தன. இந்த முறை அவரை எதிர்த்து வேட்பாளர்கள் களமிறங்க அனுமதிக்கப்பட்டனர். 89 விழுக்காடு வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக அடுத்த ஏழு ஆண்டுகள் அஸாத் அதிபராகத் தொடரத் தேர்தல் வழிவகுத்திருக்கிறது.
அஸாத் எதிர்ப்பாளர்களும், அவர்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் மேலைநாட்டு ஆதரவாளர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாகவே பஷார் - அல் - அஸாதின் ஆட்சியை அகற்றுவதில் முனைப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவர் ஒரு சர்வாதிகாரி என்று வர்ணிக்கப்பட்டாலும், அதிகாரத்தின் மீது அவருக்கு இருக்கும் பிடி சற்றும் தளர்ந்து விடவில்லை. பிரச்னைகள் மண்டிக் கிடக்கும் சிரியாவை வழிநடத்தும் திறமை அவருக்குத்தான் உண்டு என்று மக்கள் நம்புகிறார்கள். சிறுபான்மை மக்களின் பேராதரவு அவருக்கு இருப்பதும் அஸாதின் மிகப் பெரிய பலம்.
சமீபத்தில் எகிப்தில் நடந்த தேர்தலுக்கும் சிரியாவில் நடந்த தேர்தலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டு தேர்தல்களிலும் வரலாறு காணாத வெற்றி கிடைத்தாலும்கூட, அந்த வெற்றியை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாத நிலைமை. எகிப்தின் பெரும்பாலான வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர் என்றால், சிரியாவில் எதிர்ப்பாளர்கள் வசமுள்ள பகுதிகளில் வாக்கெடுப்பே நடத்தப்படவில்லை. எகிப்தில் தங்கள் ஆதரவு பெற்ற ஜெனரல் சிசியின் வெற்றியை ஆரவாரத்துடன் பாராட்டும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேலைநாடுகள், தங்களுக்கு அடிபணிய மறுக்கும் அஸாதின் வெற்றியை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
ஆரம்பம் முதலே ஈரானும், ரஷியாவும் அஸாத் அரசை ஆதரித்து வருகின்றன. அமெரிக்காவோ, தனது நேச நாடுகளான சவூதி அரேபியா, கத்தார் ஆகியவற்றின் மூலமாக சிரியாவிலுள்ள அஸாத் ஆட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு பணமும், ஆயுதங்களும் தந்து உதவி வருகிறது. அமெரிக்காவின் இந்த ராஜதந்திரம் அஸாதை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு உதவாமல் ஜபாத் - அல் - நஸ்ரா, அல் - காய்தா போன்ற தீவிரவாத ஜிகாதி குழுக்களுக்குத்தான் பயன்படுகிறது என்பது இப்போதுதான் அமெரிக்காவுக்கு உரைக்கத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவின் இந்தத் தவறான அணுகுமுறையால், அஸாத் எதிர்ப்பாளர்கள் அதிக அளவில் ஆயுதங்கள் பெற்றிருந்தும் எந்தவித அரசியல் தீர்வும் எட்ட முடியாத நிலைக்கு சிரியா தள்ளப்பட்டு விட்டிருக்கிறது.
மத்திய தரைக் கடலில் சிரியாவுக்கும் சைப்ரஸýக்கும் இடையில் அதிக அளவு எண்ணெய் வளம் இருப்பதுதான் மேலைநாடுகளும் ரஷியாவும் சிரியாவின் மீது அக்கறை செலுத்தக் காரணம். அஸாத் அரசுக்கு ஈரான், ரஷியா, சீனா ஆகிய நாடுகள் நிதியுதவி அளித்து ஆதரிப்பதும் சிரியாவின் எண்ணெய் வளத்தைக் கருத்தில் கொள்வதால்தான். இராக்கின் சதாம் உசேனையும், லிபியாவின் மும்மர் கடாஃபியையும் கச்சா எண்ணெய்க்காக பதவியிலிருந்து அகற்றியது போல, அடிபணியாவிட்டால் அஸாதையும் அழிக்க அமெரிக்கா நினைக்கிறது.
தேர்தல் வெற்றி அஸாதுக்கு பலம் சேர்த்திருக்கிறது. சமரசத்திற்கு இதுதான் சரியான தருணம். உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில்தான் பஷார் - அல் - அஸாதின் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.