பிரிவும் வலியும்!

தெலங்கானா பிரிந்து விடப்போகிறது என்பது தெரிந்த சீமாந்திரப் பகுதி மக்கள், காங்கிரஸ் மீது வெறுப்பை உமிழ்ந்து ஒதுக்கியது மட்டுமல்ல, ஆந்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்யவும், பிரிவினைக்குப் பிறகான சிக்கல்களை எதிர்கொண்டு ஆந்திரத்தின் நலனைப் பேணவும் அனுபவசாலியான நிர்வாகி தேவை என்பதால், புதியவரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை ஒதுக்கிவிட்டு, ஆட்சிப் பொறுப்பை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம்
Updated on
2 min read

பாகப் பிரிவினைக்குப் பிறகு காணப்படும் மனோநிலையில் ஆந்திரப் பிரதேசம் இருக்கிறது. எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தம்பி பிடிவாதமாக பாகத்தைப் பிரித்துக் கொண்டு சென்ற பிறகு, அதிலும், நீண்ட நாள்கள் குடியிருந்த வீட்டிற்கும் சொந்தம் கொண்டாடிப் பெற்ற பிறகு, எஞ்சிய சொத்துகளை வைத்துக் கொண்டு புது வாழ்வு தொடங்கும் அண்ணனின் நிலையில் ஆந்திரப் பிரதேசமும் அதன் முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடுவும் இருக்கிறார்கள்.

தெலங்கானா பிரிந்து விடப்போகிறது என்பது தெரிந்த சீமாந்திரப் பகுதி மக்கள், காங்கிரஸ் மீது வெறுப்பை உமிழ்ந்து ஒதுக்கியது மட்டுமல்ல, ஆந்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்யவும், பிரிவினைக்குப் பிறகான சிக்கல்களை எதிர்கொண்டு ஆந்திரத்தின் நலனைப் பேணவும் அனுபவசாலியான நிர்வாகி தேவை என்பதால், புதியவரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை ஒதுக்கிவிட்டு, ஆட்சிப் பொறுப்பை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

1995 முதல் 2004 வரை சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த ஆந்திரப் பிரதேசம், இப்போது அவர் மீண்டும் முதல்வராகி இருக்கும்போது மிகவும் சுருங்கி விட்டிருக்கிறது. ஆந்திரத்தின் எல்லைதான் சுருங்கி இருக்கிறதே தவிர, பிரச்னைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன.

சந்திரபாபு நாயுடு எதிர்நோக்கும் சவால்கள் ஒன்று இரண்டல்ல. முதலில், அவர் ஆசை ஆசையாக இந்தியாவே பிரமிக்கும் அளவில் நவீன நகரமாக மாற்றிய தலைநகர் ஹைதராபாதுக்கு பதிலாகப் புதியதொரு தலைநகரை நிர்மாணித்தாக வேண்டும். விஜயவாடாவுக்கு அருகில் ஆந்திரப் பிரதேசத்திற்கு புதிய தலைநகரம் உருவாக்குவதுடன், அந்த மாநிலத்திற்கு  உள்நாட்டு, அந்நிய முதலீடுகளைக் கவர்வதிலும் அவர் கவனம் செலுத்தியாக வேண்டும். விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடியில் தொடங்கி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அவர் அறிவித்திருக்கிறார். அவற்றை நிறைவேற்றியாக வேண்டும்.

சந்திரபாபு நாயுடுவின் அரசியல் ராஜதந்திரமும், தொலைநோக்குப் பார்வையும்தான் அவரை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வைத்திருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்னால், அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், அவருக்கு பலவீனம் என்றும் அவரது கட்சியினராலேயே கூடக் கருதப்பட்டது. தான் தெலங்கானா பகுதியில் இதனால் செல்வாக்கு இழப்போம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தாலும், பா.ஜ.க.வுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைத்தால் மட்டுமே, ஆட்சியில் அமர்ந்தால் மத்திய அரசின் முழு ஆதரவையும் பெற முடியும் என்பதை உணர்ந்திருந்ததால்தான் அவர் கூட்டணிக்கு சம்மதித்தார் என்று நம்பலாம்.

இதற்கு முன்னால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தபோதுகூட, தெலுங்கு தேசம் மக்களவைத் தலைவர் பதவியைக் கேட்டுப் பெற்றதே தவிர, வாஜ்பாயி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. இந்த முறை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்றிருப்பது மட்டுமல்ல, தனது தலைமையிலான அமைச்சரவையிலும் பா.ஜ.க.வுக்கு இரண்டு இலாகாக்களை ஒதுக்கி இருப்பது, மத்திய அரசின் முழு ஒத்துழைப்பையும் பெறுவதற்காகவும், பிரிவினைக்குப் பிறகு ஆந்திர மாநிலம் எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காகவும்தான்!

காங்கிரஸ் அமைப்பு ரீதியாகவே சீர்குலைந்து போய்விட்ட நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் வருங்காலத்தில் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக உருவாகும் வாய்ப்பு தெலுங்கு தேசம் கட்சிக்குத்தான் இருக்கிறது. இந்த முறை, தெலங்கானா பிரிவினையை எதிர்த்ததால் தெலுங்கு தேசம் கட்சி அந்த மாநிலத்தின் பெருவாரியான தொகுதிகளில் தோல்வியைத் தழுவ நேரிட்டது. ஆனால், இனிவரும் தேர்தலில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசின் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் போட்டி அமையும் என்பதால், தெலுங்கு தேசம் கட்சி வருங்காலத்தில் அங்கேயும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகூட அமையலாம்.

முன்பு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவராகவும், சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் இருந்தவருமான சந்திரசேகர ராவுடன் சுமுக உறவை மேற்கொள்வதோ, இரு மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதோ முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குப் பிரச்னையாக இருக்க வழியில்லை. பாகப் பிரிவினைக்கு முன்பும் சரி, பின்னாலும் சரி தம்பியை விட அண்ணனுக்குத்தான் பொறுப்பும், பொறுமையும் அதிகம் தேவை. இதை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உணர்ந்து செயல்பட்டால், வருங்காலத்தில் இரண்டு மாநிலங்களிலும் தெலுங்கு தேசம் கொடிகட்டிப் பறக்க முடியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com