பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சத அளவுக்கும், சரக்கு ரயில் கட்டணத்தை 6.5 சத அளவுக்கும் உயர்த்தி, சாமானிய மக்களின் தலையில் அதிகச் சுமையை ஏற்றியுள்ளது மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. நாட்டின் பொருளாதார நிலைமையைச் சீர்படுத்த கடுமையான சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது; இதற்கு மக்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் கூறியிருந்தார். இந்த நிலையில், ரயில் கட்டணத்தை இந்த அளவுக்கு கடுமையாக உயர்த்தி, பொதுமக்களுக்கு முதல் கசப்பு மருந்தை அளித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது எதிர்பார்த்ததுதான்.
1,15,000 கி.மீ. ரயில் பாதை, 65,000 கி.மீ. வழித்தடங்கள், 7,500 ரயில் நிலையங்கள், 14 லட்சம் ஊழியர்களுடன் செயல்படும் உலகின் மிகப்பெரிய அரசுத் துறை நிறுவனமான இந்திய ரயில்வேயை திறம்பட நிர்வகிப்பது என்பது எளிதான விஷயமல்ல. நாள்தோறும் இயக்கப்படும் 10,000 ரயில்களில் சுமார் 2.5 கோடிப் பேர் பயணம் செய்கின்றனர்.
இத்தகைய பின்னணியைக் கொண்ட இந்திய ரயில்வே, கடந்த பல ஆண்டுகளாகவே நிதிப் பற்றாக்குறையால் எந்தவித வளர்ச்சியும் இன்றி முடங்கிப் போயுள்ளது. முந்தைய ரயில்வே நிதி நிலை அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தக்கூட போதிய நிதி இன்றி தள்ளாட்டத்தில் உள்ளது இந்திய ரயில்வே. தற்போது பயணிகள் ரயில் சேவையில் மட்டும் மாதத்துக்கு ரூ. 900 கோடி இழப்பை ரயில்வே சந்தித்து வருவதாகவும், இதைச் சமாளிக்க கட்டண உயர்வை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறி கட்டண உயர்வை அறிவித்திருக்கிறார் ரயில்வே அமைச்சர் சதானந்த கெüடா.
இந்தக் கடுமையான கட்டண உயர்வு விலைவாசி மேலும் அதிகரிக்கவும், பணவீக்கம் மேலும் உயரவும் வழிவகுக்கும் என்பது தெரிந்திருந்தும் பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
வருகிற ஜூலை மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையால் கடந்த மே மாதம் 16ஆம் தேதி முடிவெடுக்கப்பட்டு, நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் கட்டண உயர்வைத்தான் தற்போதுதான் வெளியிட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நவீனமயமாக்குதல், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்துதல், பழைய ரயில் தண்டவாளங்கள், சாதனங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரயில்வேக்கு சுமார் ரூ.4 லட்சம் கோடி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தேச ரயில் கட்டணம் மூலம் கிடைக்கக் கூடிய ரூ.8,000 கோடியைக் கொண்டு ரயில்வேயின் அபரிமிதமான நிதித் தேவையை எப்படி ஈடுகட்ட முடியும் என்பது தெரியவில்லை.
ரயில்வேக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பது, முக்கிய ரயில் நிலையப் பகுதிகளில் வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் கட்டுவது உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். இதேபோல, சரக்குப் போக்குவரத்து தடங்கலின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு தனி சரக்கு ரயில் பாதையை அமைக்கலாம். சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரித்து கூடுதல் வருவாயை ஈட்டலாம்.
இவைபோன்ற புதிய உத்திகள் மூலம் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும். அதைவிடுத்து, கட்டண உயர்வு மூலம் சாமானிய, நடுத்தர வர்க்க மக்கள் மீது மேலும் சுமையை அதிகரிப்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது. இதன் தொடர் விளைவாக விலைவாசி மேலும் அதிகரிக்குமே அல்லாமல், பிரச்னை தீர்ந்துவிடாது.
வைர நாற்கர ரயில் இணைப்புத் திட்டம் என்கிற ரயில்வே கட்டமைப்பை மேன்மைப்படுத்தும் திட்டம் குடியரசுத் தலைவர் உரையில் அறிவிக்கப்பட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டண உயர்வால் தகர்கிறது. பொதுப் போக்குவரத்து நஷ்டத்தில் இயங்கினால்கூடப் பரவாயில்லை பெட்ரோல் டீசல் பயன்பாடு கணிசமாகக் குறைந்தால், அதனால் மிச்சப்படும் அன்னியச் செலாவணி அதை ஈடுகட்டிவிடும். பொதுத் துறை போக்குவரத்துக்கான டீசலுக்கு அதிக விலை எப்படித் தவறோ, அதேபோல ரயில் கட்டண உயர்வும் தவறான முடிவு. இது பிரச்னைக்குத் தீர்வாகாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.