தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாராக்கடனும் ஏமாளி ஜனமும்!

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களால் கடனாகப் பெறப்பட்டு, திருப்பிச் செலுத்தப்படாமல் ஏறத்தாழ 2 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாகத் தேங்கிக் கிடக்கிறது.

Updated On :25 ஜூன் 2014, 7:44 pm

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களால் கடனாகப் பெறப்பட்டு, திருப்பிச் செலுத்தப்படாமல் ஏறத்தாழ 2 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாகத் தேங்கிக் கிடக்கிறது. வங்கிகளில் கொள்ளை நடந்தால் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக பரபரப்பாகப் பேசப்படும். தந்திரசாலிகளான கார்ப்பரேட் நிறுவனங்களால் செய்யப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடியோ, வாராக்கடன் என்றுகூட அல்ல, "செயல்படாத சொத்து' என்கிற போர்வையில் மக்கள் பார்வையிலிருந்தே மறைக்கப்படுகிறது.

சாமானிய நடுத்தர வர்க்கக் குடிமகன் வீடு அல்லது நகையை ஈடாகக் கொடுத்து வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போனால், புகைப்படங்களுடன் விளம்பரம் செய்து அவர்களை அவமானப்படுத்தும் வங்கிகள், பல்லாயிரம் கோடி ரூபாய் கடனாகப் பெற்று ஏமாற்றும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளை தப்பிக்க வைப்பது எப்படி என வழி தேடுகின்றன.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏறத்தாழ ரூ.3 லட்சம் கோடி கடன் பாக்கியை, சீரமைப்பு என்கிற பெயரிலும், வட்டித்தொகைத் தள்ளுபடி என்கிற பெயரிலும் வங்கிகள் புதுக் கடனாக மாற்றி விட்டிருக்கின்றன. வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையை முற்றிலுமாக விட்டுக் கொடுப்பது, பெற்ற கடன் தொகையில் கணிசமான பகுதியைத் தள்ளுபடி செய்து மீதித் தொகையை மட்டும் கட்டிக் கடனைத் தீர்க்க வழிவகுப்பது ஆகியவற்றிற்குப் பெயர்தான் கடன் சீரமைப்பு. பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதே, சில ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைப்பு என்கிற பெயரில், வாங்கிய கடனின் பெரும்பகுதியை இதுபோல தள்ளுபடி செய்து கொள்வதற்காகத்தான்.

கடந்த மார்ச் 2011-இல் ரூ.71,080 கோடியாக இருந்த வங்கிகளின் வாராக்கடன், 2012 டிசம்பர் மாத இறுதியில் ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்ந்தது. "கிரிஸில்' என்கிற வங்கிகளின் தர நிர்ணய அமைப்பு மார்ச் 2014-இல் ஏறத்தாழ மூன்று முதல் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடன் இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. இந்த வாராக்கடனில் பெரும்பகுதி 30 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடையது என்பதுதான் திகைக்க வைக்கும் உண்மை. இவர்கள் எல்லோருமே அரசியல் தொடர்புடையவர்கள்தான் என்பது சொல்லியா தெரிய வேண்டும்?

அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாத 30 பெரிய கடனாளிகள் யார் யார்? அவர்களுடைய தொழில் பின்னணி என்ன? அவர்களுடைய ஏற்கெனவே கடன் பெற்ற, திருப்பித் தந்த பின்னணி என்ன? அவர்களுக்கு ஜாமீன் அளித்தவர்கள் யார் யார்? எப்படி அவர்களால் இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகப் பெற முடிந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டாமா? வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்வரை இதைத் தெரிந்துகொள்ளும் உரிமை பெற்றவர்தானே?

கடந்த ஆட்சியில் ப.சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சரானது முதலே, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரும் கடன் பாக்கிகளை, சீரமைப்பு என்கிற பெயரில் தள்ளுபடி செய்தும், வட்டித் தொகையைக் குறைத்துக் கொண்டும் மாற்றி அமைத்து, சிலருடைய வட்டித்தொகையை பின் தேதியிலிருந்து தள்ளுபடி செய்து, மக்களின் விமர்சனத்திற்கோ, சட்டத்தின் நடவடிக்கைக்கோ உள்ளாகாமல் காப்பாற்றி விட்டிருக்கிறார்கள். ஒருபுறம் இதைச் செய்து கொண்டே, முந்தைய நிதியமைச்சரும், முன்னாள் வங்கித் துறைச் செயலரும் வாராக்கடன்களைத் தயவுதாட்சண்யமின்றி வசூலிக்கும்படி வங்கித் தலைவர்களை வலியுறுத்தி வந்தனர்.

முந்தைய மன்மோகன் அரசைப்போலவே இன்றைய நரேந்திர மோடி அரசும், அரசுடமை வங்கிகளை வாராக்கடன்களை கடுமையான நடவடிக்கைகள் மூலம் வசூலிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கம் ரூ.70,000 கோடி பாக்கி வைத்திருக்கும் 406 பெரும் கடனாளிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அப்படியானால், அரசு வங்கிகளை ஏமாற்றியதை தேசத்துரோகக் குற்றமாக்கி இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து, சிறைத்தண்டனை வழங்க முடியுமா என்றால், முடியாது. செய்யவும் மாட்டார்கள்.

முதலில் இந்த வாராக்கடனுக்குக் காரணமான நிறுவனங்களின் இயக்குநர்களின் புகைப்படங்களையும், அந்த நிறுவனம் தரவேண்டிய கடன் தொகையையும் அதிகாரபூர்வமாக ஊடகங்களில் வெளியிட வேண்டும். வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டுவருவது இருக்கட்டும். முதலில் உள்நாட்டு வாராக்கடனை வசூலிப்பதற்கு முன்னுரிமை அளிக்கட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.