அடித்தளமே ஆட்டம்!

சென்னை மௌலிவாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் இதுவரை 18 பேர்
Updated on
2 min read

சென்னை மௌலிவாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் இதுவரை 18 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  இதுபோன்ற நிகழ்வுகளில் அதிகரித்த இழப்பீடு பிரச்னைக்குத் தீர்வாகிவிடாது.

இந்தச் சம்பவத்துக்காக கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓராண்டுக்கு முன்னால் ஒரு தனியார் கல்லூரியின் கட்டுமானச் சுவர் சரிந்து பலர் பலியானபோது கல்லூரி உரிமையாளர் கைது செய்யப்பட்டாரே, அந்த வழக்கு என்ன ஆனது? இது போன்ற விபத்துகளுக்கு அடிப்படைக் காரணம் அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள். அவர்களில் யாராவது இதுவரை தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா?

அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்து விழ பணியாளர்கள் நிச்சயமாகக் காரணமல்ல. கட்டடக் கலையில் தேர்ந்த பொறியியல் வல்லுநர்களால் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரைபடம் வடிவமைக்கப்பட்டு, தொழில்நுட்ப உதவியுடன் அடித்தளம் அமைக்கப்பட்டு அடுக்குமாடிக் கட்டடங்கள் எழுப்பப்படுகின்றன.

விரைவாகப் பணியை முடித்து விற்றுவிட்டு, அடுத்த அடுக்குமாடிக் கட்டடம் எழுப்புவதில் குறியாக உள்ள நிறுவனங்கள்தான், அடுக்குமாடிக் கட்டடங்களை எழுப்புகிறார்களே தவிர, சில லட்சம் முதலீட்டில் செயல்படுபவர்கள் இதில் ஈடுபடுவதில்லை. பல கோடி ரூபாய் முதல் போட்டு தொழில் செய்பவர்கள் என்பதால், குறுகிய காலத்தில் நிறைந்த லாபம் பெறுவது மட்டுமே அவர்களது குறிக்கோளாக இருக்கிறது. அவர்கள் வரை அது சரி.

ஆனால், இதுபோன்ற கட்டடங்கள் எந்தவித விபத்தையும் ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்வது அரசின், அரசு அதிகாரிகளின் கடமை. சில அதிகாரிகள், சதுர அடிக்கு இவ்வளவு என்று கையூட்டுப் பெற்று வரைபடங்களையும் ஆவணங்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அனுமதி வழங்கினால் விபத்துகள் ஏற்படத்தானே செய்யும்? சட்டதிட்டங்கள் வரைமுறைகள் இருப்பதால் மட்டுமே கட்டடத்தின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்திவிட முடியுமா?

கட்டடம் இடிந்து விழுவதற்கு மூன்று அடிப்படைக் காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று முறையான மண் பரிசோதனை நடத்தி, கட்டடங்கள் எழுப்பப்படாதது. இரண்டாவது, அடுக்குமாடிக் கட்டடங்களில் ஏற்றப்படும் சலவைக் கல், கிரானைட், காங்க்ரீட் போன்றவற்றின் உத்தேச எடை குறித்து முறையான மதிப்பீடு செய்யப்படாதது. மூன்றாவது, தரம் குறைந்த பொருள்களை கட்டுமானத்தில் பயன்படுத்துவது. இவற்றை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுத் துறைகளுக்கு உண்டு. ஆனால் செய்வதில்லை.

இந்தியப் பாரம்பரியக் கட்டுமானத் தொழில்நுட்பத்தின் முதல் ஆய்வே மண் சோதனைதான். கட்டுமானம் எழுப்பத் திட்டமிட்டிருக்கும் இடத்தில் ஒரு சதுர கன அடி அளவுக்குக் குழி வெட்டுவார்கள். வெட்டி எடுத்த மண்ணை அதே குழியில் போட்டு நிரப்புவார்கள். மண் குழிக்கு மேல் குவிந்து நிற்குமானால் கட்டுமானத்திற்கான இடம் அது. குழியில் வெட்டி எடுக்கப்பட்ட மண் நிரம்பாமல் போனால் அந்த இடத்தில் கட்டுமானம் கூடாது. இந்த சோதனையை நடத்தக் கட்டுமானப் பொறியியல் படிப்பொன்றும் தேவையில்லை. ஆனாலும் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

பல தனியார் பொறியியல் கல்லூரிகள் ஏரிப் புறம்போக்கை ஆக்கிரமித்து எழுப்பப்பட்டு, அரசின் அனுமதியைப் பெற்றுக் கொண்டவைதான். விபத்து நேர்ந்தால் பலியாகப் போவது அப்பாவி மாணவர்கள்தான். சென்னை தியாகராய நகரில் விதிமுறை மீறலுடன் கட்டப்பட்டிருக்கும் பல வணிகவளாகங்களில் எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரக் கூடும். பலர் உயிரிழக்கக் கூடும். இதெல்லாம் தெரிந்தும் அதிகாரிகள் வாளாவிருக்கிறார்கள்.

பெருநகர வளர்ச்சிக் குழுமமும் சரி, நகர் ஊரமைப்பு இயக்ககமும் சரி, ஆவணங்களும், வரைபடமும் சரியாக இருப்பதால் அனுமதி வழங்குவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், கட்டுமான வல்லுனர்கள் குழுவை அமைத்து, எழுப்பப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவையா, கட்டுமானத்தின் தரம் சரியாக இருக்கின்றதா போன்ற பரிசோதனையிலும் ஈடுபட வேண்டும். கட்டடங்களின் அடித்தளம் சரியாகவும், முறையாகவும் போடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதும் இன்றியமையாதது.

தயவு தாட்சண்யமில்லாமல் வரைமுறை மீறிய கட்டடங்கள் இடித்துத் தள்ளப்படுவதும், அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதும் மட்டுமே, இதுபோல தரம் குறைந்த கட்டடங்கள் எழுப்பப்படாமலும், விபத்துகள் நேராமலும் தடுக்கும். அந்தத் துணிவு எந்த அரசுக்கும் இல்லையே, என் செய்ய?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com