சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி சென்னையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது ஏற்பட்ட பரபரப்பும் விமர்சனங்களும் தற்போது இல்லை. தமிழ்நாடு வழக்கம்போல இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக வடமாநில இளைஞர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டவுடன் இந்தப் பிரச்னைக்கு நியாயம் கிடைத்துவிட்டதாக ஒரு வகை சமூக மனநிறைவு ஏற்பட்டுவிட்டதுதான் இதற்குக் காரணம்.
இந்தக் கொலையைத் தொடர்ந்து குறைந்தபட்சமாக இரண்டு விவகாரங்களை முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். முதலாவதாக, தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர் தொடர்பான வேலை நேரம், அவர்களுக்கான வாகன வசதி, நிறுவனத்தில் அனைத்து வசதிகளுடன் மகளிருக்கான ஓய்வறை, அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை உறுதிசெய்தல். இரண்டவதாக, எந்த ஒரு பெண்ணும் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டால், அந்தப் புகார் மீது காவல்துறை உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பதை முறைப்படுத்தல்.
ஆணும் பெண்ணும் சமமாக இரவு நேரங்களில் பணியாற்றுவது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதது. மருத்துவமனைகளில் செவிலியர்கள் இரவில் பணிபுரிந்தே ஆக வேண்டும். மகளிர் காவல் நிலையங்களில் மற்றும் ரயில்வே காவல் நிலையங்களில் பெண்கள் இரவில் பணிபுரிவதை தவிர்க்க முடியாது.
அதே நேரத்தில் எல்லா துறைகளிலும் இதே நிலைமைதான் என்றில்லை. பல துறைகளில் இரவுப் பணியிலிருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்க முடியும். அத்துறைகள் எவையெவை? எத்தனை பேர் பணிபுரியும் இடத்தில் இதற்கான தேவையும் மாற்று ஏற்பாடுகளுக்கான சாத்தியமும் உள்ளன என்பதை தொழிலாளர் நலத்துறை ஆய்வு செய்வதும், அவற்றை நடைமுறைப்படுத்துமாறு நிறுவனங்களை வலியுறுத்துவம் இன்றியமையாதது.
இரவு நேரத்தில் பணிமுடித்து வீடு திரும்பும் பெண் ஊழியர்களுக்கு வாகன வசதி அளிப்பதும், அவர்கள் தங்கள் சொந்த வாகனத்தை பயன்படுத்துவோராக இருந்தால், வீடு சேர்ந்தவுடன் தகவல் தெரிவிக்கவும், அதைப் பதிவு செய்வதுமான நடைமுறை உருவாக்கப்படவும் வேண்டும். குறுந்தகவலை யார் வேண்டுமானாலும் கொடுக்க முடியும் என்பதால், குரல் பதிவு மூலம் அந்த பெண் ஊழியர் தான் வீடு சேர்ந்ததை தெரிவிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
மேலும், ஒரு பெண் ஊழியரின் பாதுகாவலர் அல்லது கணவர், பெற்றோர் ஆகியோரில் யாரேனும் ஒருவர், நிறுவனத்தோடு எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு, பெண் ஊழியர் குறித்த தகவல் அறிய, தகவல் சொல்ல ஒரு அலுவலரை நியமிப்பதும் அவர்கள் நேருக்குநேர் அறிமுகம் ஆகியிருப்பதும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
காவல் நிலையத்தில் ஒரு பெண் வீடு திரும்பவில்லை என்று புகார் அளித்தால், அவர்களின் மிக அலட்சியமான முதல் கேள்வி, "எவனையாவது காதலிச்சாளா?' என்பதுதான். காவல்துறைக்கு இது சாதாரண அணுகுமுறை. ஆனால் பெற்றோருக்கு மிகப்பெரும் அதிர்ச்சி தரும் கேள்வி. அந்த பெண் விபத்துக்கு ஆளாகி இருக்கலாம், கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் புகார் கொடுப்போரிடம் அணுகுவது குறித்து காவலர்களுக்கு உணர்வூட்டம் தர வேண்டும்.
இந்த வழக்கில், உமா மகேஸ்வரியின் ஏ.டி.எம். அட்டை பயன்பாடு மற்றும் செல்போன் பயன்பாட்டை உடனடியாக ஆய்வு செய்திருந்தால், கடைசியாக எந்த ஏ.டி.எம். மையத்தில், எந்த நேரத்தில் பணம் எடுக்கப்பட்டது என்பதையும், அவர் கடைசியாக பேசியபோது எந்த இடத்தில் இருந்தார் என்பதையும் அறிந்திருக்க முடியும். அந்த நேரத்தில் அந்த அட்டையைப் பயன்படுத்தியது அவரா, வேறு யாரேனுமா என்பதை கண்காணிப்பு காமிரா பதிவில் உடனடியாக காண்பதும் எளிது. இவற்றை காவல்துறை செய்திருந்தால், சடலம் அடையாளம் காண முடியாதபடி, தடயங்கள் மறைந்து போகும்படியாக அழுகிப் போகும் நிலைமை வந்திருக்காது.
இந்த வழக்கில் ஒரு பெண் காணாமல் போய் 10 நாள்களுக்கும் மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல் நிலைய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்றாலும், இதுபோன்ற நேர்வுகளிலிருந்து காவல்துறை பாடம் படிக்கிறதா என்பது சந்தேகம்தான். முன் கருதலுடன் செயல்பட்டு, மாறிவரும் சமுதாய சூழலுக்குக் காவல்துறை தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. அது இல்லாமல் போனாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதாவது அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதில் கூடவா சிரமம்?
மெத்தனமும், பொறுப்பின்மையும் மிகுந்து கடமை உணர்வு இல்லாத சமூகமாக நாம் மாறிவிட்டிருப்பதுதான் இந்த அவலங்களுக்குக் காரணம். எப்போதுதான் உணர்ந்து திருந்தப் போகிறோமோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறு

சென்னையில் ஆா்வத்துடன் வாக்களித்த பெண்கள்

வா்த்தக ஒப்பந்தம்: வேளாண் துறையில் இந்தியா பிடிவாதம் - அமெரிக்கா

வேலூா் ஆட்சியா், விஐடி வேந்தா், திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

