தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்தது முதல் மார்ச் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், முறையான ஆவணம் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் ரூ.6.06 கோடி; தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் மதிப்பு ரூ.42.5 லட்சம்!
இவ்வாறு வாகனச் சோதனை செய்வதால் மட்டுமே வாக்குகளுக்கு பணம் கொடுப்பதைத் தடுத்துவிட முடியுமா? தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைப்பதைத் தடுத்துவிட முடியுமா என்று கேட்டால் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட முடியும். ஆனால், இந்தச் சோதனையும் இல்லாவிட்டால் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் கருப்புப் பணப் புழக்கம் மேலதிகமாகும் என்பதும் மிகமிக உறுதி.
மார்ச் 14ஆம் தேதியன்று அருணாசலப் பிரதேச முன்னாள் அமைச்சர் ஒருவரை குவஹாத்தி விமான நிலையத்தில் சோதனை செய்தபோது, அவரது பெட்டியில் ரூ.2 கோடி ரொக்கம் இருந்தது. இன்னும் விசாரணை முடியவில்லை. இதிலிருந்து வெறும் வாகனச் சோதனை மட்டுமல்ல, விமானச் சோதனை, கப்பல் சோதனை, படகுகள் சோதனை எல்லாமும் செய்தாக வேண்டும் என்பது புரிகிறது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை ரொக்கமாகக் கொண்டு செல்வது எந்த நாளிலுமே தவறுதான். ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமே இவை வாகனச் சோதனையில் சிக்குகின்றன. மற்ற நாள்களில் இதைவிடப் பெருந்தொகை எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் முழுவதும் கருப்புப்பணம் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கருப்புப் பணப் புழக்கம்தான் எல்லா பொருள்களின் விலையையும் உயர்த்துகிறது.
"ஆவணங்கள் இல்லாமல் ரொக்கம் கொண்டு செல்லாதீர்கள்' என்று அறிவுறுத்த வேண்டிய வணிகர்கள் அமைப்பு, ரூ.3 லட்சம் வரை ரொக்கம் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும்போது ஆச்சரிமாக இருக்கிறது.
இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், அனைத்துப் பொருள்களையும் பணஅட்டை மூலம் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. விற்பனை செய்த பொருளுக்கான பணத்தை இ-பேங்கிங் மூலம் வரவு வைப்பதிலும் சிக்கல் இல்லை. இவை இன்னும் முழுமையடையாத, பரவலாகாத வசதிகள் என்றே வைத்துக்கொண்டாலும், காசோலை, பணவோலையாகப் பெறுவது இன்னும் பாதுகாப்பானது. ஆனால், வங்கிக் கணக்குக்கே செல்லாமல் பணத்தை சுழல்முதல் ஆக்கி, பல மடங்கு லாபம் காண்பது என்ற தவறான அணுகுமுறை மட்டுமே ஆவணங்களைத் தவிர்க்க காரணம்.
வங்கிக் கணக்கில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தினால், செலுத்துபவரின் வருமான வரி கணக்கு எண் குறிப்பிட்டாக வேண்டும். ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனை அல்லது ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு என்றால் அவை வருமானவரித் துறையின் பார்வைக்குச் சென்றுவிடும். விற்பனை வரி, வருமான வரி, மதிப்பு கூட்டு வரி என எந்தச் சிக்கலும் இல்லாமல் இருப்பதற்காக, ஆவணங்கள் இல்லாது வணிகம் செய்வோர் வங்கியைத் தவிர்க்கிறார்கள்.
அரசு அதிகாரி, அரசு ஊழியர், அரசியல்வாதி, வணிகர் யாராக இருந்தாலும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ப்பது என்பது, இத்தகைய வங்கிக் கணக்கில் போடப்படாமல் ரொக்கமாகத் தரப்படும் லஞ்சம் மற்றும் ஆவணம் இல்லா வணிகத்தால் மட்டும் சாத்தியம். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அதிகாரி மற்றும் அரசியல்வாதியின் வாங்குதிறன் மிக அதிகமாக உள்ளது. ஆகவே அவர் எந்தப் பொருளின் விலையைக் குறித்தும் கவலைப்படுவதில்லை. ஆகவே சந்தையில் பொருள்களின் விலை உயரும். வீடு, மனை வாங்க முடியாமல் போனால் தொலைகிறது. ஓட்டல் சாப்பாடு விலைகூட உயர்வதால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
நகைக் கடைகளில் தங்க நகைச் சீட்டுக் கட்டுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே என்று யாராவது கருதினால் தவறு. அதில் மேலதிகமாக பினாமி பெயர்களில் முதலீடு செய்பவர்கள் லஞ்சப் பணம் பெறும் அரசு ஊழியர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. சீட்டுக் கம்பெனிகளிலும் இதுதான் நடக்கிறது. பங்குச் சந்தை மட்டும் விதிவிலக்கா என்ன? அதற்கு சஹாரா நிறுவனம் ஓர் உதாரணம்.
தற்போது தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் வாகனச் சோதனைகள், ஆவணம் இல்லா வணிகர்களுக்கும் லஞ்சப் பேர்வழிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்தான் பெரும் இம்சையாக இருக்கிறது. இத்தகைய ஆவணம் இல்லா வணிகத்தின் மூலம் ஆண்டுதோறும் மாநில அரசு இழக்கும் வரி வருவாய் எத்தனை ஆயிரம் கோடியாக இருக்கக்கூடும் என்பதையும் எண்ணிப்பார்க்கும்போது, தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் இப்படி சோதனைகள் நடத்தப்பட வேண்டும்; உரிய ஆவணமில்லாத பணம் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தத் தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை மேயா், துணை மேயா், ஆணையா் வாக்களிப்பு

மணப்பாறை அருகே போலீஸாரை கண்டித்து வாக்குப்பதிவு நிறுத்தம்: கிராம மக்கள் போராட்டம்

ஒரே குடும்பத்தை சோ்ந்த 18 போ் வாக்களிப்பு

நெடுவாசலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுக்கச் சென்றவாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

