சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் இளம்பெண் ஒருவரின் ஒளிமயமான எதிர்காலம் பலியாகி இருக்கிறது. 14 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த குண்டுவெடிப்பின் பின்னணி என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஆந்திரம் வழியாகச் செல்ல இருந்த அந்த ரயிலில் குண்டு வெடித்திருப்பதற்கும், ஆந்திரத்தில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரசாரம் நடைபெறுவதற்கும் தொடர்பு இருந்திருந்தால் ஆச்சரியமில்லை. குண்டுவெடிப்பின் மூலம் பீதியை ஏற்படுத்தி, நரேந்திர மோடியின் கூட்டத்திற்கு அதிக அளவில் கூட்டம் திரளாமல் செய்வது உள்நோக்கமாக இருக்கக்கூடும்.
"நரேந்திர மோடி ஏறத்தாழ 400 கூட்டங்களில் பேசியிருக்கிறார்; அதனால் அதனுடன் தொடர்புபடுத்தி இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைப் பார்க்க வேண்டியதில்லை' என்கிற மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் கருத்து நகைப்புக்குரியது. பல தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் தாக்குதலுக்கு பலியானது தெரிந்துமா அவர் இப்படிப் பேசுவது?
1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மீனம்பாக்கம் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் 30 பேர்; காயமடைந்தோர் 25 பேர். 1998 பிப்ரவரி 14ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலியானவர்கள் 58 பேர் என்றால், காயமடைந்தவர்கள் 200க்கும் அதிகமானவர்கள். இதோ இப்போது மே 1ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் ஒருவர் மரணமடைந்திருக்கிறார்; 14 பேர் காயமடைந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் குண்டு வெடிக்கத் தொடங்கி இருக்கிறது.
1984 முதல் இதுவரை, இந்தியாவில் ஏறத்தாழ 58 தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் என்றாலும்கூட, ஏனைய சில, மதத் தீவிரவாதிகளின் மனிதாபிமானமற்ற செயல் என்றுதான் கூற வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 58 தாக்குதல்களில் மரணமடைந்தோர் 1,857 பேர். காயமடைந்தோரின் எண்ணிக்கையோ பல மடங்கு அதிகம்.
மேலே குறிப்பிட்ட 58 தாக்குதல்களில் 6 தாக்குதல்களில் மட்டும்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய தாக்குதல்கள் பற்றிய விசாரணை முடியவில்லை, துப்பு கிடைக்கவில்லை அல்லது போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அது மாநிலக் காவல் துறையோ, மத்திய புலனாய்வுத் துறையோ எதுவாக இருந்தாலும் முறையாகத் துப்புத் துலக்கவில்லை அல்லது தகுந்த தடயங்களைக் கண்டுபிடித்து வழக்குக்கு வலுச் சேர்க்கவில்லை என்பதுதான்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு இத்தனை ஆண்டுகளாகியும் இன்னொரு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறவில்லை. நடைபெற அவர்கள் அனுமதிக்கவில்லை. எத்தனை முக்கியமானவராக இருந்தாலும், முறையான பரிசோதனை இல்லாமல் பொது இடங்களில்கூட அவர்களை அனுமதிப்பதில்லை. இதற்கு நேர் எதிரான கலாசாரம் இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த அடுத்த ஒரு வாரத்திற்கு நடைபெறும் கடுமையான சோதனையேகூட வெறும் கண் துடைப்பு என்பதாகி விட்டிருக்கிறது.
காவல்துறையில் போதிய பணியாளர்கள் இல்லை. ரயில்வே காவல்துறை என்பது ரயில்நிலையங்களில் சட்ட ஒழுங்கைக்கூட சரியாக கவனிக்க முடியாத நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தை எதிர்கொள்வதோ, நடவடிக்கை எடுப்பதோ எப்படி சாத்தியம்? தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு ரயில்வே காவல்துறையினருக்குப் போதுமான அளவு நவீன துப்பாக்கிகள் தரப்பட்டிருக்கின்றனவா என்பதேகூட சந்தேகம்தான்.
மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருப்பதால், இந்த மாநிலங்களுக்கு இடையிலான காவல்துறையினர் ஒற்றுமையாகப் பணிபுரிவதிலும் பிரச்னைகள் இருக்கின்றன. மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இல்லாவிட்டாலும், தேசிய அளவில் தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஓர் அமைப்பு நிச்சயமாக வேண்டும்தான். அதை மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தீவிரவாதத்தை எதிர்கொள்வதிலும், தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதிலும் மத்திய மாநில அரசுகள் இணைந்து முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே உயிர்ச்சேதங்களை நம்மால் தடுக்க முடியும்.
கடைசியாக ஒரு கேள்வி. வாக்களிப்பை இத்தனை கட்டமாக நீட்டி வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவேகூட, தீவிரவாதிகளுக்கு சாதகமாகவல்லவா இருக்கிறது. நல்லவேளை இத்தோடு போயிற்றே என்று மகிழ்வதா, அப்பாவிப் பெண் ஒருவரை வெடிகுண்டு பலிவாங்கிவிட்டதே என்று விசனப்படுவதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.