சில ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்த "இலக்கு ஆசியா' என்கிற வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியாக, சமீபத்தில் அவர் நான்கு ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் பரவலாகப் பேசப்படாமல் போனது, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கேகூட சற்று ஏமாற்றம் அளித்திருக்கும். அரசுமுறைப் பயணமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நான்கு நாடுகளுக்கும் விஜயம் செய்தார். இந்த நான்கு நாடுகளுமே அமெரிக்க ஆதரவில் இருக்கும் நட்பு நாடுகள்.
இந்த நான்கு நாடுகளைத் தேர்ந்தெடுத்து அமெரிக்க அதிபர் விஜயம் செய்திருப்பது, சர்வதேச அரசியல் நோக்காளர்களின் கவனத்தைக் கவர்ந்திருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. இந்த நான்கு நாடுகளுமே சீனாவின் அண்டை நாடுகள் என்பதும், சீனாவின் அதீத வளர்ச்சியால் கலக்கமடைந்திருக்கும் நாடுகள் என்பதும்தான் அந்தக் காரணம்.
அதிபர் ஒபாமாவின் தென்கொரிய, மலேசிய விஜயங்கள் அந்த நாடுகளிலேயேகூட ஓர் அமெரிக்க அதிபரின் விஜயம் பெற வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறவில்லை. தென்கொரியாவில் நடந்த படகு விபத்தும், மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காற்றோடு கலந்துவிட்ட மாயமும் அந்த நாடுகளின் ஊடகங்களில் முதன்மைச் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க அதிபரின் விஜயம் திட்டமிடப்பட்டதேகூட தவறான அணுகுமுறை. வடகொரியாவுடனான தென் கொரியாவின் பிரச்னைகளில், அமெரிக்கா தனது முழு ஆதரவையும் தென்கொரியாவுக்கு வழங்கும் என்கிற அதிபர் ஒபாமாவின் உறுதிமொழி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், தென்கொரிய படகு விபத்தால் ஏற்பட்ட துக்கம் அந்த மகிழ்ச்சிக்கு இடமளிக்காமல் தடுத்துவிட்டது.
ஒபாமாவின் பிலிப்பைன்ஸ் விஜயம் அமெரிக்காவுக்கு வெற்றியாக அமைந்தது எனலாம். அந்த நாட்டுடன் அதிபர் ஒபாமா கையெழுத்திட்ட பத்தாண்டு ராணுவ ஒப்பந்தத்தின் மூலம், அங்கே அமெரிக்க ராணுவப் படைகளின் எண்ணிக்கை அதிகரிப்பை பிலிப்பைன்ஸ் ஒப்புக்கொண்டிருக்கிறது. மேலும், அமெரிக்க ராணுவத்தின் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் ஆகியவை பிலிப்பைன்ஸ் நாட்டைப் பயன்படுத்திக் கொள்ளவும் அந்த ஒப்பந்தம் வழிவகை செய்திருக்கிறது.
ஆனால், ஒபாமாவின் ஜப்பான் விஜயம் பெரிய வெற்றியை அடைந்ததாகச் சொல்ல முடியாது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தாகாததால் பசிபிக் பெருங்கடலை ஒட்டிய 12 நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உடன்பாடு முழுமை பெறாமல் தேக்கமடைந்திருக்கிறது. ஜப்பானின் பகுதிகளான செங்ககூ மற்றும் டையோயு தீவுகளை, சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இந்தப் பிரச்னையில் அமெரிக்காவின் முழு ஆதரவும் ஜப்பானுக்கு உண்டு என்று கூட்டறிக்கை மூலம் இந்தத் தீவுகளைப் பாதுகாப்பதில் ஜப்பானுக்குத் துணை நிற்பதாக அறிவித்திருக்கிறார் அதிபர் ஒபாமா.
இதுவரை தனது அண்டை நாடுகளுடனான சீனாவின் எல்லைப் பிரச்னைகளில் கருத்துத் தெரிவிக்காமல் இருந்த அமெரிக்கா, முதல் முறையாக ஜப்பானுக்கு ஆதரவாக செங்ககூ, டையோயு தீவுகள் பிரச்னையில் கருத்துத் தெரிவித்திருப்பது சீனாவை கோபப்படுத்தக் கூடும். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே இந்தப் பிரச்னையால் போர் மூளுமேயானால், தனது பொருளாதார நிர்பந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஜப்பானை அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்குமா என்று ஜப்பானியர்களுக்கேகூட சந்தேகம் உண்டு. ஆனாலும், கூட்டறிக்கை வெளியாகி இருக்கிறது. ஜப்பானுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது.
ஆசியாவை முன்னிலைப்படுத்தும் அமெரிக்காவின் திட்டம் நிறைவேறாமல் இருப்பதற்கு பல தடைகள் காரணமாக இருந்தன. முதலில், அமெரிக்கா எதிர்கொண்ட பொருளாதாரத் தேக்கமும் பின்னடைவும். அடுத்தபடியாக, லிபியா, சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளும் உக்ரைன் நிகழ்வுகளும் ஆசியா பற்றிய அமெரிக்காவின் திட்டங்களிலிருந்து கவனத்தை திசை திருப்பின. அதனால், அமெரிக்க அதிபர் ஆசியாவுக்கு மேற்கொள்ள இருந்த பல அரசுமுறைப் பயணங்கள் ரத்தாகின.
இதுவரை ஐரோப்பாவையும், மத்திய ஆசியாவையும் மட்டுமே குறிவைத்து இயங்கிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இனி கிழக்காசியாவை நோக்கியும் திரும்பக்கூடும் என்கிற தோற்றத்தை அமெரிக்க அதிபரின் ஆசிய விஜயம் ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, உறுதியான முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. "இலக்கு ஆசியா' இன்றும் இலக்காகவே தொடர்கிறது.
அதிபர் ஒபாமாவின் ஆசிய விஜயம், அமெரிக்காவின் பார்வை ஆசியாவை நோக்கித் திரும்பி இருப்பதாலா இல்லையேல் சீனாவின் அசுர வளர்ச்சிக்குக் கடிவாளம் போட வேண்டும் என்பதற்காகவா? இரண்டும்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.