பயமுறுத்தும் "எல் நினோ'!

பசிபிக் பெருங்கடலில் "எல் நினோ' உருவாகி வருகிறது என்பதும் அதன் தாக்கம் இந்தியாவை பாதிக்கும் என்பதும் நம்மைக் கவலைப்பட வைக்கிறது.
Updated on
2 min read

பசிபிக் பெருங்கடலில் "எல் நினோ' உருவாகி வருகிறது என்பதும் அதன் தாக்கம் இந்தியாவை பாதிக்கும் என்பதும் நம்மைக் கவலைப்பட வைக்கிறது. பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடலுக்குள்ளே ஏற்படும் மாற்றங்கள் தெற்காசியாவில் பருவ மாற்றங்களைத் தீர்மானிக்கும் என்பது புவியியல் வல்லுநர்களுக்கும், வானிலை ஆய்வாளர்களுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.

பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகைகளை ஒட்டிய பகுதிகளின் ஆழ்கடலில், கீழ்மட்டத்தில் உள்ள நீரின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இப்படி வெப்பம் அதிகரித்து மேல் மட்டத்திலும் நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது ஏற்படுவதுதான் "எல் நினோ' விளைவு. "எல் நினோ' உருவாகும்போது, அது சூல் கொண்ட மேகம் உருவாகாமல் செய்து விடுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம், "எல் நினோ' விளைவால் இந்தியாவின் பருவமழை 60% பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. கடந்த 2002, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் பருவமழை பொய்த்து இந்தியாவின் பல பகுதிகளில் வறட்சி நிலவியதற்கு "எல் நினோ'தான் காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் வல்லுநர்கள். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கருத்துப்படி பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிடக் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு 33% இருக்கிறது. மொத்த மழையின் அளவு 90%க்கும் குறைவானாலே, பல பகுதிகளில் வறட்சி நிலை ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் வானிலை வல்லுநர்கள்.

"எல் நினோ' உருவாகும்போதெல்லாம் இந்தியா வறட்சியை சந்தித்தது என்றோ, பருவமழை முற்றிலுமாகப் பொய்த்து விட்டது என்றோ சொல்லிவிட முடியாது. கடந்த 1880க்கும் 2005க்கும் இடைப்பட்ட காலத்தில் 43% சந்தர்ப்பங்களில் மட்டுமே "எல் நினோ'வால் நமது பருவமழை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

வானிலை ஆய்வாளர்கள் ஒரேயடியாக பயமுறுத்தாமல் சில ஆறுதல் வார்த்தைகளையும் கூறுகிறார்கள். இந்தியப் பெருங்கடலில் சாதகமான தட்பவெப்ப நிலை தோன்றுமானால், அது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் "எல் நினோ' விளைவுகளைத் தடுக்கக்கூடும் என்கிறார்கள். 1997இல் கடுமையான "எல் நினோ' உருவானபோது, இந்தியாவில் சராசரிக்கும் அதிகமான பருவமழை பொழிந்ததைச் சுட்டிக் காட்டும் அதே வேளையில், அதுபோன்ற சாதகமான சூழல் எதுவும் இப்போதைக்கு இந்தியப் பெருங்கடலில் இல்லை என்பதையும் தெரிவிக்கிறார்கள்.

இந்தியா போன்ற வானம் பார்த்த விவசாய பூமியில் பருவ மழையின் தொடக்கமும் முடிவும்கூட மிகவும் முக்கியம். மழை நன்றாகவே இருந்தாலும் பருவம் தவறாமல் பொழிவதும், அதிகமாகவோ, குறைவாகவோ பெய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். குறைவான பருவமழை என்பது குறுவை சாகுபடியை மட்டுமல்ல, மண்ணில் போதுமான நீர்ப்பிடிப்பு இல்லாமல் போவதால் சம்பா சாகுபடியையும் பாதிக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம்மிடம் இருக்கும் 48 மில்லியன் டன் உணவு தானியக் கையிருப்பு, தேவையைவிட இரண்டு மடங்கு என்பது ஆறுதலளிக்கும் செய்தி. உணவுதானிய விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்தால், கையிருப்பை சந்தைக்குத் திருப்பிவிட்டு சமாளித்து விடலாம். அதுமட்டுமல்ல, அரிசி, கோதுமை போன்றவை அதிகமாக விளையும் வட மாநிலங்களில், கங்கையெனும் வற்றாத ஜீவநதி பாய்வதால் போதுமான அளவு பாசன வசதி பெற்றிருக்கிறது. அதனால், தானிய விளைச்சலில் அதிக பாதிப்பு இருக்க வழியில்லை.

பருவமழை குறைந்தால் காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் விளைச்சல்தான் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். இப்போதே நமது சமையல் எண்ணெய் பயன்பாட்டில் 55% இறக்குமதி செய்கிறோம். தென்கிழக்கு ஆசியா "எல் நினோ'வால் பாதிக்கப்பட்டால், நாம் இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கான அன்னியச் செலாவணி கடுமையாக அதிகரிக்கும். கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, அடுத்து பதவி ஏற்கப்போகும் அரசு எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது!

வட மாநிலங்களில் இருப்பது போன்ற பாசன வசதிகளும், முறைப்படுத்தப்பட்ட விநியோகமும் இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் ஏன் உறுதிப்படுத்தப்படக் கூடாது என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். இந்தியாவில் 45% விவசாய நிலங்கள் மட்டும்தான் பாசன வசதி பெறுகின்றன. நாம் பருவ மழையை மட்டுமே நம்புவதை விட்டு, நம்மிடமுள்ள நீர்வளத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற இயற்கை இடர்களிலிருந்து தப்ப முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com