தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

போதை வரும் பாதை!

வடகிழக்கு எல்லையில் சீனா, அதன் எல்லையை ஒட்டியுள்ள அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களைக் கபளீகரம் செய்யக் காத்திருப்பது ஒருபுறம் இருக்கட்டும். நமது வடமேற்கு எல்லையில், அதாவது காஷ்மீருக்கும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரத்தின் பகுதிகளுக்குமான எல்லையில் நிலைமை மிகவும் மோசமாகவே

Updated On :12 மே 2014, 8:52 pm

வடகிழக்கு எல்லையில் சீனா, அதன் எல்லையை ஒட்டியுள்ள அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களைக் கபளீகரம் செய்யக் காத்திருப்பது ஒருபுறம் இருக்கட்டும். நமது வடமேற்கு எல்லையில், அதாவது காஷ்மீருக்கும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரத்தின் பகுதிகளுக்குமான எல்லையில் நிலைமை மிகவும் மோசமாகவே இருக்கிறது. இரண்டு பகுதிகளிலும் வாழும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இடையே நெருக்கமும், தொடர்பும் அற்றுப் போய்விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் இந்தியா வலிய முயன்று ஏற்படுத்திய போக்குவரத்துத் தொடர்பு இப்போது நமக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் மிகவும் வேதனையளிக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இந்திய-பாகிஸ்தான் எல்லையிலுள்ள சலாமாபாத் சோதனைச் சாவடியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாதாம் பருப்பு ஏற்றி வந்த லாரி ஒன்று பிடிபட்டது. காஷ்மீரிலுள்ள பந்திப்பூரில் பாதாம் மண்டி வைத்திருக்கும் ஷெளகத் ஹபீப் என்பவர் பாரமுல்லாவிலுள்ள தாரிக் ஷேக் என்பவருக்காக பாகிஸ்தான் முசாபராபாத் அல் பஜீர் டிரேடர்ஸிடமிருந்து பாதாம் பருப்பு இறக்குமதி செய்து வருகிறார். அந்த லாரியைச் சோதனையிட்டபோது, பாதாம் பருப்பு மூட்டைகளுக்கு நடுவே 114 கிலோ கஞ்சா கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போதுதான் இப்படித் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கஞ்சா கடத்தப்படுகிறது என்பதும், காஷ்மீரிலிருந்து பஞ்சாபுக்கும் அங்கிருந்து தில்லி, மும்பை, சென்னை, கொழும்பு போன்ற இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது என்பதும் தெரியவந்தது. அந்த ஒரு லாரியில் கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு மட்டுமே ரூ.100 கோடி என்றால், தினந்தோறும் குறைந்தது 60 முதல் 100 லாரிகள் எல்லையைக் கடக்கும்போது எந்த அளவுக்குக் கஞ்சா கடத்தல் நடைபெறக் கூடும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

கஞ்சா கடத்தி வந்த லாரியின் ஓட்டுநர் முகம்மது ஷபீஸ் அவானைக் கைது செய்து விசாரித்தபோது, மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தான் கடத்தி வந்த கஞ்சாவுக்கும் லாரியில் இறக்குமதி செய்யப்பட்ட பாதாம் பருப்பு மூட்டைகளுக்கும் தொடர்பில்லை என்பது ஓட்டுநர் முகம்மது ஷபீஸ் அவானின் வாக்குமூலம். ஹிஸ்புல் முஜாஹிதினைச் சேர்ந்த தீவிரவாதி ஆசாத் என்கிற ஷபாஸ், ராவல்பிண்டியில் ஷா டிரேடிங் கம்பெனி என்கிற நிறுவனத்தை நடத்துவதாகவும், அவர் தன்னிடம் இந்தக் கஞ்சாவை இந்தியாவுக்குக் கடத்திச் செல்லும்படியும், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசிலுள்ள பெயர் தெரியாத நபர் ஒருவர் சில அடையாளங்களைத் தெரிவித்து பெற்றுக் கொள்வார் என்றும் பணித்ததாக ஓட்டுநர் கூறுகிறார். அந்த மர்ம நபரை காவல் துறையினர் வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லை கடந்த வியாபார மற்றும் போக்குவரத்துத் தொடர்பை இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்டன. அதன் விளைவாக, ஜம்மு}காஷ்மீர் மாநிலம் உரி மாவட்டத்திலுள்ள சலாமாபாத் மற்றும் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள கச்சன்தாபாக்  ஆகிய இரண்டு இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பேருந்து மற்றும் லாரி போக்குவரத்து தொடங்கப்பட்டன.

கஞ்சா பிடிக்கப்பட்டு லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதும் பாகிஸ்தானிய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதியைக் கைது செய்து விசாரணையை முடுக்கி விடும் என்றுதானே எதிர்பார்ப்போம். பாகிஸ்தானிய ஓட்டுநர் முகம்மது ஷபீஸ் அவானைத் தங்களிடம் ஒப்படைத்தால்தான் விசாரணை செய்ய முடியும் என்று பிடிவாதம் பிடிக்கிறது. பிரச்னை தீர்ந்தபாடில்லை. பொதுமக்களுக்குச் சிரமம் கூடாது என்பதால் பேருந்து போக்குவரத்தைத் தொடர பாகிஸ்தான் ஒப்புக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இதுவரை தீவிரவாதம் மட்டும்தான் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் கடத்தப்படுகிறது என்று நினைத்தோம். இப்போதுதான் தெரிகிறது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களும் கடத்தப்படுகின்றன என்பது. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் "பொட்டலம்' என்கிற பெயரில் கஞ்சா பெட்டிக்கடைகளில்கூட விநியோகம் செய்யப்படுவதன் பின்னணி இதுதானோ?

இந்தியாவிற்குள் நுழையும் அத்தனை சரக்கு லாரிகளையும், பயணிகளையும் தொழில்நுட்ப உதவியுடன் முழுமையாக "ஸ்கேன்' செய்து கடத்தல் முற்றிலுமாகத் தடுக்கப்படுவதும், ஜம்மு-காஷ்மீரிலும், பஞ்சாபிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் உள்ள கஞ்சா விநியோக வலைப் பின்னலைக் களையெடுத்து அழிப்பதும் மட்டுமேதான் இதற்குத் தீர்வாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.