வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் செல்லவும், ஊழலற்ற திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் சூளுரைத்திருக்கிறார் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் நரேந்திர மோடி. நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர் அமைக்க இருக்கும் அமைச்சரவை சகாக்களும் அதற்கு ஒத்துழைப்புத் தந்தால்தான் அது சாத்தியமாகும்.
மேலதிகமாக இளைஞர் சமுதாயத்தின் வாக்குகளைப் பெற்று நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கும் இந்த வேளையில், 16ஆவது மக்களவையின் உறுப்பினர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதுதான் வேதனை. இந்திய மக்கள்தொகையில் 65% மக்கள் 35 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். ஆனால், 16ஆவது மக்களவை உறுப்பினர்களில் வெறும் 39% பேர்தான் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். அமைச்சரவை எப்படி இருக்கப் போகிறது?
கடந்த மக்களவையில் 79% பேர் பட்டதாரிகள் என்றால் 16ஆவது மக்களவையில் 75% பேர்தான் பட்டதாரிகள். பத்தாம் வகுப்பு முடித்தவர்களின் விகிதமும் 7% குறைந்து வெறும் 10% இருக்கிறது. படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதானே, மக்களவையின் பார்வை விசாலமடையும்?
எல்லாவற்றையும்விடக் கவலையளிக்கும் புள்ளிவிவரம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பின்னணி பற்றியதுதான். 14ஆவது மக்களவையில் 24 விழுக்காடாகவும், 15ஆவது மக்களவையில் 30 விழுக்காடாகவும் இருந்த குற்றப்பின்னணி உடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை, இப்போதைய 16ஆவது மக்களவையில் 34 விழுக்காடாக அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தலுக்குத் தேர்தல் குற்றப்பின்னணி உடையவர்களின் எண்ணிக்கை இதுபோல அதிகரிக்குமானால், எப்படி நல்லாட்சி அமையும். இது எங்கேபோய் முடியும்?
பாரதிய ஜனதா கட்சியில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின்மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஐந்தில் ஒரு பகுதியினர்மீது கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியோ, இதர கட்சிகளோ இதற்கு விதிவிலக்கல்ல. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் நான்கு எம்.பி.க்களும், சிவசேனாவின் 18 எம்.பி.க்களில் 15 பேரும், தேசியவாத காங்கிரஸின் 5 எம்.பி.க்களில் 4 பேரும் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள்.
கோடீஸ்வரர்களாக இருப்பதும் அவர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதும் தவறில்லை. ஆனால், பெருவாரியான உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தால், அந்த அவையில் சாமானியனின், அடித்தட்டு வர்க்கத்தினரின், அன்றாடம் கஞ்சிக்கு வழியில்லாமல் தெருவோரம் தஞ்சமடைந்திருக்கும் பராரியான ஏழைகளின் பிரச்னைகள் எப்படி முன்னுரிமை பெறும்? தாகத்திற்குக் "கோக்' குடிப்பவர்கள், பசிக்குத் கேப்பைக் கூழ் குடிப்பவர்களின் பிரச்னைகள் பற்றி எப்படி கவலைப்படுவார்கள்?
16ஆவது மக்களவை கோடீஸ்வரர்களின் அவையாக அல்லவா காட்சி அளிக்கிறது. உறுப்பினர்களில் 82% பேர் கோடீஸ்வரர்கள். 2004இல் 30% பேரும், 2009இல் 58% பேரும் கோடீஸ்வரர்களாக இருந்ததுபோய், இப்போது 82% பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.16 கோடி. பா.ஜ.க. உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ.11 கோடி.
குண்டூரிலிருந்து தெலுங்கு தேசம் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெயதேவ் கல்லா என்பவர்தான் 16ஆவது மக்களவையிலேயே மிகவும் பணக்காரர். இவரது சொத்து மதிப்பு ரூ.683 கோடி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பேகூட கோடியை எட்டிவிடும் போலிருக்கிறது - ரூ.79 லட்சம்!
கோடீஸ்வரர்களும், தொழிலதிபர்களும், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் அதிக அளவில் இருக்கும்போது எந்த அளவுக்கு சாமானியர்களுக்குச் சாதகமாகவும், ஆதரவாகவும் அந்த ஆட்சி செயல்படும் என்கிற நியாயமான ஐயப்பாடும், பயமும் ஏற்படுகிறது. கோடீஸ்வரர்களுக்கும், கிரிமினல் பின்னணி உடையவர்களுக்கும்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொன்னால், அதற்குக் காரணம் ஏமாளி வாக்காளர்கள்தானே? இப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, நல்லாட்சி அமையவில்லை என்று ஓலமிடுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது?
அதிக அளவில் இளைஞர்களும், விழிப்புணர்வுடன் வாக்காளர்களும் நல்லாட்சி அமைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், நரேந்திர மோடி என்கிற தனிமனிதன்மீது அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். இத்தனை கோடீஸ்வரர்களையும், கிரிமினல் பின்னணியாளர்களையும் மீறி அவர் செயல்பட்டாக வேண்டும். இறைவன் அருள்புரிவாராக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

