விழித்துக் கொள்வோம்!

கேரள வேளாண்மைத் துறையின் "பண்ணை மீட்புத் திட்டம் 676'க்கு காரணம் வெறும் தற்சார்பு மட்டுமல்ல. நாளையே முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னை தீவிரமடைந்தாலோ, கோவை சிறுவாணி தண்ணீர் பிரச்னை தீவிரமடைந்தாலோ தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்களால் காய்கறி, பால், கறிக்கோழி வரத்து முற்றிலும் தடைபடும். மாநிலத்தில் காய்கறித் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும். ஒவ்வொரு முறையும் நிலைமை சீரடைய இரண்டொரு வாரங்கள் ஆகலாம். ஆகவேதான் ...
Updated on
2 min read

கேரள மாநிலம், காய்கறி, பால் உற்பத்தியில் 2016ஆம் ஆண்டுக்குள் தற்சார்பு எய்தும் நோக்கத்துடன் அம்மாநில வேளாண்துறை சார்பில் "பண்ணை மீட்புத் திட்டம்-676' வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி வேளாண் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும், ரசாயன உரம் இல்லாத இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.

கறவை மாடுகள் எண்ணிக்கையை மேலும் 2 லட்சம் அதிகரிப்பது, இதற்காக 44 லட்சம் டன்  தீவன உற்பத்தி செய்வது, 3,600 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவலாக காய்கறி உற்பத்தி செய்வது போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

கேரள மாநிலத்தின் 90 விழுக்காடு காய்கறித் தேவை, கறிக்கோழி, முட்டை ஆகியவை அண்டை மாநிலங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. நாள்தோறும் கத்தரிக்காய் 10,000 டன், தக்காளி 30,000 டன், உருளை, கேரட், முட்டைகோஸ் தலா 25,000 டன் - இவை பல இடங்களிலிருந்தும் கேரள மாநிலத்தின் பல சந்தைகளுக்கு வந்து சேர்கின்றன. இவற்றில் உறுதியாக 75 விழுக்காடு தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து அனுப்பப்படுகிறது.

அண்டை மாநிலங்களிலிருந்து காய்கறி, பால் ஆகியவற்றை தருவிப்பதில் பாதியைக் குறைத்துக்கொள்ளும் அளவுக்கு கேரளம் தற்சார்பு நிலை எய்தினாலும், அதனால் பாதிப்பை உணரப் போகிறவர்கள் தமிழகத்தில் மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவிவசாயிகள்தான்.

கேரள மாநிலத்தில் காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கும் திட்டத்தை ஏற்கெனவே அம்மாநில அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

அழுகும் காய்கறிகளை குளிர்பதனக் கிடங்கில் விவசாயிகள் வைத்திருந்தால் அவர்களால் விலை வீழ்ச்சியைத் தடுத்து, உற்பத்திக்கான விலையை நட்டமில்லாமல் நிர்ணயித்து விற்க முடியும். ஆனால் இடைத்தரகர்களும், வியாபாரிகளும் குளிர்பதனக் கிடங்கை வைத்திருந்தால், அவர்கள் குறைந்த விலையில் காய்கறிகளை அதிகம் வாங்கி, குளிர்பதனக் கிடங்கில் சேமித்து வைப்பார்கள். அதனால் விவசாயி தன் காய்கறிக்கான விலையை உயர்த்த முடியாது.

இந்த நிலையே ஒரு தர்மசங்கடம் என்றால் தற்போது கேரள வேளாண்துறை அறிவித்துள்ள "பண்ணை மீட்புத் திட்டம் 676' செயல்படுத்தப்படுமானால், நிச்சயமாக நமது காய்கறிகளில் பாதி தமிழ்நாட்டிலேயே தங்கிவிடும். இந்த நிலைமையை இப்போதே கருத்தில் கொண்டு, வெளிமாநிலங்களில் சந்தையை பெருக்குவதற்கான ஏற்பாடுகளை அவர்களுக்கு இணையாகத் தமிழகம் செய்தாக வேண்டும்.

கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்திலிருந்து காய்கறி அனுப்பப்படும் மாநிலங்கள் கர்நாடகமும், மகாராஷ்டிரமும்தான். இப்பகுதிகளில் தமிழக காய்கறிச் சந்தையை மேம்படுத்துவது, தமிழகத்தில் இயற்கை வேளாண் முறைக்கு காய்கறிகளை மாற்றி, அவற்றை கூடுதல் விலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது போன்ற மதிப்பூட்டு முறைகளாலும் தமிழக விவசாயிகளை பாதிப்பிலிருந்து காப்பாற்ற இயலும்.

கேரளத்துக்கான பூக்கள் தேவையின் பெரும்பகுதி வெளிமாநிலங்களிலிருந்துதான் ஈடுசெய்யப்படுகிறது. தென் கேரளத்தின் பூக்கள் தேவையை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையும், வட கேரளத்தின் தேவையை கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பூச்சந்தையும் ஈடுசெய்கின்றன. இத்திட்டத்தில் கேரளம் தோட்டக்கலை சாகுபடி பரப்பை 69,000 ஹெக்டேர் கூடுதலாக்கவுள்ளது என்பதையும் நாம் கருதிப்பார்க்க வேண்டியுள்ளது.

இத்தகைய அச்சம் தேவையற்றது என்றும், கேரளத்தின் காய்கறி, பால், முட்டை, கறிக்கோழி தேவையை தமிழ்நாடு மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்றும் இத்துறை சார்ந்தவர்கள் வாதிடக்கூடும்.

கேரள வேளாண்மைத் துறையின் "பண்ணை மீட்புத் திட்டம் 676'க்கு காரணம் வெறும் தற்சார்பு மட்டுமல்ல. நாளையே முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னை தீவிரமடைந்தாலோ, கோவை சிறுவாணி தண்ணீர் பிரச்னை தீவிரமடைந்தாலோ தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்களால் காய்கறி, பால், கறிக்கோழி வரத்து முற்றிலும் தடைபடும். மாநிலத்தில் காய்கறித் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும். ஒவ்வொரு முறையும் நிலைமை சீரடைய இரண்டொரு வாரங்கள் ஆகலாம். ஆகவேதான் இப்போதே இத்தகைய தற்சார்புக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

காய்கறி, பால், கறிக்கோழி ஆகியவற்றின் விற்பனைக்கு இனி கேரள மாநிலத்தை மட்டுமே நம்பியிருக்காமல், தங்கள் சந்தையை வேறு மாநிலங்களுக்கு திருப்ப வேண்டிய அவசியத்தை சிறுவிவசாயிகள் உணர வேண்டிய நேரம் இது. இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. இதை திட்டமிட்டு செயல்வடிவம் காண்பது நமக்கொன்றும்   கடினம் அல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com