அரசியல் கலவாமல் எழுகின்ற மனிதாபிமானக் குரலும், மத்திய, மாநில அரசுகளின் ஆத்மார்த்தமான முயற்சிகளும் உறுதியான பலனைத் தரும் என்பதன் அடையாளம்தான் தற்போது இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது.
இவர்கள் தூக்கிலிடப்படக் கூடாது என்று சிலரும், தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று சிலரும், இந்தியச் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சிலரும் கோரிக்கைகளை முன்வைத்த வேளையில், இவர்கள் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப் படுவார்கள் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அது நடந்திருக்கிறது. இதற்காக, குரல் கொடுத்தோருக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நன்றி சொல்வதோடு நின்றுவிட முடியாது. இலங்கை அதிபர் ராஜபட்ச விரைவில் நடக்க இருக்கும் தேர்தலில் இதை தனக்குச் சாதமாக மாற்ற முனைவார் என்றாலும்கூட, இலங்கை அரசுக்கும் நாம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.
பாகிஸ்தான் சிறையில் அடைப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கின் மரண தண்டனை ரத்துக்காக இந்திய அரசு ராஜீய உறவுகளை நம்பிப் போராடியும், அவரை மீட்க முடியவில்லை. கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சடலமாகத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வர முடிந்தது.
இருப்பினும், அமெரிக்காவில் இந்தியத் தூதரக அலுவலர் தேவயானி கோபர்கடே கைது செய்யப்பட்டபோது இந்தியா மிகக் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டு அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்தது. தற்போது இலங்கையுடன் மென்மையாகவும், அதேசமயம் உறுதியாகவும் நடவடிக்கை மேற்கொண்டு 5 தமிழக மீனவர்களை அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு கொடுத்த அழுத்தமும், மேல்முறையீட்டு வழக்குச் செலவுக்காக உடனடியாக ரூ.20லட்சம் வழங்கிய வேகமும் பாராட்டுக்குரியவை.
இந்த 5 பேருக்காக குரல் எழுப்பிய அரசியல் கட்சிகள், தமிழக அமைப்புகள் அனைத்தும் இவர்களைத் தூக்கிலிடக் கூடாது என்ற கருத்தில் ஒருமித்து நின்றதும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது.
இதே அணுகுமுறையுடன் நாம் இலங்கை அரசிடம் கேட்டுப் பெற வேண்டியவை- கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையும், இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்த படகுகள் மீட்பும். இவையும் சாத்தியமாகும், சந்தேகமில்லை. இப்போதுள்ள இணக்கமான சூழலைப் பயன்படுத்தி, தமிழக மீனவர்களின் துயர் நீக்கி, வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முடியும்.
அடுத்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கச்சத்தீவு விவகாரம், பாக். நீரிணையில் மீன்பிடி எல்லை மற்றும் உரிமைகளைத் தீர்மானித்தல் போன்ற இந்தியாவின், குறிப்பாக தமிழரின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டாகும் என்பதற்கான அறிகுறி தெரிகிறது.
இலங்கையால் விடுவிக்கப்பட்டவர்களை திருச்சி அழைத்து வராமல், நேரடியாக தில்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றதன் மூலம், இந்த வெற்றியை பாஜக தனதாக்கிக்கொள்ள விழைகிறது என்று சொல்வது அவசரக் கருத்து. இரு நாடுகளின் வெளியுறவுத் துறை சார்ந்த விவகாரங்களை முடித்து வைக்கும் நடைமுறைக்காகவே அவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் அரசியல் இருப்பதாகத் தோன்றவில்லை.
இந்த விவகாரத்தைப் பொருத்தவரையில், தமிழக பாஜகவும்கூட இதை மோடியின் தனிப்பட்ட வெற்றியாகக் கூறிக்கொள்வது, இந்த விஷயத்தை அரசியலாக்கி, தற்போது மீனவர் பிரச்னையில் ஒருமித்துக் குரல் கொடுக்கும் கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய நிலை உருவானால், வலுவிழந்த குரலுக்கு இலங்கை செவிசாய்க்காது என்பது மட்டுமல்ல, பிரதமரின் இலங்கைப் பயணம் விரும்பிய பலன் தராமல் போகவும் கூடும். ஆகவே, தமிழக மீனவர் விவகாரத்தை மனிதாபிமான விஷயமாகவும், அரசியல் கலவாத ராஜீய நடவடிக்கையாகவும் பார்ப்பதே நல்லது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக இன்னமும் மூன்று இலங்கைத் தமிழர்கள் இந்தியச் சிறைகளில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாத நிலையில், இலங்கை அரசு தனது சிறையில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவித்து, முழுமையாக விடுதலை செய்திருப்பதன் மூலம் புதியதொரு வெளிச்சத்தை இலங்கை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.