இப்படியொரு நிலைமை வேறு யாருக்காவது வந்திருந்தால், அடுத்த விநாடியே பதவி விலகி இருப்பார்கள். ஆனால், மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குநர் ரஞ்சித் சின்ஹா உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமானமாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதிலிருந்து, எந்த அளவுக்கு அவரது மனசாட்சி மரத்துப் போயிருக்கிறது என்பது தெரிகிறது.
இதுவரை எந்தவோர் உயர் அதிகாரிக்கு எதிராகவும் உச்சநீதிமன்றம் இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்ததில்லை. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை இருப்பதாகக் கருதுவதால் அவர் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணையிலோ, வழக்கிலோ தலையிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது, ஒட்டுமொத்த மத்தியப் புலன் விசாரணைத் துறையின் மீதே சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னால், மத்தியப் புலன் விசாரணைப் பிரிவின் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் வீட்டுக்கு வந்துபோன நபர்களின் பெயர்கள் அடங்கிய பதிவேடு, உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்தப் பதிவேட்டில் 2ஜி வழக்கு மட்டுமல்லாமல், மத்தியப் புலன் விசாரணைத் துறையின் விசாரணை வளையத்தில் இருக்கும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை அவரது இல்லத்தில் சந்தித்திருப்பது பதிவாகி இருக்கிறது. விசாரணை வளையத்தில் இருப்பவர்கள் அதிகாரியை அலுவலகத்தில் சந்தித்தால் அதில் நியாயம் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் இயக்குநரை அவரது இல்லத்தில் சந்தித்தால் அதில் நிச்சயமாக ஏதோ தவறு இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதிவேட்டில் காணப்படும் நபர்களை இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தனது வீட்டில் தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா இல்லையா என்கிற கேள்விக்கு அவர் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. முதலில் பதிவேடு போலி என்று தெரிவித்தார். பிறகு, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் சிலரை தான் சந்தித்தது உண்மை என்றும், தனக்குக் கீழே பணிபுரியும் அதிகாரிகளால் விசாரிக்கப்படுபவர்கள் தங்கள் பக்க நியாயங்களை எடுத்துரைக்க மேலதிகாரியான தன்னைத் தனிப்பட்ட முறையில் வந்து சந்திப்பதில் என்ன தவறு என்றும் வாதம் செய்தார். அதன் உச்சகட்டமாக, பதிவேட்டைத் திருடியது தனது தனிமனித சுதந்திரத்தையும், தனி உரிமையையும் பாதிப்பதாகவும், அதுபற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தடை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை எழுப்பினார்.
மத்தியப் புலனாய்வுத் துறையின் மீதான நம்பிக்கையைப் பாதுகாக்கவும், அதன் இயக்குநர் என்கிற பதவியின் மரியாதை குலைந்துவிடாமல் இருக்கவும், இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை மற்றும் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதை உச்சநீதிமன்றம் தடை செய்திருக்கிறது. இந்த அளவுக்குப் போய்விட்ட பிறகு, உச்சநீதிமன்றம் அவரைப் பதவி விலகச் சொல்லாமல், ஒதுங்கி நிற்கச் சொல்லி இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது!
ரஞ்சித் சின்ஹா இயக்குநராகப் பொறுப்பேற்ற பிறகு, 2ஜி அலைக்கற்றை வழக்கில் மட்டுமல்ல, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு வழக்கிலும், மத்தியப் புலன் விசாரணைத் துறையின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தால் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் ஆளாகி இருக்கின்றன. நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும் வழக்குகள் தொடர்பான கோப்புகளை பிரதமர் அலுவலகத்துடனும், சட்ட அமைச்சகத்துடனும் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருக்கின்றன.
இத்தனைக்குப் பிறகும்கூட, புலனாய்வுத் துறையின் மீதான நம்பிக்கை குலைந்துவிடாமல் இருப்பதற்காக, இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை விலகி இருக்கச் சொல்வது என்பது, நேரடியாகத் தொடர்பு கூடாது என்பதாக மட்டும்தான் இருக்க முடியும். இயக்குநர் என்கிற தலைமைப் பொறுப்பில் அவர் தொடரும்போது, அந்த வழக்கைக் கையாளும் அதிகாரிகள் அவரது ஆலோசனையும், வழிகாட்டுதலும், கட்டளையும் இல்லாமல் செயல்படுவது என்பது எப்படிச் சாத்தியம்? இதை ஏன் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை?
உச்சநீதிமன்றம் தனிப்பட்ட முறையில் தனது செயல்பாட்டின்மீது எந்தவிதக் குற்றச்சாட்டும் எழுப்பவில்லை என்று இயக்குநர் சின்ஹா கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் பதவி விலகாமல் சின்ஹா பதவியில் தொடர்வதும், உச்சநீதிமன்றம் அதை அனுமதித்திருப்பதும் மத்தியப் புலனாய்வுத் துறையின் செயல்பாடுகளைக் கேள்விக்குறியாக்குவது மட்டுமல்லாமல், உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறையையும் விமர்சனத்திற்கு உள்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

