ஆங்கிலேயர்கள் எதிலுமே வித்தியாசமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். பிரிந்து போவதா, சேர்ந்திருப்பதா என்பதைக்கூட, போராட்டம் நடத்தாமல், வன்முறையில் ஈடுபடாமல், ஒருவரை ஒருவர் வசை பாடாமல், உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ இல்லாமல், வாக்கெடுப்பின் மூலம் கூடத் தீர்மானிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தி இருக்கிறார்கள் பிரிட்டிஷார்!
பரவலாக நாம் இங்கிலாந்து என்றும் பிரிட்டன் என்றும் கூறுகிறோமே தவிர, அது முழுமையாக அந்தத் தேசத்தைக் குறிப்பதாக ஆகாது. அந்தத் தேசத்தின் முழுமையான பெயர் அகண்ட பிரிட்டனும், வடக்கு அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய தேசம் (யுனைட்டட் கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன் அண்ட் அயர்லாந்த்) என்பதுதான். இதில் அகண்ட பிரிட்டன் என்று சொல்லப்படும் கிரேட் பிரிட்டனும் ஒரு நாடல்ல. லண்டனைத் தலைநகராகக் கொண்ட இங்கிலாந்தும், எடின்பர்கைத் தலைநகராகக் கொண்ட ஸ்காட்லாந்தும், காட்ரிப்பைத் தலைநகராகக் கொண்ட வேல்ஸூம் இணைந்ததுதான் ஐக்கிய பிரிட்டன்.
இங்கிலாந்தும் சரி, ஒரு காலத்தில் பல குறுகிய மன்னர்களின் ஆளுகையில் இருந்த ஒன்பது பகுதிகள் இணைந்த நாடாகத்தான் முதலில் இருந்தது. கி.பி.1707-இல்தான் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய மூன்றும் இணைந்து அகண்ட பிரிட்டன் உருவானது. அதுவரை, ஸ்காட்லாந்தையும், இங்கிலாந்தையும் தனித்தனி அரசர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.1801-இல்தான் அயர்லாந்து இணைந்தது. கி.பி.1921 முதல் வடக்கு அயர்லாந்து
மட்டுமே, "யு.கே.' என்று பரவலாக அழைக்கப்படும் ஐக்கிய பிரிட்டன் தேசத்தின் பகுதியாகத் தொடர்கிறது.
எதற்காக இந்தப் பழைய சரித்திரம் என்றால், இந்தப் பின்னணியின் புரிதலுடன்தான் இப்போது அகண்ட பிரிட்டனிலிருந்து பிரிய வேண்டாம் என்று ஸ்காட்லாந்து மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பை அணுக வேண்டும். இந்தியா உள்ளிட்ட தனது காலனிய நாடுகளை எல்லாம், பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் துண்டாடிய பிரிட்டிஷார், தங்களுக்குள் ஏற்பட்ட மனக் கசப்புகளை எப்படி ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து, வாக்கெடுப்பின் மூலம் தீர்வு கண்டிருக்கிறார்கள் என்பது, பல மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியா போன்ற தேசங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
இங்கிலாந்து நாட்டின் பல சரித்திரப் பெருமைகளும், புகழும் ஸ்காட்லாந்து நாட்டவரால்தான் பெறப்பட்டிருக்கிறது. சுதந்திரச் சிந்தனையும், அதேநேரத்தில் விடா முயற்சியும் ஸ்காட்லாந்துக்காரர்களின் தனித்தன்மையாகவே இருந்து வந்திருக்கிறது. 650 உறுப்பினர்களைக் கொண்ட வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்றத்தில், ஸ்காட்லாந்துக்கு 59 இடங்கள்தான் உள்ளன. அட்லாண்டிக் சமுத்திரம், ஐரிஷ் கடல் ஆகியவற்றால் சூழப்பட்டு, 790 தீவுகளை உள்ளடக்கிய, தெற்கில் மட்டுமே இங்கிலாந்துடன் தரைவழித் தொடர்புடைய ஸ்காட்லாந்து, பிரிந்து செல்வது என்று முடிவெடுத்திருந்தால், அதன் விளைவுகள் பிரிட்டனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பாவையும், ஏன், உலகத்தையே பாதித்திருக்கக்கூடும். வேண்டாம் பிரிவினை என்று மக்கள் வாக்களித்திருப்பது ஒருவகையில் இங்கிலாந்துப் பிரதமரை நிம்மதிப் பெருமூச்சுவிட வழிகோலியிருக்கிறது என்றாலும், இனி வரப்போகும் நாள்கள் அப்படியொன்றும் எளிமையாக இருந்துவிடப் போவதில்லை.
இப்போது இருப்பதைவிட அதிகமான அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய பிரிட்டன் தயாராக வேண்டும். எந்த அளவுக்கு அதிகாரப் பகிர்வு என்பதில் நிச்சயமாகக் கருத்து வேறுபாடு ஏற்படத்தான் செய்யும். பிரிட்டனிலுள்ள மூன்று முக்கியமான கட்சிகளுமே, ஸ்காட்லாந்து பிரிந்து போய்விடாமல் இருப்பதற்கு அதிகாரப் பகிர்தல் அளிப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால், இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து பகுதிகளுக்கும் அதேபோல அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும்.
அதேபோல, "பார்னெட் வழிமுறை' என்று அழைக்கப்படும் பார்னெட் பிரபுவின் அறிக்கைப்படி மத்திய அரசின் நிதிப் பகிர்ந்தளிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், ஸ்காட்லாந்துக்கு ஏனைய பகுதிகளைவிட அதிக நிதிப் பகிர்வு தரப்பட வேண்டும். இது சாத்தியமா என்பது சந்தேகம்தான்.
முன்பு பிரிந்து கிடந்த கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் இணைந்தன. பிறகு, ஐரோப்பிய யூனியன் உருவாகியது. இப்போது, ஸ்காட்லாந்து பிரிந்து போவதில்லை என்று வாக்கெடுப்பு முலம் தீர்ப்பளித்திருக்கிறது. 650 உறுப்பினர்கள் கொண்ட பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 59 உறுப்பினர்களை மட்டுமே உடைய ஸ்காட்லாந்து மக்களின் உணர்வுக்குத் தலைவணங்கி, வாக்கெடுப்பு நடத்தித் தீர்வுகாண முற்பட்ட ஆங்கிலேயர்கள், மக்களாட்சித் தத்துவத்திற்கு மகுடம் சூட்டியிருக்கிறார்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.