விசுவாசமும் நம்பிக்கையும்!

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. சட்டப்பேரவைக் கட்சி ஜெயலலிதா அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பணியாற்றிய ஓ. பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
Updated on
2 min read

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. சட்டப்பேரவைக் கட்சி ஜெயலலிதா அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பணியாற்றிய ஓ. பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இரண்டாவது முறையாக ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கிறார்.

கடந்த 2001 செப்டம்பர் மாதத்தில் டான்சி வழக்குத் தீர்ப்பைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த ஜெயலலிதா பதவி விலக நேர்ந்தபோதும், ஓ. பன்னீர்செல்வம்தான் அடுத்த ஆறு மாதங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்ப முதல்வராக்கப்பட்டார். இந்த முறையும், தனக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோதனையான கட்டத்தில்,

ஓ. பன்னீர்செல்வத்தையே முதல்வராக்க அவர் முடிவெடுத்திருப்பது, அவர் மீது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை இரண்டு கோணங்களில் அணுக வேண்டும். தார்மிக ரீதியாக, உயர் பதவிகளில் இருப்பவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகவும், பொது வாழ்க்கையில் நேர்மையையும், தூய்மையையும் கடைப்பிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் சமம் என்பதும், தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் சொத்துக் குவிப்பு வழக்கின் தார்மிகக் கோணமாக இருக்கும்.

அதே நேரத்தில், இந்த வழக்கின் இறுதி முடிவு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துடன் முடிந்துவிடுவதல்ல. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மேல் முறையீடுகளுக்குப் பிறகுதான், இந்தப் பிரச்னை பற்றிய முடிவான கருத்தைத் தெரிவிக்க முடியும். குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டு, சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டு, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற முனைப்புடன் இந்த சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்கிற ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்களின் வாதம் பொய்யானது என்று தள்ளிவிட முடியாது.

சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பின் தொடர்ச்சியாக ஏற்படக்கூடிய அரசியல் பிரச்னைகள் இன்னொரு கோணம். அடுத்த சில நாள்களிலோ, வாரங்களிலோ ஜெயலலிதா மேல் முறையீட்டில் குற்றத் தீர்ப்பிலிருந்தும் (கன்விக்ஷன்), தண்டனையிலிருந்தும் (சென்டன்ஸ்) தடையுத்தரவு பெற்றுப் பிணையில் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனாலும்கூட, முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில் தேர்தலில் போட்டியிடவோ, முதல்வராகப் பதவி வகிக்கவோ முடியாது என்பதுதான் சட்டப்படியிலான நிலைமை. கட்சித் தலைவராக இருந்து கொண்டு, தனது வழிகாட்டுதலின்படி முதலமைச்சராக அவரால் கைகாட்டப்பட்டிருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தின் மூலம் ஆட்சி நடத்தியாக வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை, எதிர்க்கட்சிகள் என்று சொல்லப்படும் அத்தனை கட்சிகளும் பலவீனமாகக் காட்சி அளிக்கின்றன. அ.தி.மு.க.வின் பலவீனத்தைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் நிலையில் எந்தவொரு கட்சியும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வையும் இணைத்துக் கொண்டு "மெகா' கூட்டணி அமைத்தாலும்கூட, அ.தி.மு.க.விற்குப் பெரிய அளவில் சவாலாக இருக்குமா என்பது சந்தேகம்தான். அரசியல் ரீதியாக சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு ஜெயலலிதாவிற்கோ, அ.தி.மு.க.விற்கோ பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி விடாது என்றுதான் தோன்றுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை, அவர் மீது பரவலாக அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, பெருமளவு கோபத்தையோ, வெறுப்பையோ ஏற்படுத்தி விடவில்லை என்பதுதான் யதார்த்த நிலைமை. போஃபர்ஸ், 2ஜி முறைகேடு, நிலக்கரிச் சுரங்க ஊழல் போன்ற பல லட்சம் கோடி ஊழல்களுக்கு முன்னால், 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு என்பது ஒரு பொருட்டாகவே பொதுமக்கள் பார்வையில் படாததுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு. மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு "தினமணி' நாளிதழின் வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com