அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா கிளம்புவதற்கு முன்னால் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்த "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம், எப்போதோ தொடங்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. 1991-இல் அன்றைய நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு, உலகமயமாக்கல், பொருளாதாரச் சீர்திருத்தம், விதித்தளர்வாக்கம் (லிபரலைசேஷன்) போன்ற தனியார்மயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்டபோதே, இந்தியாவை உலகின் தயாரிப்பு மையமாக மாற்றுவதற்கான வழிமுறைகளுக்கும் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும்.
ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு முதலீடு என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் அதன் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் உண்டு. அன்னிய முதலீடு அதிக அளவில் பெறப்படுவதாலேயே ஒரு தேசத்தின் பொருளாதாரம் மேம்பட்டு விடுவதில்லை. இந்தியாவில் விதித்தளர்வாக்கம் என்பது, ஆரம்ப காலகட்டத்தில், பங்குச் சந்தையிலும், சேவைத் துறைகளிலும் முதலீடுகள் அதிகமாகப் புழங்குவதற்கு பயன்பட்ட அளவுக்கு, உற்பத்தி அதிகரிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் வழிகோலும் தொழில் துறையிலும் செய்யப்படாதது நமக்கு நேர்ந்த மிகப்பெரிய பின்னடைவு.
2004 முதல் 2012 வரை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜி.டி.பி.) ஆண்டுதோறும் சராசரியாக 8.3% என்கிற அளவில் உயர்ந்தபோது, தொழில் அல்லது உற்பத்தித் துறை 9.25% என்கிற அளவில் வளர்ந்து கொண்டிருந்தது. 2012க்குப் பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.6% ஆகக் குறைந்தபோது, உற்பத்தித் துறையின் வளர்ச்சியும் 0.2% ஆக விழுந்தது. தொழில் துறை வளர்ச்சியும், உற்பத்தி அதிகரிப்பும் இல்லாமல் போனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறைவது மட்டுமல்ல, வேலைவாய்ப்பு உருவாவதும் சாத்தியமில்லை.
பன்னாட்டு, உள்நாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் (கார்பரேட்) முக்கியத்துவம் பெறுவதும், அன்னிய முதலீடு தலைப்புச் செய்தியாவதும் வழக்கமாகிவிட்டன. இந்தியாவின் தனிமனித சேமிப்பு என்பது மொத்த உற்பத்தி மதிப்பு விகிதத்தில் 30%. அதேநேரத்தில், உற்பத்தித் துறையில் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு என்பது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் வெறும் 1.2% மட்டுமே. இது இந்தியாவை சர்வதேசச் சந்தையுடனும், தொழில்நுட்பத்துடனும் இணைக்கிறது என்பதால் அதன் இன்றியமையாமையைக் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. ஆனால், தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அதுவே காரணமாகி விடாது.
இந்தியாவையும் சீனாவைப் போன்ற உற்பத்தி மையமாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோளுக்கு உறுதுணையாக இருக்கப் போவது அன்னிய முதலீடுகளோ, பன்னாட்டு, உள்நாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களோ அல்ல. தனிநபர் தொழில் முனைவோர்களும், வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களாக அல்லாத தொழில், வணிகத் துறையும்தான் அதற்கு உதவ முடியும்.
உற்பத்தி, தொழில் துறையில் வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் பங்களிப்பு 18%க்கும் குறைவு. ஆனால், வணிகக் கூட்டாண்மை அல்லாமல் செயல்படும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 45%. கட்டுமானம் (64.6%), வணிகம், தங்கும் விடுதிகள் (74.2%), போக்குவரத்து (81.4%) போன்ற துறைகளில் வணிகக் கூட்டாண்மை நிறுவனமாகச் செயல்படாத தனியார் நிறுவனங்களின் பங்கு கணிசமானது. இதெல்லாம் எதற்கு, கணினி, மென்பொருள் துறையையே எடுத்துக் கொண்டால், அதில் தனிநபர், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மூன்றில் இரண்டு பங்கு.
இதுதான் உண்மை நிலைமை என்றாலும், வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும்தான் சிறப்பு அங்கீகாரம் பெற்றவையாகத் தொடர்கின்றன. அவர்களுக்கு வங்கிகள் எல்லாவித நிதியுதவியும் அளிக்க முற்படுகின்றன. இதேபோன்ற ஆதரவு தனியார் நிறுவனங்களுக்கும், சொந்தமாகத் தொழில் தொடங்கவும், தொழிற்சாலைகள் நிறுவி உற்பத்தியைப் பெருக்கவும் முன்வரும் தனிநபர்களுக்குத் தரப்படும்போது மட்டும்தான், உற்பத்திப் பெருக்கமும், அதன் தொடர்விளைவுவாகப் பரவலான வேலைவாய்ப்பு ஏற்படுவதும் சாத்தியமாகும்.
வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் அமைப்பதால் உற்பத்திப் பெருக்கமும், வேலைவாய்ப்பும் ஏற்படாது எனும்போது, அதற்கு முன்னுரிமை அளித்து நேரத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு, சிறுதொழில் முனைவோருக்கு அரசு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவை உலக உற்பத்தி மையமாக்க முடியும்.
பிரதமரின் முயற்சி பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், அவர் கருத்தில் கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் கைகோத்து நடைபோடாமல் போனால், அதன் விளைவு தீவிரவாதத்தில்தான் போய் முடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தொடர்வது அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: காங்கிரஸ்

மாஸ்க் கொண்டாட்டம் பற்றி பேசிய சுழல்பந்து இரட்டையர்கள் அகீல் ஹொசைன், நூர் அகமது!
இதுதான் புரமோஷனா? புலம்பும் தனுஷ் ரசிகர்கள்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

