முதியோர் பேணல்!

திரையுலகில் நடிகையாக இருப்பவர் ஏதாவது கூறினால் அதற்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கத் தேவையில்லை.
Updated on
2 min read

திரையுலகில் நடிகையாக இருப்பவர் ஏதாவது கூறினால் அதற்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கத் தேவையில்லை. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராகி விட்ட பிறகு, தான் வெளிப்படுத்தும் கருத்துகள் யாரையும் புண்படுத்துவதாகவும், பிரச்னையின் ஆழம் தெரியாமல் நுனிப்புல் மேய்வது போல அமையாமலும் இருந்தாக வேண்டும். நடிகை ஹேமமாலினி இப்போது உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதியிலிருந்து ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்.

அவர் நடிகையாக இருந்தபோது, மும்பையிலுள்ள தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீங்கள் இங்கே வந்து இந்தித் திரைப்படங்களில் ஏன் நடிக்கிறீர்கள் என்று கேட்கவில்லை. கேட்டிருந்தால், இந்தியரான நான் எங்கே வேண்டுமானாலும் வசிப்பதற்கும், தொழில் புரிவதற்கும் அரசமைப்புச் சட்டத்தால் உரிமை பெற்றிருக்கிறேன் என்று அவர் பதிலளித்திருப்பார்.

தென்னிந்தியரான நீங்கள் தமிழ்நாட்டிலோ, நடிகையாகக் கோலோச்சிய, இப்போது குடியிருக்கும் மும்பையிலோ, உங்கள் கணவரின் மாநிலமான பஞ்சாபிலோ ஏதாவது மக்களவைத் தொகுதியில் போய் போட்டியிடாமல், எங்கள் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் ஏன் போட்டியிடுகிறீர்கள் என்று யாராவது வாக்காளர் கேட்டிருந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, இந்தியாவிலுள்ள எந்தத் தொகுதியிலும் போட்டியிடும் தகுதியை இந்திய குடியுரிமை பெற்ற நான் பெற்றிருக்கிறேன் என்று அவர் பதிலளித்திருப்பார்.

ஹேமமாலினி தனது மதுரா மக்களவைத் தொகுதிக்கு பிருந்தாவனம் பகுதியில், பல்வேறு மாநிலங்களிலிருந்து "கிருஷ்ண பக்தி' காரணமாக வந்து தங்கியிருக்கும் விதவைகளை, அவரவர் மாநிலங்களுக்குச் சென்று, அங்கே ஏதாவது கோயிலில் போய் இருக்கும்படி அறிவுரை கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பிருந்தாவனத்தில் வந்து தங்கியிருக்கும் அந்த வயதான கைம்பெண்கள் தெருவில் பிச்சை எடுக்கிறார்கள் என்பதால் தனது தொகுதிக்குக் களங்கம் ஏற்படுவதாக ஹேமமாலினி கருதுவாரானால், அதைவிடப் பொறுப்பற்ற சிந்தனை எதுவும் இருக்க முடியாது.

வட மாநிலங்களில் கணவனை இழந்த பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. அவர்கள் சமுதாயத்தில் இழிவாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல, உறவினர்களாலும், அவரவர் குழந்தைகளாலும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். உடலில் வலுவுள்ளவரை, உள்ளூரிலேயே ஏதாவது வேலை செய்து வயிற்றைக் கழுவிக் கொண்டு உயிர் வாழும் நூற்றுக்கணக்கான விதவைகள் வயோதிகத்தை எட்டும்போது, நிர்கதியாக நிலை

குலைந்து போகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வாராணசிக்கோ, பிருந்தாவனத்திற்கோ பயணிக்க முற்படுகிறார்கள். அங்கே தங்களைப் போன்ற அனாதரவான விதவைகள் இருப்பதால், அவர்களுடன் வாழ்ந்து மடியலாம் என்பதுதான் அவர்களது முடிவாக இருக்கிறது.

வாராணசியிலும் சரி, பிருந்தாவனத்திலும் சரி இந்த விதவைகள் கூட்டமாக இருந்து பஜனை பாடுவதும், ஆங்காங்கே உள்ள தர்மசாலைகளில் கிடைக்கும் உணவைக் கொண்டு பசியாறுவதுமாகத் தங்களது இறுதிக் காலத்தைக் கழிக்கிறார்கள். இந்த அமைப்புக்குள் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாத சில விதவைகள் தெருவில் பிச்சை எடுக்க நேர்கிறது. அதுதான் மக்களவை உறுப்பினர் ஹேமமாலினியின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த மதுராவிலுள்ள பிருந்தாவனத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான விதவைகள் இருக்கிறார்கள். இதைவிட அதிகமானவர்கள் காசியில் மரணத்தை எதிர்பார்த்து நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாவம், அந்தப் படிப்பறிவில்லாத பாட்டிகளுக்கு "பெற்றோர், முதியோரின் பராமரிப்பு, பாதுகாப்புச் சட்டம், 2007' பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்தச் சட்டப்படி, பெற்றோரின் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவத் தேவை போன்றவற்றை உறுதிப்படுத்தும் கடமை வயதுக்கு வந்த பிள்ளைகளுக்கு உண்டு.

பிருந்தாவனத்திலும், காசியிலும் வசிக்கும் வயதான விதவைகளை, ஹேமமாலினி கூறுவதுபோல, அவரவர் ஊர்களுக்கு அனுப்புவதால் பிரச்னை தீர்ந்துவிடாது. முதியோரின் பாதுகாப்புக்கும், பராமரிப்புக்கும் முன்னுரிமை அளிப்பதிலும், அவர்களது உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கும், மருத்துவ வசதிக்கும் உத்தரவாதம் அளிப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் முனைப்புக் காட்டியாக வேண்டும். அரசாலோ, தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாலோ ஊருக்கு ஊர் சிறப்பாக செயல்படும் முதியோர் காப்பகம் அமைக்கப்படுவது மட்டும்தான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com