உண்மை கசக்கும்!

ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் இறந்தது தொடர்பாக, தற்போது ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப் படை மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Updated on
2 min read

ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் இறந்தது தொடர்பாக, தற்போது ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப் படை மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையால் நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு நிகழ்வு மட்டுமே. இதில் நியாயம் கிடைத்துவிட்டது என்று மகிழ்வதற்கு ஏதுமில்லை.

இறந்தவர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதிலோ, அவர்களைக் கொன்ற பிறகுதான் வனப் பகுதியில் கொண்டு வந்து வீசியிருக்க முடியும் என்ற சந்தேகப் பார்வையிலோ யாருக்கும் முரண் கிடையாது. ஆனால், சில கசப்பான உண்மைகளை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

அவர்கள் அங்கே சட்டவிரோதமாக மரம் வெட்டச் சென்றவர்கள். அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆந்திர அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. மரம் வெட்ட வரும் தொழிலாளர்களை தமிழக எல்லையில் தடுத்து நிறுத்துங்கள் என்று தமிழக காவல் துறைக்கு ஆந்திர காவல் துறை தகவல் கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தனைக் காலமாக அங்கே செம்மரக் கடத்தல் குறித்து தெரிந்தே மரம் வெட்டியிருக்கிறார்கள். இதற்கான கூலியாக 20 நாள்களுக்கு ரூ.1.50 லட்சம் வாங்கியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் செம்மரக் கட்டை வெட்டுவோருக்கும் ஆந்திர காவல் துறையினருக்கும் இடையிலான மோதலில் காவல் துறையினர் 2 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். செம்மரத்தின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இத்தனை விவரங்களும் நீதிமன்றத்தில் ஒவ்வொன்றாக முன்வைக்கப்படும்போது, இந்த வழக்கும் பல ஆண்டுகளைக் கடந்திருக்கும். நீதிமன்றத்தின் கோபமும் தணிந்திருக்கும்.

இந்தத் துப்பாக்கிச் சூடு வேறு எங்கோ நடத்தப்பட்டு, பிணங்கள் மட்டுமே காட்டில் வீசப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இந்த விவகாரம் எந்தவொரு நீதிமன்றத்தாலும், இறந்தவர்கள் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் என்றாலும்கூட, மனித உரிமை மீறலாகப் பார்க்கப்படும். இதை நிரூபிக்காதவரை, இந்த நடவடிக்கையைத் தவிர்த்திருக்க வேண்டும் அல்லது இது மிகையான செயல் என்று எந்தவொரு நீதிமன்றமும் கண்டிக்க மட்டுமே செய்யும். தண்டிக்காது.

தவிர்த்திருக்க வேண்டிய துப்பாக்கிச் சூட்டுக்காக இவர்களைத் தண்டித்தால், ஆந்திர காவல் துறை தார்மிகத் தளர்வெய்தி, சுணக்கமாகி விடுவார்கள். ஆகவே, ஆந்திர அரசும் இந்தத் துப்பாக்கிச்சூட்டை கடைசிவரை நியாயப்படுத்தும். காவலர்கள் யாரையும் விட்டுக் கொடுக்காது.

தமிழக மரம் வெட்டும் தொழிலாளர்களை வேறு எங்கோ ஓரிடத்தில் துன்புறுத்தி, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள் என்பதை நிரூபிக்கும் ஆதாரம் என நாம் நம்புவது - இறந்தவர்களில் இன்னமும் எரிக்கப்படாமல் இருக்கும் 6 சடலங்களைத்தான். இந்தச் சடலங்களும் ஏற்கெனவே உடற்கூறு சோதனைகளில் சிதைந்துபோய், அழுகிய நிலையில் இருப்பவை. இந்தச் சடலங்களில் உயிர் பிரிந்த நேரத்தை துல்லியமாகக் கணிக்க முடியுமா என்பது உறுதியில்லை.

இந்த விவகாரத்தில், ஒருவேளை, தமிழக காவல் துறையின் ரகசிய உளவுப் பிரிவிடம் ஆந்திர மாநிலத்தின் காவல் துறை சில முக்கிய தமிழக நபர்களின் பட்டியலைக் கொடுத்து, கைது செய்ய உதவும்படி கோரலாம். அதைத் தமிழக அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள். ஏனென்றால், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பலருக்கும்கூட இதில் தொடர்பிருக்க வாய்ப்புண்டு.

சேஷாசலம் வனப் பகுதியில் வெட்டப்படும் செம்மரங்கள் அனைத்தும் வேலூர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு, சில நாள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, சிறிது சிறிதாக சென்னைக்கு எடுத்து வரப்பட்டு, அவை வெளிநாடுகளுக்கு மறைமுகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்தத் தொடர் நிகழ்வில், மரம் வெட்டியவர்கள், அதை எடுத்து வந்த ஊர்திகள், இங்கே செம்மரம் வைக்கப்பட்ட இடங்கள், அவற்றின் உரிமையாளர்கள், சென்னைக்குக் கொண்டு சென்றவர்கள், ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்தவர்கள் எனப் பலருடைய பெயரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெயராகவே இருக்கும். அவர்கள் கொடுக்கும் பட்டியலில் இருக்கும் பெயர்கள் கட்சி வேறுபாடின்றிப் பல அரசியல்வாதிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

இப்போதைய உண்மையான பிரச்னை என்னவெனில், கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் மரம் வெட்டும் தமிழர்கள் என 61 பேரை ஆந்திர அரசு கைது செய்துள்ளது. இவர்கள் துப்பாக்கிச் சூட்டின்போது தப்பியோடியவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியத்தின் காரணமாகக் கைது செய்யப்பட்டவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று. மேலும், சுமார் 70 பேரைக் கைது செய்திருப்பதாகவும் ஆனால் அவர்கள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின்றன.

தற்போது கைதாகியிருப்போரை விசாரணைக்கு அழைத்து வரும்போது, தப்பியோட முயன்றதாக சிலரைச் சுட்டுக் கொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு கொன்று மற்ற கைதிகளிடம் அச்சத்தை உருவாக்கி, அன்றைய தினம் தப்பித்து ஓடிவந்தவர்கள் என்று ஒப்புக்கொள்ள வைக்க முடியும். அப்படியானால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது உண்மை, அவர்கள் வேறு எங்கோ ஓரிடத்தில் ஓரிரு நாள் முன்னதாகவே கொல்லப்படவில்லை என்ற வாதத்துக்கு வலு கூடிவிடும்.

தமிழகத் தொழிலாளர்கள் துன்புறுத்திக் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை நிரூபிக்க நமக்கு எந்த ஆதாரமும் இல்லை. குறைந்தபட்சமாக நாம் செய்யக்கூடிய ஒன்று, இந்த 61 பேரையும் தமிழக சிறைக்கு மாற்றுவதுதான். இதுதான் இவர்களையும் காப்பாற்றும், சுட்டுக் கொன்ற உண்மையையும் உயிர்ப்பிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com