காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்ற நாளில் அந்த விழா மேடையிலேயே, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையிலேயே, "காஷ்மீர் மாநிலத் தேர்தல் அமைதியாக நடக்கக் காரணமாக இருந்த பாகிஸ்தானுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் நன்றி' என்று முதல்வர் முஃப்தி முகம்மது சயீத் தெரிவித்தபோதே, ஒரு கும்பிடு போட்டுவிட்டு அமைச்சரவையிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும் பா.ஜ.க. அதைச் செய்யாமல் விட்டதன் பலனை இப்போது இந்தியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை அமைதியான முறையில், அசம்பாவிதங்கள் ஏதுமில்லாமல் நடத்த முடிந்ததென்றால் அதற்குக் காரணம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் திட்டமிட்ட அட்டவணையும், அந்த மாநில காவல் துறை மற்றும் ராணுவமும், காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்ற மக்களின் விருப்பமும்தான். இதையெல்லாம் பாராட்டத் தவறினார் முஃப்தி. பாகிஸ்
தானின் கருணையாலும், பயங்கரவாத அமைப்புகளின் தயவாலும்தான் காஷ்மீரில் தேர்தலை அமைதியாக நடத்த முடிந்தது என்று கொச்சைப்படுத்தினார். அந்தக் கணமே காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்து, சுதந்திரமான களமும் அமைத்துக் கொடுத்துவிட்டார்.
இந்த விவகாரம் ஓயும் முன்பாகவே, சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பாஜகவை, மாநில அளவிலும்கூட, முதல்வர் முஃப்தி கலந்தாலோசனை செய்யவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் தகவல் தரவில்லை. மஸரத் ஆலம் விடுதலை செய்யும் முடிவு, தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் முன்பாகவே அரசினால் மேற்கொள்ளப்பட்ட முடிவு என்ற ஆறுதல் விளக்கம் தரப்பட்டது.
இவை யாவும் தந்த நேரடி ஊக்கம்தான், பிரிவினைவாதத் தலைவர்கள் கிலானி உள்ளிட்டோர், புது தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய நாள் விழாவில் பங்கேற்கவும், தற்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கவும் மீள்ஊக்கம் தந்தது. காஷ்மீரில் சிறிதுகாலமாக மட்டுப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தலைதூக்கின. இம்மாதம் முதல் வாரத்தில் காஷ்மீரின் மூன்று இடங்களில் ஒரே நாளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய சூழலில்தான் ஸ்ரீநகரில் கிலானி நடத்திய பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தப் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டபோதே இதில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களும் கலவரமும் நடைபெறலாம் என்று உளவுத் துறையால் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி பேரணியை அனுமதித்தது காஷ்மீர் அரசு. பேரணியில் மஸரத் ஆலம் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடியைத் தூக்கிச் சென்றார்கள். பாகிஸ்தான் கொடியையே கம்பத்தில் ஏற்றினார்கள். இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.
கிலானியின் வீட்டுச் சிறையும், மஸரத் ஆலம் ஒரு வாரத்துக்கு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், காஷ்மீர் முதல்வர் முஃப்தியின் கண்துடைப்பு நடவடிக்கையாகவே தோன்றுகிறது. பிரிவினைவாதிகளை வெறும் தடியடியால் சமாளிக்க முடியும் என்று நம்புகிற அப்பாவியா காஷ்மீர் முதல்வர் முஃப்தி? பிரிவினைவாதத்தை முன்வைத்து இந்தியாவுக்கு எதிராகக் கலவரம் நடத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக விசாரணை நடத்த உத்தரவிட்டு, இரு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால், யாருக்காக ஆட்சி நடத்துகிறார் முதல்வர் முஃப்தி, பிரிவினைவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்குமா?
காஷ்மீர் முதல்வர் முஃப்தியின் உள்நோக்கம் பா.ஜ.க. எரிச்சலுற்று கூட்டணியை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்ற நிர்பந்தமான சூழலை உருவாக்குவது மட்டுமே. அவ்வாறான ஒரு நிலைமை உருவானால், காஷ்மீரில் அரசு கவிழ்ந்ததற்குக் காரணம் பா.ஜ.க.தான் என்று பிரசாரம் செய்து, தற்போது காஷ்மீரில் பா.ஜ.க. அடைந்த வெற்றியை மறுபடியும் காணாத அளவுக்கு மழுங்கடிப்பதுதான் முஃப்தியின் உள்நோக்கம்.
காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள 46 இடங்களில் முஃப்தியின் கட்சியால் 25 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. மறுதேர்தலில் பள்ளத்தாக்கில் உள்ள 46 இடங்களிலும், ஜம்முவில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியிலுள்ள 12 இடங்களிலும் ஒட்டுமொத்தமாக வெற்றிபெற்று விட்டால் 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவும் முடியும், அதையே காரணம் காட்டி பிரிவினைக்கு வழிகோலவும் முடியும் என்று முதல்வர் முஃப்தியும் அவரது மக்கள் ஜனநாயகக் கட்சியும் வியூகம் வகுத்தால்கூட வியப்படைவதற்கில்லை.
முஃப்தி ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பிரிவினைவாதிகளைப் பயன்படுத்தியும் ஆதரித்தும் காஷ்மீரில் தான் மட்டுமே ஆட்சியைப் பிடிக்கும் சூழலை உருவாக்கி அதன் மூலம் காஷ்மீரில் தனித் தலைமை பெறலாம் என முஃப்தி நம்பினால், அதைவிடப் பேதைமை ஏதுமில்லை. பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் நிதிநல்கையில் ஆடம்பர வாழ்க்கைக்குப் பழகியவர்கள். அவர்கள் ஒருபோதும் காஷ்மீரில் ஜனநாயக அரசு அமைவதை விரும்ப மாட்டார்கள். அவர்களது முதல் பலி தானாகத்தான் இருக்கும் என்பதை முதல்வர் முஃப்தி உணர வேண்டும்.
பாவம் பா.ஜ.க., காஷ்மீரீல் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற பேராசையால் முஃப்தி விரித்த வலையில் விழுந்து, இப்போது இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறது. ஆதரவை விலக்கிக் கொண்டு கூட்டணியிலிருந்து பா.ஜ.க. வெளியேறாவிட்டால், இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும், எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

