பெருமழை கற்பித்த பாடம்!

சென்னைப் பெருமழை கற்பித்த பாடங்கள் பல. அவற்றில் மிக முதன்மையானது போக்குவரத்தை முறைப்படுத்தும் மேலாண்மையில் பின்தங்கியிருக்கிறோம் என்பதுதான். இதில் விமான சேவை, பேருந்து சேவை, ரயில் சேவை என எதிலும் பேதமில்லாமல் மேலாண்மைக் குளறுபடிகள் நடந்தன. அதிகாரிகள், இதுபோன்ற சூழலில் மக்களின் துயரத்தை எந்த அளவுக்கு, எப்படியெல்லாம் குறைக்கலாம் என்பதில் தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்துவதை விட்டுவிட்டு நமக்கு எதற்கு இந்த வேலை என்று பொறுப்பேற்கத் தயங்கி நின்றதால், பயணிகள் அடைந்த துயரம் மிகப் பெரிது.
Updated on
2 min read

சென்னைப் பெருமழை கற்பித்த பாடங்கள் பல. அவற்றில் மிக முதன்மையானது போக்குவரத்தை முறைப்படுத்தும் மேலாண்மையில் பின்தங்கியிருக்கிறோம் என்பதுதான். இதில் விமான சேவை, பேருந்து சேவை, ரயில் சேவை என எதிலும் பேதமில்லாமல் மேலாண்மைக் குளறுபடிகள் நடந்தன. அதிகாரிகள், இதுபோன்ற சூழலில் மக்களின் துயரத்தை எந்த அளவுக்கு, எப்படியெல்லாம் குறைக்கலாம் என்பதில் தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்துவதை விட்டுவிட்டு நமக்கு எதற்கு இந்த வேலை என்று பொறுப்பேற்கத் தயங்கி நின்றதால், பயணிகள் அடைந்த துயரம் மிகப் பெரிது.
 சென்னை ஒரு தீவாக மாறிவிட்டிருந்த நிலையில், அந்தத் தீவை விட்டு வெளியேற லட்சக்கணக்கான சென்னைவாசிகள் துடித்தார்கள். சென்னை மாநகர் முழுவதும் ஏ.டி.எம். மையங்கள் செயலிழந்த நிலையில், வங்கிக் கணக்கில் பணம் இருந்தாலும், காசில்லா ஏழைகளாய், சென்னையை விட்டு வெளியேற முடியாமல் தவித்தவர்கள் பல லட்சம் பேர். ஒருபுறம் பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் அதேவேளையில் இவர்களைப் பற்றியும் அக்கறை காட்டியிருக்க வேண்டும்.
 சென்னையிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் சென்னை மாநகர் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கிற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அந்த அறிவிப்பு வந்திருக்காவிட்டால், மக்கள் அடைந்திருக்கக் கூடிய அவலத்தைச் சொல்லி மாளாது. அவர்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என அண்மை ஊர்களுக்கு வெளியேறி, முதல் வேலையாக ஏ.டி.எம்.இல் பணம் எடுத்துப் பைகளை நிறைத்தார்கள். சொந்த ஊர்களுக்குப் பயணமானார்கள். இந்த அறிவிப்பை முதல்வர் செய்திருக்காவிடில், நிவாரண முகாம்களில் இருப்போர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்திருக்கும் என்பதுதான் உண்மை.
 சென்னையில் கனமழை காரணமாக தண்டவாளத்தை வெள்ளம் மூடி மறைத்ததும், அதனால் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதும் தவிர்க்க முடியாதவை. இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெருமழை வெள்ளம் சென்னை - விழுப்புரம் இடையிலான ரயில் பாதைகளில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ரயில்வே நிர்வாகம்,
 வெளியூர்களிலிருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 3 ரயில்களைத் தவிர ஏனைய ரயில்கள் அனைத்தையுமே ரத்து செய்தது. ரத்து செய்வதையும்கூட, மாலை 6 மணி வரை தெரிவிக்காமல் பயணிகளை குழப்பத்தில் தவிக்கவிட்டது. சென்னை செல்லும் பயணிகள் மட்டும்தான் முக்கியமா? இடைப்பட்ட ஊர்களில் ஏறும் இறங்கும் பயணிகள் நுகர்வோர் இல்லையா?
 தென்மாவட்ட ரயில்களை விழுப்புரம் வரை வழக்கமான ரயில் பாதையிலும், பிறகு அங்கிருந்து திருவண்ணாமலை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இயக்கி இருக்க முடியும். வழக்கமில்லாத இந்த ரயில் பாதைகளில் ரயில் போக்குவரத்து எண்ணிக்கை கூடும்போது, சிக்னல் வழங்குவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ரயிலும் எந்தெந்த ரயில் நிலையங்களைக் கடந்தது அல்லது ஓரங்கட்டப்பட்டுள்ளது என்பதை நுட்பமாக கவனித்தாக வேண்டும். மிகுந்த பொறுப்புணர்வுடனும் கவனத்துடனும் செயல்பட்டாக வேண்டும்தான். அதனால், எதற்கு வம்பு? ரத்து செய்தால் போயிற்று என்ற மனநிலையில் இயந்திரமாகச் செயல்பட்டது ரயில்வே நிர்வாகம்.
 இத்தகைய இடருறுகாலங்களில்தான் சிறந்த மேலாண்மை தேவைப்படுகிறது. இந்த நேரத்தில்தான் மக்களுக்கு எந்தெந்த சிறுவிதத்திலும் உதவிட முடியும் என்பதைப் போக்குவரத்து சார்ந்த நிர்வாகங்கள் யோசித்து, செயல்பட வேண்டியது அவசியம். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொறுப்பேற்கும் தைரியம் இருக்க வேண்டும். அர்ப்பணிப்பு வேண்டும். மக்களின் துயரத்தை உணர்ந்திருத்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தாங்கள் மேலிருந்து உத்தரவு பிறப்பித்தால்தான் செய்ய வேண்டும் என்கிற மனோபாவம் மேலதிகாரிகளிடமும், உத்தரவு வந்தால் செய்தால் போதும் என்கிற மனப்போக்கு களத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் இருத்தல் கூடாது. அந்தக் கலாசாரத்தை நாம் உருவாக்கத் தவறிவிட்டோம்.
 சென்னை விமான நிலையத்தை மூட வேண்டியது அவசியம் என்றால், அடுத்த சில மணி நேரங்களில் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி ராணுவ ஓடுபாதையை பயன்படுத்தி சிறு விமானங்களை நேரடியாக அரக்கோணத்துக்கும், பெரிய விமானங்களை பெங்களூருக்கும் அனுப்பி இருக்க முடியும். சில நாள்கள் கழித்து அந்த சேவையை இயக்கவும் முடிந்தது. தடையற்ற சேவையை இத்தகைய பேரிடர் காலங்களில் வழங்க வாய்ப்பு இருந்தும், அதை ஏன் தொடக்கத்திலேயே செய்யாமல் காலம் தாழ்த்தினார்கள்?
 இத்தகைய சூழலில்தான், எல்லாவகையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலைமையை கட்செவி அஞ்சலில் ஒருவர் இவ்வாறு பகிர்ந்தார்: மற்ற ஊர்களில் எது நடந்தாலும் சென்னைவாசி தன் வேலையைப் பார்ப்பார். சென்னைக்கு ஒன்று நேர்ந்துவிட்டால், மற்ற எல்லா ஊர்க்காரர்களும் எந்த வேலையும் பார்க்க முடியாது. அதுதான் நடந்தது.
 இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பயணிகள் நலனைப் பற்றி சிந்திக்கவும், அவர்களது கவலையை உணர்வதும்தான் போக்குவரத்து மேலாண்மைக்கு முதல் பாடம். மேலை நாடுகளில் பேரிடர் வரும்போது அதீத சுறுசுறுப்புடன் இயங்குவது போக்குவரத்துத் துறைதான். முடிந்தவரை பாதிப்பிலிருந்து மக்களை வெளியேற்றியாக வேண்டும் என்கிற அக்கறை அவர்களுக்கு இருக்கிறது. இங்கே, வழக்கம்போல ஆமை வேகத்தில் அரசு இயந்திரம்போல போக்குவரத்துத் துறைகளும் இயங்குகின்றன. இதுதான் வேறுபாடு!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com