இது அரசியல், பிரச்னையல்ல...!

தேர்தல் நெருங்க நெருங்க, கேரள அரசியல்வாதிகளுக்கு முல்லைப் பெரியாறு பிரச்னை வசதியான அரசியல் ஆயுதமாவது வழக்கமாகிவிட்டது. முல்லைப் பெரியாறு அணையில் அனுமதிக்கப்பட்ட 142 அடித் தண்ணீர் நிரம்பிவிட்டால் போதும், கேரளம் முழுவதும் ஆளும் கூட்டணிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் அடுத்த சில மணி நேரங்களில் அணையே உடைந்து கேரளமே மூழ்கிவிடும் அபாயம் தோன்றியிருப்பதுபோல அலறத் தொடங்கி விடுகின்றன.
Updated on
2 min read

தேர்தல் நெருங்க நெருங்க, கேரள அரசியல்வாதிகளுக்கு முல்லைப் பெரியாறு பிரச்னை வசதியான அரசியல் ஆயுதமாவது வழக்கமாகிவிட்டது. முல்லைப் பெரியாறு அணையில் அனுமதிக்கப்பட்ட 142 அடித் தண்ணீர் நிரம்பிவிட்டால் போதும், கேரளம் முழுவதும் ஆளும் கூட்டணிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் அடுத்த சில மணி நேரங்களில் அணையே உடைந்து கேரளமே மூழ்கிவிடும் அபாயம் தோன்றியிருப்பதுபோல அலறத் தொடங்கி விடுகின்றன. இதோ இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் என்கிற நிலையில், முதல்வர் உம்மன் சாண்டி மறுபடியும் முல்லைப் பெரியாறு விவகாரத்துடன் பிரதமரைச் சந்தித்திருக்கிறார்.
 மேஜர் ஜான் பென்னி குவிக் என்கிற ஆங்கிலேய பொறியாளரால், வீணாகக் கடலில் கலக்கும் பெரியாறு நதியின் வெள்ளத்தை வைகை ஆற்றிற்குத் திருப்பிவிட்டு ஏறத்தாழ 1,69,411 ஏக்கர் விவசாய நிலப்பரப்புக்குப் பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்க நிறைவேற்றப்பட்ட நல்லதொரு திட்டம்தான், இன்று கேரள மாநில அரசியல் கட்சிகளால் அரசியலாக்கப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைய அணை என்பதால், அதன் கட்டுமானம் பலம் இழந்திருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில்தான் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சையை முன்வைக்கிறார்கள்.
 1979-இல் குஜராத் மாநிலம் மோர்வியிலுள்ள மச்சூ அணை உடைந்த விபத்தில் பல உயிர்கள் பலியாகின. அந்த விபத்தைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையாலும் பாதிப்பு ஏற்படும் என்கிற பீதியை கேரள மாநிலத்தில் சிலர் எழுப்பினார்கள். மத்திய அரசின் குழு ஒன்று தமிழக அரசை அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும், கொள்ளளவை 152 அடியிலிருந்து 142 அடியாகக் குறைக்கும்படியும் ஆலோசனை கூறியது.
 முல்லைப் பெரியாறு அணையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், புதிய அணை ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கேரளம் எழுப்பிய கோரிக்கைகளைத் தமிழகம் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றமே ஏற்றுக் கொள்ளவில்லை. 2006 பிப்ரவரி 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக அதிகரித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் வழிகோலியது. அதுமட்டுமல்ல, அணையின் கட்டுமானத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்திய பிறகு நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும் அனுமதித்தது.
 கேரளத்தில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணியும் சரி, எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரிக் கூட்டணியும் சரி, தங்களுக்கு ஏற்புடைய விஷயங்களில் அரசியல் சட்டத்தை நீட்டுவதையும், நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று வாய் கிழியப் பேசுவதையும் வழக்கமாக்கிக் கொள்வார்கள். ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான தீர்ப்பு வரும்போது மட்டும் இந்த நியாயமெல்லாம் காற்றில் பறக்க விடப்படும்.
 கேரள சட்டப்பேரவை கூடியது. அதுவரையில் இல்லாத "அணை பாதுகாப்புச் சட்டம்' ஒன்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒத்த குரலில் ஆதரிக்க ஏகமனதாக அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 136 அடிக்கும் அதிகமாக அணையின் உயரத்தை அதிகரிக்கத் தமிழகத்திற்கு அனுமதி மறுத்தது கேரள அரசு. உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தடம்புரளச் செய்ய மாநில சட்டப்பேரவை சட்டம் இயற்றிய விசித்திரம் அங்கே அரங்கேறியது.
 அந்தச் சட்டத்தை எதிர்த்துத் தமிழகம் தொடர்ந்த வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தமிழகத்திற்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் வரம்புகளில் கேரள சட்டப்பேரவை தலையிட்டதைக் கண்டித்தது மட்டுமல்லாமல் அந்தச் சட்டத்தை ரத்து செய்து, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உரிமையைத் தமிழகத்துக்கு வழங்கி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்வதற்கும் வழிகோலியது.
 அணையின் நீர் தேக்கும் உயரத்தை 142 அடிக்குமேல் உயர்த்தினால், நீர்ப்பரப்பில் பல சுற்றுலாப் பகுதிகளும், உயர்குடியினருக்கான ஓய்வுவிடுதிகளும் மூழ்கக்கூடும். கேரளத்தின் முன்னணி கோடீஸ்வரத் தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, அந்தப் புறம்போக்கு நிலங்களில் அமைத்துக் கொண்டிருக்கும் எஸ்டேட்டுகளும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மூழ்கக் கூடும். இதுதான் கேரள அரசியல்வாதிகளின் உண்மையான கவலை.
 முல்லைப்பெரியாறு அணையில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்துக்கு மட்டுமே கிடைக்கிறது. 1970-இல் மின்உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, கேரளம் மின்மிகை மாநிலமாக இருந்ததால் அவர்கள் இதுகுறித்து வலியுறுத்தவில்லை. இப்போது கேரளத்தின் மின் தேவையும் அதிகரித்து விட்டிருப்பதால் அவர்களால் மொத்த மின் உற்பத்தியையும் தமிழகம் எடுத்துக் கொள்வதை சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இன்னொரு அணையைக் கட்டி, இடுக்கி மின்நிலையத்துக்கு அந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளக் கேரளம் விழைகிறது. இது அடுத்த காரணம்.
 தமிழ்நாட்டுக்கு வழங்கும் நீருக்கு கூடுதல் விலை பெறலாம் என்கின்ற எண்ணமும் கூட கேரளத்தின் எதிர்ப்புக்குக் காரணமாக இருக்கக் கூடும். கேரள அரசு தமிழகத்துடன் வெளிப்படையாகப் பேச வேண்டும். தண்ணீருக்கு கூடுதல் பணம் வேண்டுமா? மின்சாரம் வேண்டுமா? அல்லது அதற்கான உரிமத்தொகை வேண்டுமா? எது வேண்டும் என்பதை கலந்து பேசித் தீர்வு காண்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
 முல்லைப் பெரியாறு அணையில் 142 அடித் தண்ணீர் தேக்கப்பட்டும் அந்த அணை பலமாகவே இருப்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இனிமேல், விவாதிக்க வேண்டியது 152 அடியாக நீர் தேக்குவதா, இல்லையா என்பதுதானே தவிர, அணை பலமாக இருக்கிறதா, இல்லையா என்பதையல்ல!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com