நாட்டின் பல பகுதிகளில் பன்றிக் காய்ச்சலால் 200-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் 100 இடங்களில் பன்றிக் காய்ச்சல் குறித்த ஆலோசனை மையங்கள் அமைக்கப்படவிருப்பதும், பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த நோய் தொற்றாமல் இருக்க பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதும் வரவேற்புக்குரியவை.
சேலம் உள்ளிட்ட மாவட்ட மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருவாரூர், விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், இந்த நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிகளில் இதுகுறித்த கண்காணிப்பு மிகவும் அவசியம்.
பன்றிக் காய்ச்சல் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனைகளை பள்ளிகளில் நடத்துவதும், மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் அதற்கான காரணத்தை பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதும், காய்ச்சல் என்றால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய அவசியத்தை பெற்றோருக்கு அறிவுறுத்துவதும் ஆசிரியர்களின் கடமை. தற்போது எல்லா பெற்றோரிடமும் செல்லிடப்பேசி இருப்பதால், இத்தகைய விசாரிப்புகள் மிக எளிதானவை.
டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை நிலவேம்புக் குடிநீருக்கு கட்டுப்படுவதால், பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்குவதை சுகாதாரத் துறை, சித்த மருத்துவத் துறை உதவியுடன் மேற்கொள்ளலாம். பள்ளிக் குழந்தைகளுக்கு குடல்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கப்படுவதைப் போல, நிலவேம்புக் குடிநீரும் எல்லாக் காலங்களிலும் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். நோய் வந்த பிறகுதான் நிலவேம்புக் குடிநீர் அருந்த வேண்டும் என்பதல்ல.
பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்துவதில் மருந்து மாத்திரைகளைவிடவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பே மிக இன்றியமையாதது. காய்ச்சல் அதிகமாக இருக்கும் நோயாளிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டால், உயிர் பிழைத்துவிடுவார்கள். காய்ச்சல் தானாகத் தணிந்துவிடும் என்கின்ற மனநிலை கூடாது என்கிற விழிப்புணர்வே பன்றிக் காய்ச்சலால் நேரிடும் இறப்புகளை தடுக்கக்கூடிய ஒரே வழி.
ராஜஸ்தான், தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமிருப்பதால், இறந்தோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. ராஜஸ்தானில் மட்டுமே இதுவரை 85 பேர் பலியாகியுள்ளனர்.
2012-ஆம் ஆண்டு இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 405. 2013}இல் 238 பேர் இறந்தனர். கடந்த ஆண்டு 200 பேர். இறப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதற்காக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. இவ்வளவு ஊடகங்கள் இருந்தும், இந்த நோய் குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்க முடியவில்லை என்பதும், நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதும் மருத்துவத் துறைக்கு விடப்பட்டுள்ள சவால்கள்.
இந்த நோய்த் தாக்குதலை முதலிலேயே கண்டறிவதும், அது தொடங்கிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதும், சிறப்பு முகாம்கள் ஏற்படுத்துவதும் உடனடியாக நிகழ்வதில்லை. இத்தகைய மரணங்கள் பெரும்பாலும் மர்மக் காய்ச்சல் என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இந்த மர்மக் காய்ச்சலால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான், அரசும், சுகாதாரத் துறையும் களம் இறங்குகின்றன. மர்மக் காய்ச்சல் தொடங்கியபோதே ரத்தப் பரிசோதனைகள் மூலம் நோயின் தன்மையை அறிந்து, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டால் மரணங்கள் தவிர்க்கப்படும்.
அண்மையில், கரூர் மாவட்டம் தோகைமலையில் ஓர் இளைஞர் மர்மக் காய்ச்சலால் மரணமடைந்தார். காரணம், அவருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாதாரண காய்ச்சலுக்கான மருந்துகளை மட்டுமே கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். காய்ச்சல் குறையாத நிலையில் மீண்டும் அழைத்து வந்தபோது அந்த நோயாளியை ஆம்புலன்ஸில் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கத் தவறிவிட்டனர். இதனால், இரண்டு மருத்துவ ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். ஆக, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உடனடியாக சிறப்பு மையத்துக்கு மாற்றுவது மட்டுமே உயிரைக் காப்பாற்றும் என்பதால், அனைத்து சிறப்பு மையங்களிலும் எப்போதும் ஆம்புலன்ஸ் இருக்க வகை செய்வது அரசின் கடமை.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் அவர்களாகவே சுய மருத்துவம் செய்துகொள்ளும் போக்குதான், பல மரணங்களுக்கு முதன்மைக் காரணம். பன்றிக் காய்ச்சல் தொற்று அதிகமாக இருக்கும் காலங்களில், மருந்துக்கடை ஊழியர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுய மருத்துவத்துக்குத் துணை போகாமல், அவர்களைப் பன்றிக் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாமுக்கு சென்று இலவச மருத்துவ வசதியைப் பெற அறிவுறுத்தும்படி செய்ய வேண்டும்.
பன்றிக் காய்ச்சல் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகளையும் உள்படுத்துவது, அந்தக் காய்ச்சலை அறியும் ரத்தப் பரிசோதனை வசதியை ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மருத்துவமனையிலும் கட்டாயமாக்குவது, காய்ச்சல் குறையாதபோது அவர்களை உடனடியாக சிறப்பு மையத்துக்கு மாற்றுவது ஆகிய நடவடிக்கைகள் மரணங்களை பெருமளவு குறைக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

