மகேசன் தீர்ப்பு!

சுதந்திர இந்தியாவின் சரித்திரம் எழுதப்படும்போது, நேற்று முடிவுகள் வெளியாகி இருக்கும் 6-ஆவது தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சாதனைத் தேர்தலாக நிச்சயம் பதிவு செய்யப்படும்.
Updated on
2 min read

சுதந்திர இந்தியாவின் சரித்திரம் எழுதப்படும்போது, நேற்று முடிவுகள் வெளியாகி இருக்கும் 6-ஆவது தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சாதனைத் தேர்தலாக நிச்சயம் பதிவு செய்யப்படும். 49 நாள்கள் முதல்வராக இருந்து கடந்த பிப்ரவரி 14-ஆம் நாள் பதவி விலகிய அரவிந்த் கேஜரிவால், அதே நாளில் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கிறார். கடந்த முறை சிறுபான்மை அரசின் முதல்வராகப் பதவி வகித்த அரவிந்த் கேஜரிவால், இப்போது அசுரப் பெரும்பான்மை பலத்துடன் மறுபடியும் ஆட்சி அமைக்க இருக்கிறார்.

சுதந்திர இந்திய வரலாற்றில் இப்படியொரு ஆழிப்பேரலை வெற்றியை அரவிந்த் கேஜரிவாலைத் தவிர இதுவரை யாரும் நிகழ்த்திக் காட்டியதில்லை என்பது உண்மைதான் என்றாலும், ஊடகங்களின் ஒட்டுமொத்த வெளிச்சமும் குவிந்திருக்கும். தலைநகர் தில்லியில் நிகழ்ந்திருப்பதால் இதற்கு முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. 1989-ஆம் ஆண்டில் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சிக்கிம் சங்க்ராம் பரிஷத் கட்சி அத்தனை தொகுதிகளை வென்றபோதும், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில், அப்போது மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரஸிலிருந்து வெளியேறித் தனிக்கட்சி அமைத்து வெற்றி பெற்று புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி அமர்ந்தபோதும் அந்த வெற்றிகளை மத்திய ஆட்சிக்கு எதிரான வாக்கு என்று யாரும் வர்ணிக்கவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதுவே பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு எதிரான தீர்ப்பு என்று கூறிவிட முடியாது. 1980 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்திக்கு ஆதரவாக தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்கள், அன்றைய எம்.ஜி.ஆர். தலைமையிலான அண்ணா தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தபோது மீண்டும் எம்.ஜி.ஆரையே முதல்வராகத் தேர்ந்தெடுத்ததை இங்கே நாம் நினைவுகூர வேண்டும்.

இதை ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி என்பதா இல்லை அரவிந்த் கேஜரிவாலின் வெற்றி என்பதா என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை. கடந்த முறை முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவி வகித்த 49 நாள்களில், தில்லியில் சாதாரண அடித்தட்டுக் குடிமகன் கண்கூடாகக் கண்ட மாற்றம்தான் இந்த இமாலய வெற்றிக்குக் காரணம் என்று கூற வேண்டும். தெருவோர வியாபாரிகள், குடிசைப்புறவாசிகள், அரசு அலுவலகங்களில் குறைகளுக்குத் தீர்வு காணச் செல்லும் மத்தியதர, சாமானியக் குடிமகன் என்று தலைநகர்வாழ் மக்களில் பலரும், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதைக் கண்கூடாகக் கண்டனர். மாமூல் கேட்காத காவல்துறையினரும் அரசு ஊழியர்களும், மக்களின் குறைகளை நேரில் போய் கேட்டறிந்த மக்கள் பிரதிநிதிகளும்தான் அந்த மாற்றத்திற்கான காரணங்கள்.

கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போதே, ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதன் மூலம் வாக்குகள் பிளவுபட்டு காங்கிரஸ் வெற்றி பெற்று விடுமோ என்கிற ஐயப்பாட்டில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தவர்கள் பலர். ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்று தெரிந்திருந்தால், தனிப்பெரும்பான்மையுடன் கடந்த தேர்தலிலேயே ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கக் கூடும். இந்த முறை போட்டி ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் என்பது தெளிவாக இருந்ததால், மக்களின் ஏகோபித்த ஆதரவு ஆம் ஆத்மிக்குக் கிடைத்ததிலும், தில்லி சட்டப்பேரவையில் 70 இடங்களில் 67 இடங்களை அந்தக் கட்சி வென்றதிலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மி அடைந்திருக்கும் வெற்றி மகத்தானது. அதேநேரத்தில் ஆட்சியில் அமர இருக்கும் அந்தக் கட்சி எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் அதைவிட மகத்தானவை. தில்லி அரசு இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருப்பது போன்ற அதிகாரங்கள் இல்லாத ஒன்று. தில்லி முதல்வருக்குக் கட்டுப்பட்டதல்ல காவல்துறையும், இந்திய அரசுப் பணியினரும். நிதி நிர்வாகம் என்று எடுத்துக் கொண்டாலும் தில்லி அரசு மத்திய நிதியமைச்சகத்தைச் சார்ந்துதான் இருந்தாக வேண்டும். தில்லி அரசோ, முதல்வரோ நினைத்தால், ஓர் அங்குலம் நிலத்தைக்கூடத் தன்னிச்சையான அதிகாரத்துடன் பயன்படுத்த முடியாது.

இவை மட்டுமல்ல. தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் தில்லி அரசு அண்டை மாநிலங்களான ஹரியாணாவையும், ராஜஸ்தானையும், உத்தரப் பிரதேசத்தையும்தான் சார்ந்திருக்க வேண்டும். முன்பு காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, ஹரியாணாவிலும், ராஜஸ்தானிலும் அந்தக் கட்சியே ஆட்சியில் இருந்ததால்தான், அன்றைய முதல்வர் ஷீலா தீட்சித்தால் பிரச்னையில்லாமல் ஆட்சி நடத்த முடிந்தது. இப்போது, பாஜகவின் தயவில்லாமல் அரவிந்த் கேஜரிவால் மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதுதான் அவர் எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய சிக்கல்.

கூட்டாட்சித் தத்துவத்தில், மாற்றுக் கட்சியினர் ஆட்சியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதுதான் அடிப்படை தர்மம். தில்லியில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சியும், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சியும் மக்களின் நலனுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோம்.

இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் எதிர்பார்ப்பது மாற்றத்தை, மாற்றை அல்ல என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கும் தில்லிவாழ் மக்களின் தீர்ப்பு, சாதாரணத் தீர்ப்பல்ல, மகேசன் தீர்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com