மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தனது முதல் ரயில்வே நிதிநிலை அறிக்கை உரையைப் படிக்கத் தொடங்கிய 15-ஆவது நிமிடத்திலேயே "பயணிகள் கட்டண உயர்வு இல்லை' என்பதை அறிவித்து, அனைவரது மன அழுத்தங்களையும் குறைத்துவிட்டார். அடுத்து, புதிய ரயில்கள் ஆய்வுகள் முடிந்தபிறகே அறிவிக்கப்படும் என்று அவர் சொல்லிவிட்டதால், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் உடனடியாக குறைபட்டுக்கொள்ள ஏதுமில்லாமல் போனது. ஆகவே, இது விமர்சனத்துக்கு இடமில்லாத ரயில்வே நிதிநிலை அறிக்கை.
நிதிநிலை அறிக்கை முழுவதும் ரயில்வே மேம்பாடு, பயணிகள் வசதிகளை அதிகரித்தல், தூய்மையான ரயில், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா, 5 நிமிடத்தில் டிக்கெட் பெறும் எளிய நடைமுறை, புகார் செய்ய கட்டணமில்லா தொலைபேசி, 9 வழித்தடங்களில் ரயில் வேகத்தை 200 கி.மீ. ஆக்குதல், கடற்கரை ரயில் வழித்தடம் அமைத்தல், 3,438 ஆளில்லா ரயில் கடவுகளில் ரூ.6,581 கோடியில் பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தல் போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
1000 மெகா வாட் சூரியஒளி மின் உற்பத்தித் திட்டத்துக்கு ஒப்புதலும், மின் கட்டணத்தை சமாளிக்க, தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடம் முன்னதாகவே மின் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கவை. இதனால், சுமார் ரூ.3,000 கோடி மிச்சமாகும் என்று கணிக்கப்படுகிறது. ரயில் பயணிகளுக்கான வசதிகளை அளிப்பதில் எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிட அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
ரயில்வே துறைக்கு நான்கு இலக்குகளை நிர்ணயித்திருக்கிறார் அமைச்சர். 1. இனிமையான பயண அனுபவம் பெறச்செய்தல், 2. பாதுகாப்பான பயணம், 3. நவீன உள்கட்டமைப்புகள், 4. பொருளாதார ரீதியிலான ரயில்வே துறை தன்னிறைவுடன் செயல்படுதல். இந்த இலக்குகளை அடைவதற்கான வழிகளை கருத்தில் கொண்டே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறைக்கு இதுவரை குறைந்த முதலீடு செய்யப்பட்டதால்தான் அது சீரழிந்து கிடக்கிறது என்று தெரிவித்துள்ள அமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி ரயில்வே துறையில் முதலீடு செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக, சென்ற 2014-15-ஆம் ஆண்டைக் காட்டிலும் 52% கூடுதல் நிதி ஒதுக்கீட்டை 2015-16-ஆம் ஆண்டுக்காக அறிவித்துள்ளார். ரூ.1,00,011-க்கான நிதி ஒதுக்கீட்டில் 40% மத்திய நிதியுதவியில் அமைந்தது.
ரயில் தடத்தை 20% அதிகரிக்கச் செய்வதன் மூலம், அதாவது தற்போதுள்ள 1,24,000 கி.மீ. வழித்தடத்தை 1,38,000 கி.மீ. ஆக அதிகரிப்பதன் மூலம், ஒரு நாளைக்கு பயணிகள் எண்ணிக்கையை 2 கோடியிலிருந்து 3 கோடியாக உயர்த்த முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பயணச்சீட்டு வாங்கியிருப்போர் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில் பெட்டிகளை அதிகரிக்காதவரை, பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பது கடினம் என்பது அமைச்சருக்கு தெரியும் என்று நினைக்கிறோம்.
ரயில் முன்பதிவு செய்யும் காலம் 120 நாள்கள் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரிய பயன் கிடைக்காது. முன்பதிவில் உள்ள பிரச்னையே, பயண முகவர்கள் (டிராவல் ஏஜெண்டுகள்) இடங்களை முன்கூட்டியே முடக்கி (பிளாக்) வைத்துவிடுகின்றனர் என்பதுதான். இதற்கு ஒரு தீர்வு காணாமல், 120 நாள்கள் நீட்டிப்பு பயன் தராது. தட்கல் முன்பதிவில் முகவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், ரயில் புறப்படும் 24 மணி நேரத்துக்குள்தான் தட்கல் முன்பதிவு என்ற நடைமுறை வந்தது. இருப்பினும்கூட, ரயில் பயண முகவர்களின் ஆதிக்கம் குறையவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.
ரயில்வே தனியார் மயமாவது குறித்து இந்தப் பட்ஜெட் வெளிப்படையாக பேசவில்லை. அதற்கான கூறுகளை தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது.
உதாரணமாக, சில சுற்றுலா வழித்தடங்களில் ரயில் பெட்டிகளில் சிலவற்றை லாபப் பகிர்வு அடிப்படையில் பயண முகவர்களிடம் விட்டுவிட இருப்பதாக ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மொத்த ஒதுக்கீடு (பல்க் புக்கிங்) என்பதற்காக ஒரு தனிப் பெட்டியை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒதுக்குவதற்கும், ஒரு பெட்டியை பயண முகவர்களின் பொறுப்பில் கொடுத்து லாபத்தைப் பகிர்வதற்கும் வேறுபாடு உள்ளது. இதே நடைமுறையை அடுத்தகட்டமாக பயணிகள் விரைவு ரயிலில் புகுத்தக் கோருவார்கள். அதனால் எத்தகைய அவலங்கள் நேரும் என்பதை எடுத்துரைக்கத் தேவையில்லை. ரயில்வே நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்பு பெட்டிகளை ஒதுக்கலாம். ஆனால், லாபப் பகிர்வு அடிப்படையில் பயண முகவர்களிடம் ஒப்படைப்பது தவறான அணுகுமுறை.
பாதுகாப்புத் தொடர்பான அழைப்புகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி 182 அறிமுகம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. பயணிகளுக்கு உதவி செய்யும் எண் 138 புதிதல்ல. இந்த இணைப்புகள் ரயில் நிலையம் சார்ந்ததாக இல்லாமல், 108 ஆம்புலன்ஸ் செயல்படுவதைப் போல, மொத்த அழைப்புகளும் ஒரு பொது மையத்தால் கையாளப்படுதல் வேண்டும். இல்லையென்றால், இந்தத் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவே ஆள் இருக்காது.
ரயில் சுற்றுச்சூழலின் நண்பன் என்பதற்கு அமைச்சர் ஒரு புள்ளிவிவரம் தந்திருக்கிறார். சாலையில் வாகனங்கள் பயன்படுத்தும் பெட்ரோலிய எரிபொருளில் 7% மட்டுமே ரயில்வே துறை இந்தியா முழுவதிலும் பயன்படுத்துகிறது. கரியமில வாயு வெளிப்பாடும் மற்ற வாகனங்களைவிட 80% குறைவு. நினைக்கவே பெருமிதமாக இருக்கிறது. ஏன் ரயில் வழித்தடங்களை பெருக்கவும், அதிக எண்ணிக்கையில் ரயில்களை இயக்கவும் நாம் தவறினோம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படுக்கை விரிப்புகள்

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

