அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயம் முடிந்த கையோடு, வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் மாற்றப்பட்டு, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கர் புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சுஜாதா சிங்கின் பதவிக்காலம் முடிய இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அவர் திடீரென பதவி விலக்கப்பட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
அதிகாரிகளை இடம் மாற்றுவதோ, பதவியிலிருந்து அகற்றுவதோ ஆட்சியாளர்களின் விருப்பம்தான் என்றாலும், சில குறிப்பிட்ட துறைகளின் செயலர்களுக்கு குறைந்தபட்ச பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வெளிவிவகாரத் துறையின் செயலராக நியமிக்கப்படுபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார்கள் என்பது நடைமுறை. அப்படி இருக்கும்போது, அதிபர் ஒபாமாவின் இந்திய விஜயம் முடிந்தும் முடியாததுமாக சுஜாதா சிங் ஏன் பதவி விலக்கப்பட்டார் என்பதுதான் வெளிவிவகாரத் துறை அதிகாரிகள் எழுப்பும் கேள்வி.
சுஜாதா சிங், ஜெய்சங்கர் இருவருமே திறமைசாலிகள் என்று அறியப்பட்ட வெளியுறவுத் துறை அதிகாரிகள். இருவரும் சம காலத்தவர்கள் என்பது மட்டுமல்ல, பல பொறுப்பான பதவிகளை வகித்தவர்களும்கூட. தனது பதவிக்காலம் குறைக்கப்பட்டு, புதிய வெளிவிவகாரத் துறைச் செயலர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுஜாதா சிங் தனது சக வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு, தான் விடை பெறுவதாக இணையஞ்சல் மூலம் செய்தி அனுப்பி இருக்கிறார். அதில், தான் ஓய்வு பெற விரும்புவதாக ஏற்கெனவே அரசிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சுஜாதா சிங்கின் கூற்று உண்மையாகக்கூட இருக்கலாம். அப்படி இருக்குமானால், அரசு ஏன் அதைத் தெளிவுபடுத்தவில்லை? சுஜாதா சிங்குக்கு பதிலாக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்குப் பதிலாக, சுஜாதா சிங் விருப்பு ஓய்வு பெற விரும்புவதால் அவருக்குப் பதிலாக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தால் இப்படியொரு சர்ச்சைக்கே இடமிருந்திருக்காதே.
வெளியுறவுச் செயலர்கள் பதவியிலிருந்து அகற்றப்படுவது புதிதல்ல. இதற்கு முன்னர் ஜகத் மேத்தா, ஏ.பி. வெங்கடேஸ்வரன், எஸ்.கே. சிங் ஆகிய மூன்று வெளியுறவுச் செயலர்கள் முந்தைய ஆட்சியாளர்களால் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே அகற்றப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, ஏ.பி. வெங்கடேஸ்வரன் வெளியேற்றப்பட்ட விவகாரம் இன்றுவரை வெளியுறவுத் துறை அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது. முக்கியமான ஒரு துறையின் செயலராக இருந்த ஏ.பி. வெங்கடேஸ்வரனை மாற்றப் போவதாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு இடையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அறிவித்தது அவரை அவமானப்படுத்துவதாக அமைந்தது.
புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெய்சங்கர் திறமைசாலி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர் இந்தியாவுக்கான சீனத் தூதுவராக இருந்தபோதே அவரது செயல்பாடுகளால் பிரதமர் நரேந்திர மோடி கவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரதமரின் அமெரிக்க விஜயத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிக் காட்டியவர் என்பது மட்டுமல்லாமல், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சமீபத்திய இந்திய விஜயத்துக்கும் ஜெய்சங்கர்தான் முக்கியமான காரணம் என்பதால் பிரதமருக்கு அவரது செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
முந்தைய மன்மோகன் அரசிலும் மிக முக்கியமான பொறுப்புகளை வகித்தவர் ஜெய்சங்கர். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இந்தியாவின் தூதுவராக அவரை நியமித்தது முந்தைய மன்மோகன் சிங் அரசுதான். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர் என்பதுடன், அதை நனவாக்கிய பெருமைக்குரியவரும் ஜெய்சங்கர்தான். அந்தவகையில், இந்தியாவின் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்படுவதற்காக முழுத் தகுதியும் அவருக்கு உண்டு என்பதை, சுஜாதா சிங் வெளியேற்றப்பட்டதை விமர்சிப்பவர்கள்கூட ஒப்புக்கொள்கிறார்கள்.
அமைச்சரவைச் செயலர், உள் துறைச் செயலர், நிதித் துறைச் செயலர், பாதுகாப்புத் துறைச் செயலர், வெளியுறவுத் துறைச் செயலர் ஆகிய ஐந்து மிக முக்கியமான பொறுப்புகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும்போதும், அவர்கள் அகற்றப்படும்போதும் சர்ச்சைகள் எழாமல் இருப்பது அவசியம். நேர்மையான அதிகாரிகள் ஆட்சியாளர்களால் அவமரியாதைப்படுத்தப்படுவது, துறையிலுள்ள ஏனைய அதிகாரிகளின் - குறிப்பாக இளைய தலைமுறை அதிகாரிகளின் - உற்சாகத்தையும் முனைப்பையும் மழுங்கடித்துவிடும்.
இன்னும் இரண்டு நாள்களில் ஜெய்சங்கர் ஓய்வு பெற இருப்பதால், அவரது பதவிக் காலத்தை நீட்டிப்பதற்காக அவர் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் வாதத்தில் அர்த்தமில்லை. அடுத்த நபர் நியமிக்கப்படும் வரை அமெரிக்கத் தூதுவராக ஜெய்சங்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். சுஜாதா சிங் எட்டு மாதங்களில் ஓய்வு பெற்ற பிறகு வெளியுறவுத் துறை செயலராக ஜெய்சங்கரை நியமித்திருக்கலாம். குறைந்த பட்சம், சுஜாதா சிங்கிற்கு அவரது பணி மூப்பு அடிப்படையில் தகுந்த வேறொரு பதவி அளிக்கப்பட்டிருக்கலாம். அதையெல்லாம் விடுத்து, இப்படியொரு அவசர முடிவை நரேந்திர மோடி அரசு எடுத்திருக்க வேண்டாம்.
ஓர் அரசின் வெற்றிக்கு, ஆட்சியாளர்களின் திட்டங்களை முழு மனதுடன் நிறைவேற்றும் நிர்வாக இயந்திரம் இன்றியமையாதது. அரசுப் பணி அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி நிலவினால் அது ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல.
ஏனைய துறைச் செயலர்களுக்கு இரண்டாண்டு பதவிக் காலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வெளியுறவுத் துறைச் செயலருக்கு மட்டும் எதற்காக இப்படியொரு விதி விலக்கு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா: தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்

அன்னைக்காக வாக்களிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த மகன்

ராம்குமாா் மரணம் தொடா்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

