சாதி, சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு விவரம் வெளியாகியிருப்பது போலவே கல்வி, மருத்துவம் தொடர்பான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு (நேஷனல் சாம்பிள் சர்வே) அறிக்கையும் வெளியாகி இருக்கிறது. எல்லா அரசியல் தலைவர்களும் சாதி, சமூகப் பொருளாதார அறிக்கையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்க, தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கையைப் பற்றி யாரும் பேசுவதில்லை.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான அரையாண்டு காலத்தில் 66,000 குடும்பங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், இன்றைய இந்தியாவின் பிரச்னைகளைத் தோலுரித்துக் காட்டுகின்றன. நியாயமாகப் பார்த்தால், அரசும், அதிகாரிகளும், அரசியல் கட்சிகளும் இந்த அறிக்கைக்குத்தான் முன்னுரிமை தந்திருக்க வேண்டும்.
இந்த ஆய்வின் முடிவுகளை ஒரே வரியில் சொல்வதென்றால், கல்வி, மருத்துவம் ஆகிய இரு துறைகளிலும் தனியார் கோலோச்சுகிறார்கள், 20% பேர் கல்வி, மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு கடன் வாங்குகிறார்கள் என்பதுதான். கடந்த காலங்களில் ஒரு குடும்பத்தைத் திருமணச் செலவு மட்டுமே கடனாளி ஆக்கியது. இன்று அது மட்டுமல்லாமல், கல்வியும் மருத்துவமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
மருத்துவத்தைப் பொருத்தவரை, அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் எல்லா வசதிகளும் இருந்தாலும், மக்களுக்கு சேவை நோக்கத்துடன் பயன்படவில்லை என்பதாலும், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சோதனைக்கான கருவிகள் முறையாக இயங்காமலும் இயக்கப்படாமலும் இருப்பதாலும் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடும் போக்கு அதிகரித்து வருகிறது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஒரு குடும்பம் செலவிடும் தொகையைவிட, குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிகமாகத் தனியார் மருத்துவமனைகளில் செலவிட நேர்கிறது. புற்றுநோய், இருதய நோய்கள் தொடர்பான சிகிச்சைக்கு ஒரு சராசரி குடும்பம் தனது 15 மாத குடும்பச் செலவையும், வசதி படைத்தவர் என்றால் 5 மாதக் குடும்பச் செலவையும் செலவிடுகிறார்கள். இவர்களில் 85% பேர் மருத்துவக் காப்பீடு செய்யாதவர்கள். மூன்றில் இரண்டு குடும்பங்கள், மருத்துவச் செலவை ஈடு செய்ய தங்கள் சேமிப்பைக் கரைக்கின்றன. 20% குடும்பங்கள் மருத்துவச் செலவுக்காக வெளியே வட்டிக்குக் கடன் வாங்குகின்றன.
கல்வியைப் பொருத்தவரை, தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள் வரை இன்னமும்கூட அரசுப் பள்ளிகளே மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. ஆனால், பாலிடெக்னிக், பொறியியல், கலை - அறிவியல், கல்வியியல், செவிலியர், மருத்துவம் போன்ற உயர் கல்வியைப் பொருத்தவரை தனியார் கல்லூரிகளே மிக அதிகமாக இருக்கின்றன.
கிராமப்புற தனியார் பள்ளிகளில் ஒரு மாணவருக்காக ஒரு குடும்பம் சராசரியாக ரூ.10,000 செலவிடுகிறது. அதேநேரத்தில், நகர், மாநகரப் பகுதியில் இருந்தால், பள்ளிக் கட்டணம் சுமார் 5 மடங்கு அதிகமாகிவிடுகிறது. கல்லூரிக் கல்விக் கட்டணமும் இதேபோன்றுதான். சாதாரணமாக, ஒரு பட்டயப் படிப்புக்கு கிராமப்புறக் கல்லூரியில் ரூ.23,000 செலவு செய்தால், நகர்ப்புறக் கல்லூரியில் இதைவிடப் பல மடங்கு அதிகமாகச் செலவிட நேர்கிறது.
கணவர் - மனைவி ஆகிய இருவரது உழைப்பையும் சுரண்டும் களமாக தனியார் கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் வேகமாக உருவெடுத்து வருகின்றன என்றும், அரசுக் கல்வி நிறுவனங்களும், அரசு மருத்துவமனைகளும் நாளுக்குநாள் நலிந்துகொண்டே வருகின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மத்திய, மாநில அரசுகளைப் பொருத்தவரை ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கைகளில் உயர் கல்விக்கும், மருத்துவத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றாலும், இந்த நிதி முழுமையும் ஊழலாலும், அலுவலர்களின் பொறுப்பின்மையாலும், சுயநலப் போக்காலும் வீணடிக்கப்படுகிறது.
அரசுக் கல்வி நிறுவனங்களையும், அரசு மருத்துவமனைகளையும் தரமானதாக வைத்துக் கொள்ள முடியாதபடி அரசியல், சமூகச் சிக்கல்கள் இருப்பதாலும், அதிக ஊழியர்களை நியமிப்பதால் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவதாலும் இவற்றில் தனியாரை ஈடுபடுத்த வேண்டிய நிலைமை வந்தது என்று கூறப்பட்டது. ஆனால், இன்றைய சூழ்நிலை தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதற்காக அரசு நடத்தும் கல்வி, மருத்துவ நிறுவனங்கள் வலுவற்றுப் போகத் திட்டமிட்டு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
தனியார் மருத்துவமனை, தனியார் கல்லூரிகளின் பெருக்கம் காரணமாக கடும் போட்டிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அரசு வழங்கும் உதவித் தொகை, கல்விக் கடன், அரசு அளிக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் அனைத்தையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றி அபகரிக்கும் முயற்சியில் தனியார் கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு கட்டணமும், காப்பீட்டு வசதி உள்ளவர்களுக்கு அதிகக் கட்டணமும் வசூலிக்கப்படுவதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
அரசு நிறுவனங்களின் செயல்பாட்டையும், பயன்பாட்டையும் வலுப்படுத்துவதுடன், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அல்லது தனது கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயச் சூழல் அரசுக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிறது அறிக்கை. என்ன செய்யப் போகிறது அரசு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண் ரயில் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை! மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்: பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!
காஜிப்பூர் பாலியல் வன்கொடுமை: விசாரணை கோரி ராகுல் வலியுறுத்தல்!

புலி வந்துவிட்டது... தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்த மிட்செல் ஸ்டார்க்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

