நெடும் பயணத் தோழமை!

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியே வரவேற்கும் அளவுக்கு
Updated on
2 min read

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியே வரவேற்கும் அளவுக்கு அவரது வங்கதேசப் பயணம் அமைந்திருந்தது என்பதோடு, இரு நாடுகளுக்குமான உறவு மேலும் வலுவடைந்திருக்கிறது. வங்கதேசமும் மோடியின் வருகை பயனுள்ளதாக அமைந்தது என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது.
 காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்திருக்கக் காரணம், இந்தப் பயணத்தின்போது கையெழுத்தாகியுள்ள 22 ஒப்பந்தங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் நில எல்லை வரையறை ஒப்பந்தம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் வரைவு செய்யப்பட்டு, 41 ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருந்த ஒன்று. நில எல்லை வரையறையில் சில பகுதிகளை இந்தியாவும், வங்கதேசமும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கின்றன. இதில் நிலப் பரப்பைப் பொருத்தவரை வங்கதேசத்துக்கே பயன் அதிகம் என்று சொல்லப்பட்டாலும்கூட, இந்த விவகாரத்தை வெறும் நிலப் பரப்பை வைத்துப் பார்ப்பது கூடாது. தீவிரவாதத்தைத் தடுத்தல், எல்லையில் ஊடுருவலைத் தடுத்தல் ஆகிய இரண்டும்தான் இந்த நில எல்லை வரையறையின் முழு முதல் நோக்கம்.
 வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத இயக்கத்தினர், எப்போதெல்லாம் ராணுவத்தின் நெருக்குதல் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் வங்கதேச எல்லைக்குள் சென்றுவிடுவது வழக்கமாக இருக்கிறது. இதே சிக்கலை வங்கதேசமும் எதிர்கொண்டு வருகிறது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான இயக்கங்கள் இந்திய எல்லையைப் புகலிடமாகக் கொள்வதும் நிகழ்கின்றன. தற்போதைய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் ஒரு தீர்வாக அமையும்.
 தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு வங்கதேசம் துணையாக நிற்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றது. உல்பா தீவிரவாதிகள் சிலரைக் கைது செய்வது உள்பட பல்வேறு செயல்பாடுகள் மூலம் தனது தீவிரவாத எதிர்ப்பு நிலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வடகிழக்கு மாநிலத் தீவிரவாதிகளுக்கு புகலிடம் இல்லாத நிலையை வங்கதேசம் உருவாக்கும். இது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும்.
 தீஸ்தா நதி நீர் ஒப்பந்தம் இந்தப் பயணத்தின்போது கையெழுத்திடப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தை மூலம் நல்ல தீர்வு காணலாம் என்று பிரதமர் மோடி உறுதி கூறியுள்ளார். தீஸ்தா நதி நீர்ப் பங்கீட்டைப் பொருத்தவரை 50:50 என்ற அளவில் பகிர்ந்து கொள்வது என 2011ஆம் ஆண்டு கொள்கையளவில் உடன்பாடு ஏற்பட்ட போதிலும்கூட, நதிகள் மாநில அட்டவணையில் இருப்பதாலும், இந்த விவகாரத்தின் இறுதி முடிவு மேற்கு வங்கத்தைச் சேர்ந்தது என்பதாலும் இதில் உடனடி முடிவு காண இயலவில்லை என்று சொல்லப்படுகிறது.
 வங்கதேசத்தில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்படவுள்ள தடுப்பணை குறித்து இந்தப் பயணத்தில் பேசப்படவில்லை என்றாலும், ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்த வங்கதேச அமைச்சர்கள் இந்தத் திட்டத்தால் தேங்கும் நீர்ப் பரப்பு இந்திய எல்லைக்குள் நீளுகின்ற போதிலும்கூட (மேற்கு வங்கத்துக்கு) பாதகம் ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளதால், இதற்கு ஒப்புதல் அளிக்க இந்தியா தயாராக இருக்கிறது.
 இந்தப் பயணத்தில் வர்த்தகத்துக்கு முன்னுரிமை அளித்து, சாலைப் போக்குவரத்து, நதிகள், கடல்வழிப் போக்குவரத்துக்கு அதிகக் கவனம் தரப்பட்டுள்ளது. உடனடி நிதியுதவியாக 80 கோடி டாலரை இந்தியா வழங்குவதும், இதில் 20 கோடி டாலர் மானியமாக அளிக்கவிருப்பதும், வங்கதேசத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில் புரிந்துணர்வுக்காக 200 கோடி டாலர் செலவிடவிருப்பதும், நெடும் பயணத் தோழமைக்கான அடையாளங்கள்.
 மோடி எந்த நாட்டுக்குச் சென்றாலும், ஆட்சியாளர்களுடன் பேசுவதையும், எதிர்க்கட்சியினர், அந்நாட்டின் தொழிலதிபர்களைச் சந்தித்து இந்தியாவுக்குத் தொழில் தொடங்க வருமாறு அழைப்பதும் வழக்கம். வங்கதேசப் பயணத்தின்போதும் அவர் இதைச் செய்யத் தவறவில்லை. டாக்காவில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று, இந்தியர்களுடன் அளவளாவி, தனது வழக்கமான நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 இந்தப் பயணத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை உடன் அழைத்துச் சென்ற பிரதமர் மோடி, தன்னை அழைக்கவில்லை என்று அஸ்ஸôம் மாநில முதல்வர் தருண் கோகோய் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்திய, வங்கதேச எல்லை 4,096 கி.மீ. அளவுக்குச் செல்கிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் 2,200 கி.மீ. அமைகிறது. மற்ற மாநிலங்களான அஸ்ஸôம் (200 கி.மீ.) மேகாலயம், திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகள் சில நூறு கிலோ மீட்டர் அளவுதான்.
 வங்கதேசத்தோடு தொடர்புடைய மாநிலங்கள் மொத்தம் ஐந்து உள்ளன. இந்த ஒப்பந்தம் மற்றும் தரைவழி, நீர் வழிப் போக்குவரத்தில் அதிகம் தொடர்புடைய மாநிலமும், கங்கையின் குறுக்காக வங்கதேசம் அணை கட்டினால் பாதிக்கப்படப் போவதும், தீஸ்தா நதி ஒப்பந்தத்தால் பயன் அடையப் போவதும் மேற்கு வங்கம் மட்டுமே. ஆகவேதான், அந்த மாநில முதல்வரை மோடி அழைத்துச் சென்றார் என்பதைத் தருண் கோகோய் மறந்து விட்டார் போலும்.
 வங்கதேசத்துடனான உறவு பலப்படுகிறது என்பது மட்டுமல்ல, தெற்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தவும் பிரதமரின் அரசு முறைப் பயணம் உதவும். அண்டை நாடுகளுடனான சுமுக உறவை உறுதிப்படுத்தாமல் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியாது என்கிற யதார்த்தத்தைப் பிரதமர் உணர்ந்து செயல்படுவதற்குப் பாராட்டுகள்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com