கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு 2015-ஐ ரத்து செய்த உச்சநீதிமன்றம், இத்தேர்வை நான்கு வாரங்களுக்குள் மீண்டும் புதிதாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பினால் மாணவர்களுக்கும், இத்தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கும் சற்று சிரமங்கள் ஏற்படும் என்றாலும், நான்கு வாரங்களுக்குள் தேர்வு நடத்தி முடிவு காண்பது மிகவும் கடினம் என்று தேர்வு நடத்துவோர் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்தாலும், இதைத் தவிர வேறு வழியே இல்லை. இதுதான் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும். இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், உடனடியாக மறுதேர்வை நடத்தி முடிவுகள் அறிவிப்பது சாத்தியமே.
ஒவ்வொரு கல்லூரியிலும் அவர்கள் சேர்க்கும் முதலாண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 15 சதவீதத்தை அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்க வேண்டும். 3,084 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்களும், 297 பல் மருத்துவ படிப்புக்கான இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டில் கிடைக்கிறது. இந்த இடங்களில் சேர்வதற்காக சுமார் 6.30 லட்சம் பேர் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி தேர்வு எழுதினர்.
இத்தேர்வின்போது 123 விடைகள் 75 செல்லிடப்பேசி மூலம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் அதிநுட்பமான கேட்புக் கருவிகளை தங்கள் ஆடைக்குள் மறைத்து வைத்துத் தேர்வு எழுதியுள்ளனர். இந்த மோசடியால் குறைந்தபட்சம் 700 மாணவர்கள் பயனடைந்திருப்பார்கள் என்று ஹரியாணா காவல் துறை அறிக்கை அளித்துள்ளது.
ஒரு சிலரைக் கைது செய்திருந்தாலும், இதில் தொடர்புடைய முக்கியமான நபர் கைது செய்யப்படவில்லை. மோசடியாகத் தேர்வு எழுதிய மாணவர்களையும் போலீஸôர் கைது செய்யவில்லை. இந்த நிலையில்தான், தேர்வை மீண்டும் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவால் மாநில அளவிலான மருத்துவ மாணவர் கலந்தாய்வு பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களை வழக்கம்போல நிரப்பாமல் வைத்து, மற்ற இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவார்கள். அனைத்து மாணவர்களும் சேர்ந்த பிறகுதான் பாடம் நடத்தத் தொடங்க வேண்டும் என்பதால், வகுப்புகள் தொடங்குவது நான்கு வாரங்கள் தள்ளிப் போகலாம். அதனால் பெரும் பாதகம் ஏதுமில்லை.
மருத்துவ நுழைவுத் தேர்வில் 3 லட்சம் பேரும், பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) 13 லட்சம் பேரும் தேர்வு எழுதக் காரணம் - இதில் வெற்றி பெற்று, இடம் கிடைத்தால் மிகக் குறைந்த செலவில் மருத்துவம் அல்லது பொறியியல் படித்துவிட முடியும் என்பதுதான். ஆகவேதான், தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாணவரிடமும் பல ஆயிரம் ரூபாய் கறக்கின்றன. இத்தகைய நிறுவனங்கள்தான் மாணவர்களுக்கு முறைகேடான வழியில் விடைகளை அளிக்கவும் முற்படுகின்றன.
தமிழ்நாடு போல, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தினால், பள்ளிகளே மோசடியில் இறங்குகின்றன. அதன் விளைவுதான் ஒசூரில் கட்செவித் தகவல் மூலம் ஆசிரியர்கள் விடைகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவம். வெளியே வராத பல நிகழ்வுகளும் உண்டு.
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன் எஸ். வைத்யசுப்ரமணியம் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையில், "பொறியியல் படிப்புக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும், ஜே.இ.இ. தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும் கூட்டி மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும்' என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து புதிதல்ல. தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்கு முன்புவரையிலும், மருத்துவம், பொறியியல் இரண்டுக்குமே நடைமுறையில் இருந்த வழக்கம்தான். நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வு மதிப்பெண் கூட்டித்தான் கட்ஆஃப் மதிப்பிடப்பட்டது.
கிராமத்து மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பே கிடைப்பதில்லை என்றும், அவர்களால் நகர மாணவர்களுக்கு இணையாகப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதும், பயிற்சி பெறுவதும் சாத்தியமில்லை என்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த நடைமுறை நீக்கப்பட்டுவிட்டது.
அதன் விளைவாக, இன்று உயர் கல்வியின் தரம் மிகவும் குறைந்துவிட்டது. பொறியியல், மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் விகிதமும் குறைந்து கொண்டே வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தேர்ச்சி விகிதப் பட்டியலில் மாணவர் தேர்ச்சி அதிகம் பெற்ற கல்லூரிகள் 15 மட்டுமே. மற்ற கல்லூரிகள் தரமற்றவையா என்றால், அப்படியும் இல்லை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்ந்த மாணவர்கள் திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.
மருத்துவக் கல்வியிலும் இதேதான் நிலை. தேர்ச்சி மதிப்பெண் குறித்த சில விதிமுறைகளை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் புகுத்தியபோது பெரும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மாணவர்களே.
நுழைவுத் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண் இரண்டையும் கூட்டிவரும் கட்ஆஃப் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தால் மட்டுமே திறமையான மாணவர்கள் உயர்கல்விக்கு வருவார்கள். கல்வித் தரம் தாழாது. கல்வித் தரம் கல்லூரியாலும், ஆசிரியர்களாலும் மட்டுமே வந்துவிடாது. மாணவர்களின் திறன் மிகவும் இன்றியமையாதது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்புக்குரியது. அதேநேரத்தில், உயர் கல்வியின் தரம் உயர்த்தப்படுவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியது. தாமதம் விபரீதத்தில் முடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.