நிதிநிலை அறிக்கை 2015 -II

வணிகக் கூட்டாண்மை நிறுவன வரி 30 விழுக்காடாக இருந்ததை நிதியமைச்சர் 25 விழுக்காடாகக் குறைத்து அவர்களுக்கு மிகப்பெரிய சலுகையை அளித்து விட்டிருக்கிறார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டும், நிதிநிலை அறிக்கையில்
Updated on
2 min read

வணிகக் கூட்டாண்மை நிறுவன வரி 30 விழுக்காடாக இருந்ததை நிதியமைச்சர் 25 விழுக்காடாகக் குறைத்து அவர்களுக்கு மிகப்பெரிய சலுகையை அளித்து விட்டிருக்கிறார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டும், நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அறிவிப்புகளை முறையாகவும் முழுமையாகவும் படிக்காமல், ஏதாவது குற்றம் சாட்ட வேண்டுமே என்பதற்காக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.

கூட்டாண்மை நிறுவன வரி 30% என்று பெயர்தானே ஒழிய, எந்தவொரு நிறுவனமும் 30% வரியைச் செலுத்துவதில்லை. கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பல்வேறு விதமான வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கூட்டாண்மை நிறுவனங்கள் மட்டுமல்ல, உற்பத்தி தொடர்பான தொழில் நிறுவனங்கள் அனைத்துமே வரி விதிப்பில் பல சலுகைகளைப் பெறுகின்றன.

குறிப்பிட்ட சில பகுதிகளில் தொழிற்சாலை நிறுவுவது, குறிப்பிட்ட பொருளின் தயாரிப்பில் ஈடுபடுவது, ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிப்பில் ஈடுபடுவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக கூட்டாண்மை நிறுவனங்களுக்கு தொழில் தொடங்கிய ஐந்தாண்டுகளுக்கு மொத்த வரியில் குறிப்பிட்ட விழுக்காடு வரிச் சலுகையாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற வரிச் சலுகைக்கு பல காரணங்கள் கூட்டாண்மை நிறுவன வரிச் சட்டத்தில் தரப்பட்டிருக்கின்றன. அவற்றைக் காரணம் காட்டி ஒவ்வொரு நிறுவனமும் ஏதாவது ஒரு விதத்தில் மொத்த வரியில் சில விழுக்காடுகள் வரிச் சலுகை பெறுகின்றன.

அதன்படி 30% வரிச் சலுகை என்று சொன்னால், 30% மொத்த வருமான வரியில் வரிச் சலுகை 30% போக அந்த நிறுவனம் உண்மையில் செலுத்தும் வரி வெறும் 21% மட்டுமாகத்தான் இருக்கும். 20% வரிச் சலுகை என்று சொன்னால், மொத்த வரியில் 20% கழிக்கப்பட்டு, உண்மையில் அந்த நிறுவனம் அரசுக்குத் தரும் வரியானது 24% மட்டுமே.

நிறுவனங்கள் வரிச் சலுகை கோருவதும், அதை வருமான வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதும், கூட்டாண்மை நிறுவனங்கள் மேல் முறையீடு செய்வதும், இப்படி தாவாவில் நிலவும் மேல் முறையீடுகள் லட்சக்கணக்கில் தேங்கிக் கிடப்பதும், இதற்கு முன்னால் இருந்த அரசுகளோ, நிதியமைச்சர்களோ கவலையே படாமல் விட்டு விட்டவை. நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் கவனத்தை இந்தப் பிரச்னை எப்படிக் கவர்ந்தது என்பதே வியப்பாக இருக்கிறது.

ஒருபுறம் கூட்டாண்மை நிறுவனங்களின் லாபத்தின் மீதான வரி விதிப்பை 30% இருந்து 25%மாகக் குறைப்பதுபோலக் குறைத்திருக்கும் நிதியமைச்சர், வரிச் சலுகைகளை ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டி அகற்றி விட்டிருக்கிறார் என்பது யார் கண்ணிலும் படாமல் போவது ஏன்? ஏறத்தாழ ரூ.4 லட்சம் கோடிக்கான மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பது யாருக்காவது தெரியுமா?

வரிச் சலுகைகள் என்று இருந்தால் அதனால் வருமான வரித் துறைக்கும் வரி விதிக்கப்படுபவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு வருவதும், வரி விதிப்பை எதிர்த்து மேல் முறையீடுகள் குவிவதும் மட்டுமல்ல பிரச்னை. இந்த வரிச் சலுகைகளைப் பெறவும், அதைக் காரணம் காட்டி அதிகாரிகளின் மிரட்டலுக்குப் பயந்து பல கோடி ரூபாய் லஞ்சம் புழங்கவும் இடமிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக கூட்டாண்மை நிறுவனங்களின் லாபத்தின் மீதான வரி 5% குறைக்கப்படும் வேளையில், வரிச் சலுகைகள் அகற்றப்படுவதால் அரசுக்கு வரி இழப்பு எதுவுமே ஏற்பட்டுவிடப் போவதில்லை. தேவையில்லாத மேல்முறையீடுகள் தவிர்க்கப்பட்டு, வருமான வரி அலுவலகங்கள் முறையாகச் செயல்படும் நிலைமையை ஏற்படுத்தும்.

கூட்டாண்மை நிறுவன வரி என்று சொன்னால், அது ஏதோ பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுக்கான வரி மட்டுமே என்று நினைத்துவிடக் கூடாது. சிறு தொழிற்சாலைகளும்கூட இந்தப் பட்டியலில் இடம் பெறுபவை என்பதை நாம் மறந்துவிடலாகாது. வரிச் சலுகைகள் அகற்றப்பட்டிருப்பதால் அதிகம் பாதிப்பை எதிர்கொள்ளப் போவது, பன்னாட்டுக் கூட்டாண்மை நிறுவனங்கள்தானே தவிர, குறைந்த அளவு வரிச் சலுகைகளைப் பெறும் சிறுதொழில் முனைவோர் அல்ல என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும், உற்பத்தி பெருக வேண்டும், ஏற்றுமதியில் அன்னியச் செலாவணி இருப்பு அதிகரிக்க வேண்டும், ஏற்றுமதி - இறக்குமதி விகிதம் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று சொன்னால், அதிக அளவில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாக வேண்டும். வெட்டிப் பேச்சு பேசுவதால் தொழில் வளம் பெருகிவிடாது. அதற்கு அன்னிய முதலீட்டாளர்களும் தேவை, வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களும் தேவை.

அன்னிய முதலீடுகள் அதிகரிக்கவும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவவும், உள்நாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் உற்சாகமாக உற்பத்திக்கான முயற்சிகளில் ஈடுபடவும் பொருளாதாரக் கொள்கையில் உறுதியான நிலைப்பாடுகள் இருந்தாக வேண்டும். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான எங்களது அரசின் நிதிக் கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் இவைதான் என்பதைத் தெளிவுபடுத்தும்போது மட்டுமே முதலீட்டாளர்கள் துணிந்து இறங்க எத்தனிப்பார்கள்.

முந்தைய மன்மோகன் சிங் அரசு போல கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பெரிய அளவில் சலுகைகளை வாரி வழங்காமலும், அதேநேரத்தில் அவர்களுக்கு நிலையான பொருளாதாரக் கொள்கையையும், அணுகுமுறையையும் தெளிவுபடுத்தி உற்சாகப்படுத்தவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் முடிந்திருக்கிறது என்பதுதான் இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சம்!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com