ஆண்டுதோறும் நிதியமைச்சரால் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், ஒரு சில நிதிநிலை அறிக்கைகள் மட்டும் சில முக்கிய அறிவிப்புகளுக்காகத் தனித்துவமும் முக்கியத்துவமும் பெற்று விடுகின்றன. மொரார்ஜி தேசாயின் 1968-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்திற்காகவும், 1987, 1997 நிதிநிலை அறிக்கைகள் கருப்புப் பணப் பதுக்கலுக்குப் பொது மன்னிப்பு அறிவித்ததற்காகவும், 1991 நிதிநிலை அறிக்கை பொருளாதார சீர்திருத்த அறிவிப்புக்காகவும் நினைவுகூரப் படுகின்றன. அந்த வரிசையில் அருண் ஜேட்லியின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அறியப்படப் போவது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்படும் கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைக்காகத்தான் இருக்கும்.
கருப்புப் பணத்தை மீட்டெடுத்துக் கொண்டு வருவதிலும், வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கப்படுவதைத் தடுப்பதிலும் அரசு முனைப்பாகவே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது இந்த நிதிநிலை அறிக்கை. இதற்கு முந்தைய மன்மோகன் சிங் அரசும் 2009 மக்களவைத் தேர்தலின்போது, பதவிக்கு வந்த நூறு நாள்களில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதற்கான முனைப்பு எதையுமே காட்டாமல் இருந்தது என்பது மட்டுமல்ல, அன்னிய நாடுகளின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்று காரணமும் கூறியது.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தைத் திரும்பப் பெறுவது என்பது எளிதானதல்லதான். ஆனால் அதற்கான முயற்சிகளில்கூட ஈடுபடாமல் இருந்தால் எப்படி? நரேந்திர மோடி அரசும் மன்மோகன் சிங் அரசைப் போலவே கருப்புப் பண விவகாரத்தில் பின்வாங்குகிறதோ என்கிற சந்தேகத்தை இந்த நிதிநிலை அறிக்கை உடைத்து எறிந்திருக்கிறது.
வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்தால் பத்தாண்டு கடுங்காவல் சிறை. பிணையில் வெளியில் வர முடியாது. பொருளாதாரக் குற்றத்திற்காக இந்த அளவுக்குக் கடுமையான சட்டம் கடந்த 67 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டதில்லை. அதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் சொத்து, சேமிப்பு என்று வைத்திருப்பவற்றைத் தங்களது வருமான வரி தாக்கலில் தெரிவிக்காமல் மறைத்தால் அதற்கு ஏழு ஆண்டுகள் தண்டனை என்று அந்தச் சட்டம் மேலும் கடுமையான விதிகளை ஏற்படுத்த இருக்கிறது.
ஏற்கெனவே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்க முடிகிறதோ இல்லையோ, இதுபோன்ற கடுமையான சட்டத்தின் விளைவாக இனிமேல் வெளிநாடுகளில் பதுக்கும் போக்கு நிச்சயமாகக் கட்டுப்படுத்தப்படும். வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்குபவர்கள் அரசியல் தொடர்புடையவர்கள், திரைப்படம் மற்றும் விளையாட்டுத் துறையினர், பெரும் தொழிலதிபர்கள் ஆகியோராகத்தான் இருக்க முடியும். அவர்களுக்கு எதிராக, அவர்
களைக் கட்டுப்படுத்தும் விதமாக ஓர் அரசு சட்டம் இயற்றுகிறது என்றால், அந்த ஆட்சியின் நேர்மையையும், கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற முனைப்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
இனிவரும் காலங்களில் வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கல் செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது என்பது சரி. ஆனால், ஏற்கெனவே பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை மீட்டெடுப்பது எப்படி? மொரீஷஸ், சீஷெல்ஸ் போன்ற நாடுகளுடன் நாம் நிதி முறைகேடுகள் தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளாத நிலையில் அங்கிருந்து பணத்தை எப்படிப் பெறுவது? யார் மீது வழக்குத் தொடர்வது? எப்படித் தண்டிப்பது?
அப்படியே கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டாலும், சர்வதேச நீதிமன்றத்திலா நாம் வழக்குத் தொடர முடியும்? அவர்கள் வலிய வந்து கருப்புப் பணத்திற்கு வரி செலுத்த முற்பட்டால், 300% அபராதம் என்று கூறுகிறார் நிதியமைச்சர். அதாவது பதுக்கி வைத்திருக்கும் மொத்தப் பணத்தையும் அரசுக்குச் செலுத்தி விட வேண்டும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது சாத்தியமானதுதானா? யாராவது இதற்கு சம்மதிப்பார்களா?
பொது மன்னிப்பு வழங்குவது என்பது தவறான முன்னுதாரணம்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை அவர்கள் தானாகவே முன்வந்து, கணக்குக் காட்டி இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால், அரசு பொது மன்னிப்புத் திட்டம் ஒன்றை வெளியிட்டாக வேண்டும். ஆறு மாதத்திற்குள் கணக்குக் காட்டி கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் தண்டனையிலிருந்து தப்பலாம் என்கிற ஆசையைக் காட்டி வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை திரும்பிப் பெறுவதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
சர்வதேச நிறுவனங்களின் கருத்துப்படி, உலகிலேயே வெளிநாடுகளில் மிக அதிகமாகக் கருப்புப் பணமும், முறைகேடான சொத்துகளும் பதுக்கி வைத்திருப்பவர்கள் இந்தியர்கள்தான். ஏறத்தாழ 6 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் பாதிக்குப் பாதி வரியாகவோ அபராதமாகவோ விதித்தாலும், குறைந்தது 3 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசுக்கு கிடைக்கும், மீதி 3 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவுக்கு திரும்பும்.
கருப்புப் பணத்திற்கு எதிராக நேர்மையுடன் ஓர் அரசு துணிந்து நடவடிக்கை எடுக்க முற்பட்டிருக்கிறது. துணிவுடன் சற்று சாதுர்யமும், புத்திசாலித்தனமும் சேர்ந்தால் மட்டுமே நரேந்திர மோடி அரசின் நோக்கம் நிறைவேறும் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.