கருப்புப் பணத்திற்கு எதிரான நிதியமைச்சரின் நடவடிக்கைக்கு எள்ளளவும் குறையாத முக்கியத்துவம் பெறும் நிதிநிலை அறிக்கையின் இன்னொரு அறிவிப்பு "முத்ரா' திட்டம். இந்தத் திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு நரேந்திர மோடி அரசின் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதுதான் இதன் முக்கிய அம்சம்.
கடந்த கால் நூற்றாண்டு காலமாகப் பெரிய தொழில் நிறுவனங்களும், பன்னாட்டுக் கூட்டாண்மை நிறுவனங்களும், நகைக் கடை, துணிக் கடை, உணவு விடுதிகள் உள்ளிட்ட வியாபார நிறுவனங்களும் ஏறத்தாழ 54 லட்சம் கோடி ரூபாய் வரை வெளிநாட்டு, உள்நாட்டு மூலதனத்தையும், கடனையும் பெற்றிருக்கின்றன. ஆனால், இவற்றால் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புகள் சில லட்சங்கள் மட்டுமே. ஒரு கோடியைக்கூட தொடவில்லை என்பதுதான் நிஜ நிலைமை.
நரசிம்ம ராவ் அரசில் தொடங்கி மன்மோகன் சிங் அரசு வரை, தொழில்வளம் பெருக வேண்டும், அதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்று கூறிவந்தார்களே தவிர, அவர்கள் கவனிக்காமல் விட்டுவிட்ட துறை, எந்தவித ஆதரவும் இல்லாமல் இந்தியா முழுவதும் இயங்கி வரும் சிறு தொழில்கள். தள்ளுவண்டிக் கடை, இஸ்திரி வண்டி, பெட்டிக் கடை, திண்ணையில் நடத்தப்படும் பலசரக்கு, காய்கறிக் கடை, செருப்பு தைப்பது, எலக்ட்ரீஷியன், பிளம்பர் வேலைகள், சைக்கிள் கடை, மோட்டார் மெக்கானிக்குகள், தெருவோர தேநீர்க் கடை, இளநீர் விற்பவர்கள் என்று இந்தியா முழுவதும் சிறிய அளவில் சுயதொழில் செய்து பிழைப்பு நடத்துபவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 6 கோடிக்கும் அதிகம். ஏறத்தாழ 13 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பாகவும், வாழ்வாதாரமாகவும் இந்தச் சுயதொழில்கள் அமைந்திருக்கின்றன.
இந்தத் துறையைப் பற்றி முந்தைய அரசுகள் கவலைப்படாததற்குக் காரணம், அவர்களது மேற்கத்திய சிந்தனையும், உலக வங்கி சர்வதேச நிதி ஆணையத்தின் வழிகாட்டுதலும்தான். வளர்ச்சி அடைந்த நாடுகளில் இதுபோன்ற தெருவோர வியாபாரங்கள், கடைகள் போன்றவை சட்ட விரோதமானவை. எல்லாமே முறையாகப் பதிவு செய்து, முறைப்படி உரிமம் பெற்றுதான் நடத்த முடியுமே தவிர, இந்தியாவில் இருப்பதுபோல திண்ணையில் பெட்டிக் கடையோ அல்லது சைக்கிள் பழுது நீக்கும் கடையோ நடத்திவிட முடியாது. இங்கே அப்படியல்ல.
இந்தத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களில் பலர் பத்தாம் வகுப்புக்கூட படிக்காதவர்கள். ஏன் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் பலர். அவர்கள் வங்கிகளில் சென்று வெறும் ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாய் கடன் பெறுவதுகூட சாத்தியமல்ல. வங்கி மேலாளருக்கும் இதுபோன்ற சிறு கடன்களைக் கொடுத்து அதனை நிர்வாகம் செய்வதில் ஈடுபாடு இருப்பது இல்லை. இந்தத் துறையைச் சேர்ந்த சிறு சிறு சுயதொழில் முனைவோரின் வருமானத்தின் பெரும் பகுதி கந்து வட்டிக்காரர்களின் பையை நிரப்புகிறதே தவிர, அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஏறத்தாழ 13 கோடிப் பேர் ஈடுபட்டிருக்கும் இந்தத் துறை வங்கிகளிடமிருந்து பெறும் கடனுதவி வெறும் 4 விழுக்காடு மட்டுமே.
காலையில் தொண்ணூறு ரூபாய் பெற்று வியாபாரம் செய்து மாலையில் நூறு ரூபாயாகத் திருப்பிக் கொடுக்கும் முறைதான் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் அன்றாட சுயதொழில் முனைவோரை ஆதரிக்கும் கடனுதவி. வட்டி விழுக்காட்டைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றும். ஒன்பதே நாளில் போட்ட முதலை இரட்டிப்பாக்கும் வட்டித் தொழில் இது. வட்டிக் கணக்கைப் பார்த்தால் 4,055 விழுக்காடு வட்டி கணக்காகும்.
"முத்ரா' என்கிற சிறுதொழில் வளர்ச்சி மறு நிதி அமைப்பு, நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மரபுசாராத் துறைக்கு கடனுதவி வழங்கும் திட்டத்திற்கு வைப்பு நிதியாக ரூ.20,000 கோடியும், வங்கிகள் வழங்கும் கடன் தொகைக்கு உத்தரவாதமாக நிதிநிலை அறிக்கையில் ரூ.3,000 கோடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறு சுயதொழில் முனைவோருக்கு பதிவு செய்யப்பட்ட தனியார் நிதி நிறுவனங்களின் மூலம் நியாயமான வட்டிக்குக் கடன் வழங்குதல் என்பதுதான் "முத்ரா' திட்டத்தின் நோக்கம்.
தனியார் நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் சாதாரண வட்டியைவிடக் குறைந்த வட்டியில் கடன் வழங்கும். அவர்கள் நியாயமான வட்டிக்கு சிறிய, நடுத்தர சுயதொழில் முனைவோருக்கும், கடைகளுக்கும் கடன் வழங்குவார்கள். பணத்தை வசூலித்துத் திருப்பிக் கட்ட வேண்டியது தனியார் நிதி நிறுவனங்களின் பொறுப்பு. அவர்கள் கொடுத்திருக்கும் கடனைப் பொருத்து வங்கிகள் அவர்களுக்கு மேலும் கடன் வழங்கும்.
கூட்டுறவு வங்கிகள், ஏன் "சிட்பி வங்கி', "ஐ.டி.பி.ஐ.' போன்ற வங்கிகள் முன்பு செய்ததைப் போன்ற திட்டம்தான் இதுவும் என்றாலும் இதில் வித்தியாசம் இருக்கிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களைப்போல, இந்த நிதியுதவி முறையினால் கந்து வட்டிக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதும், சிறு சிறு வியாபாரிகள் தங்கள் லாபத்தை வட்டியாக இழக்காமல் பயனடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகளிர் மேம்பாட்டுக்கு உதவும் இந்தத் திட்டத்தில், அவர்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதை நிதியமைச்சர் ஏன் உறுதிப்படுத்தவில்லை?
இந்தத் திட்டத்தால் சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தத் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதில்தான் அதன் வெற்றி அமைந்திருக்கிறது என்பது என்னவோ உண்மை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய விதிகள் வெளியீடு

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

