நிதிநிலை அறிக்கை 2015 - VI

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை பற்றிய மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த நிதிநிலை அறிக்கையின் நல்ல அம்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன.
Updated on
2 min read

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை பற்றிய மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த நிதிநிலை அறிக்கையின் நல்ல அம்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், இதில் இருக்கும் சில நிஜமான குறைகள் பற்றி யாரும் பேசுவதே இல்லை.

14-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, மத்திய அரசின் நிதி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு முன்பிருந்த 32% இப்போது 42% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்குவதால், மத்திய அரசின் பல திட்டங்களை அரசு நிறுத்தவும் முற்பட்டிருக்கிறது. எட்டு மத்திய அரசுத் திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. 24 திட்டங்களுக்கு இனிமேல் மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம் உள்பட 31 திட்டங்கள் மட்டுமே இனி மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும்.

இதன் விளைவாக, பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.13,000 கோடி குறைக்கப்பட்டு விட்டது. தாய் - சேய் நலம், குடிநீர் வடிகால் ஆகியவற்றிற்கான மத்திய ஒதுக்கீடு 50% குறைந்து விட்டிருக்கிறது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு ரூ.3,401 கோடியிலிருந்து வெறும் ரூ.95 கோடியாகக் குறைக்கப்பட்டுவிட்டது. மாநில அரசுகளின் பொறுப்பில் இந்தத் திட்டங்கள் இயங்கும் என்பது கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும்தான். ஆனால், மாநிலங்கள் கவனத்துடன் செயல்படா விட்டால், சில மாநிலங்கள் மிகவும் பின்தங்கி விடுமே. அதுபற்றி மத்திய அரசு கவலைப்பட வேண்டாமா?

கல்விதான் எங்கள் அரசின் முதல் கவனம் என்று கூறும் நிதியமைச்சர் அதற்கான மொத்த ஒதுக்கீட்டில் 2% குறைத்துவிட்டிருக்கிறாரே, அது ஏன்? 2014-15க்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, பள்ளி, உயர் கல்விக்கான ஒதுக்கீடு 16.54% குறைவு. கல்வியைப் போலவே, நிதிநிலை அறிக்கையில் இன்னொரு பளிச்சிடும் குறை, பாதுகாப்புத் தொடர்பானது. இந்தியாவில் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க வேண்டும், ராணுவம் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் அறிக்கை குறிப்பிடுகிறதே தவிர, ஒதுக்கீடு அதற்கேற்றாற்போல இல்லையே, ஏன்? கடந்த நிதியாண்டுடன் (1.78%) ஒப்பிடும்போது இந்த ஆண்டு (1.24%) மொத்த உள்நாட்டு உற்பத்திப் புள்ளியில் ராணுவத்தின் பங்கு குறைந்து விட்டிருக்கிறது.

ராணுவத்திற்கான மொத்த ஒதுக்கீடான ரூ.2.46 லட்சம் கோடியில், சம்பளம், அன்றாடச் செலவுகள் என நிர்வாகச் செலவினத்திற்கு ரூ.1.52 லட்சம் கோடி போய்விடுகிறது. வெறும் ரூ.94,588 கோடியில் ராணுவத்தை நவீனப்படுத்துவது எப்படி?

விவசாயம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு வகிக்கிறது என்றும் நமது மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் விவசாயம் சார்ந்தவர்கள் என்றும் நிதியமைச்சர் தனது உரையில் கூறியிருக்கிறார். ஆனால், விவசாயத்திற்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட வெறும் 1.1% தான் அதிகரித்திருக்கிறது. 2013 - 14-இல் ரூ.17,788 கோடியாக இருந்த விவசாயத்திற்கான ஒதுக்கீடு, இந்த நிதிநிலை அறிக்கையில் 35% குறைந்து ரூ.11,657 கோடியாகி இருக்கிறது. விவசாயக் கடனுக்கான நிதி ரூ.50,000 கோடி அதிகரிக்கப்பட்டு ரூ.8.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக ரூ.5,300 கோடி ஒதுக்கி இருப்பதும் ஆறுதலான விஷயங்கள்.

தொழில்வளம் பெருக வேண்டும். அதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்று முனைப்புக் காட்டுவதில் தவறில்லை. ஆனால், இந்தியாவில் மிக அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பாகவும், வாழ்வாதாரமாகவும் இருக்கும் விவசாயம் பலப்படுத்தப்படுவதுதான் நமக்கு வலு சேர்க்கும். பண்டித நேருவின் கூட்டுறவு விவசாயத் திட்டம் அப்போது தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், இப்போது நடைமுறைப்படுத்த வேண்டிய அத்தியாவசியத் திட்டம் அது. அதன் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்கி, இந்தியாவை உணவு ஏற்றுமதி நாடாக மாற்றுவதன் மூலம் மட்டுமே விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறுவதைத் தடுக்க முடியும்.

ராணுவம், உணவு, கல்வி ஆகிய மூன்று முக்கியமான அம்சங்களில், நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை போதிய கவனமும், முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்பதல்லவா அவர் மீது வைக்கப்பட்டிருக்க வேண்டிய குற்றச்சாட்டு. நிஜமான குறைபாடுகளை விட்டுவிட்டு இல்லாத குறைகளை பெரிது படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நிதியமைச்சரின் மிக முக்கியமான கடமை இரண்டு. முதலாவது, புத்தசாலித்தனமாக, மக்களைப் பாதிக்காத வகையிலும், விலைவாசி அதிகரிக்காத வகையிலும் வரி விதித்து அரசின் வருவாயை அதிகரிப்பது. அதன்மூலம் புதிய திட்டங்களைத் தீட்டி வளர்ச்சிக்கு வழிகோலுவது. இரண்டாவது நிர்வாகச் செலவினங்களைக் கட்டுப்படுத்தி பற்றாக்குறை இல்லாத நிலைமைக்கு வழிகோலுவது. இந்த இரண்டு விஷயங்களையும் அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றவில்லை.

2015-16 நிதிநிலை அறிக்கையின்படி, அரசு எதிர்கொள்ளும் மொத்த வருவாய் ரூ.16,71,223 கோடி. மொத்தச் செலவு ரூ.17,77,477 கோடி. பற்றாக்குறை ரூ.1,06,254 கோடி. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று பற்றாக்குறையை ஈடுகட்டுவது என்பது மளிகைக் கடை பாக்கிக்காக குடியிருக்கும் வீட்டை விற்பதற்குச் சமம்.

சுதந்திரம் அடைந்து முதல் அரை நூற்றாண்டுக் காலம் இந்தியா வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. பற்றாக்குறை இருந்ததனால் தவறில்லை. இன்னுமா அப்படி? 64 ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போதுதான் பற்றாக்குறை இல்லாத நிதிநிலை அறிக்கை தயாரிக்கப் போகிறோமோ தெரியவில்லை!

(முற்றும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com