மக்கள் சிறையை உடைத்துக் கொண்டு நுழைந்து, போராளிகளை மீட்கும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சிறைக்குள் இருக்கும் கைதிகள் கலவரம் செய்து சிறையை உடைத்துக்கொண்டு தப்பிய சம்பவங்களும் உண்டு. சென்னை மத்திய சிறையிலேயே அதுபோன்றதொரு சம்பவம் நடந்த பிறகுதான், புழல் சிறை மிக வேகமாக உருவானது.
ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாத ஒரு விசாரணைக் கைதியை சிறையிலிருந்து இழுத்துவந்து, அடித்து உதைத்து, கொன்றிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறையாக இருக்கும். நாகாலாந்து மாநிலம், திமாப்பூர் மத்திய சிறைக்கூடத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.
திகார் சிறைக்குள் நிர்பயா வல்லுறவுக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி முகேஷ் சிங் அளித்த பேட்டியின் காரணமாக "இந்தியாவின் மகள்' ஆவணப்படம் விவாதத்துக்குரியதாக மாறிய நேரத்தில், பாலியல் குற்றம் தொடர்பான விசாரணைக் கைதிக்கு நேர்ந்துள்ள இந்தக் கொடுமை இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைக்கும் என்பது நிச்சயம்.
இந்தியா முழுவதிலும், அனைத்து சிறைக்கூடத்திலும் வல்லுறவு குற்றத்துக்கு கைதான விசாரணைக் கைதிகள், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற கைதிகள் என இருக்கவே செய்கின்றனர். வேறு எந்தச் சிறைக்கூடத்திலும் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை. ஏன் திமாப்பூர் சிறைக்கூடத்தில் மட்டும் இவ்வாறு நிகழ்ந்தது?
கொலையான கைதி சயீத் ஃபரீத் கான், முதலில் வங்க தேசத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது பிறகு உறுதியானது. சிறைக்குள் புகுந்த ஆவேசக்கூட்டத்தினர் யாரும், இவர் தொடர்புடைய வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சொந்தக்காரர்களும் அல்லர். பிறகு ஏன் இந்தக் கோபம்? நாகாலாந்துப் பெண்ணை அஸ்ஸாமைச் சேர்ந்த ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்பதுதான் கோபத்திற்குக் காரணம்.
பொதுமக்கள் சிறைக்குள் மிக எளிதாக புக முடியுமா? அவ்வாறு ஒரு கூட்டம் சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றால், சிறை அதிகாரிகள் நடவடிக்கையே எடுக்க மாட்டார்களா? சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு கைதியை இழுந்துவந்த நிலையிலும், அங்கே காவல்துறை எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது தொடர்பாக 3 சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும், பொதுமக்களில் 22 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்பதும் சமாதான நடவடிக்கைகள் மட்டுமே. இதற்காக அரசு நிர்வாகத்தைப் பாராட்ட முடியவில்லை.
இச்சம்பவம் ஒரு பாலியல் குற்றக் கைதி மீதான தாக்குதல் மட்டுமே அல்ல. நாகாலாந்து, அஸ்ஸாம் இரு மாநிலங்களிடையே பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தச் சிறை உடைப்பு மற்றும் கொலை நடத்தப்பட்டதாக கருத இடமளிக்கிறது. அந்த நோக்கம் நிறைவேறும் வகையில், அசாமில் 12 மணி நேர பந்த் நடத்தப்பட்டது. குந்தகமான தகவல், மற்றும் படங்களைப் பகிர்ந்துகொள்ள இயலாதபடி நாகாலாந்து மாநிலத்தில் 48 மணி நேரத்துக்கு குறுந்தகவல் மற்றும் இணையதள வசதிகள் தடை செய்யப்பட்டன. திமாப்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஒரு சிறைக்கூடத்தின் பாதுகாப்பு மற்றும் அவசரக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தெளிவான ஆணைகள் அமலில் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. சிறைக்குள் கைதிகளின் கலவரத்தாலோ அல்லது வெளிநபர்களின் தாக்குதலாலோ மற்ற கைதிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழலில் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் அதிகாரம் சிறை அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால், திமாப்பூர் சிறையில் அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது.
சிறைவாசியை காண வரும் உறவினர்களைக் கூட வரிசைப்படுத்தி, தனிமைப்படுத்தி, பல நிலைகளில் நிறுத்தி, சோதித்து, பிறகுதான் பார்வையாளர் அறைக்கு அனுப்புகிறார்கள். எல்லா சிறைக்கூடங்களிலும் பல அடுக்குக் காவல், கண்காணிப்பு கோபுரங்கள், காமிராக்கள் என பலத்த பாதுகாப்புடன்தான் இருக்கின்றன. இத்தகைய சூழலில் பொதுமக்கள் திரண்டு வந்து இழுத்துச் சென்றார்கள் என்பது நம்புவதற்கு இயலாத ஒன்றாகவே இருக்கிறது. சிறை அலுவலர்களின் மறைமுக ஆதரவுடன்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பதையே திமாப்பூர் சம்பவம் உணர்த்துகிறது. இது தொடர்பாக மத்திய அரசு முழு விசாரணை நடத்த வேண்டியது அவசியம்.
கைதிகள் செல்லிடப்பேசி உதவியுடன் சிறைக்கூடத்திலிருந்தபடியே கொலை, கொள்ளைகளை நடத்துவதும், ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதும் சர்வ சாதாரணமாக நிகழும் இன்றைய சூழலில், சிறை வளாகங்களை மேலும் பலப்படுத்துவதும், செல்லிடப்பேசியை செயலிழக்கச் செய்யும் கருவிகளைப் பொருத்துவதும், கைதிகள் வெளியேறாதபடியும், வெளியிலிருந்து யாரும் உள்ளே வரமுடியாதபடியும் பாதுகாப்பை பலப்படுத்துவதும் அவசியம்.
இந்தியாவின் அனைத்து சிறைக்கூடங்களும் பாதுகாப்புடன் உள்ளனவா என்பதை மறுபரிசீலனை செய்யவும் தற்சோதனை செய்துகொள்ளவும் திமாப்பூர் சம்பவம் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. இவ்வாறு ஒரு பாலியல் குற்றவாளியை மக்களாகவே தண்டித்துவிடுவதால், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக இருக்கும் என்கின்ற வாதம் அர்த்தமற்றது. உண்மை இல்லாதது. தனிநபர்களே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் எத்தகைய மோசமான எதிர்வினைகளை நாம் சந்தித்தாக வேண்டும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படுக்கை விரிப்புகள்

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

