நிலக்கரிச் சுரங்க வயல்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அழைப்பாணை பெறும் இரண்டாவது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். முதலாமவர் நரசிம்ம ராவ். இருவருமே காங்கிரஸ் கட்சி பிரதமர்கள்.
அழைப்பாணை பெற்றுள்ள மன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டு அவர் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு தலப்பிரா-2 நிலக்கரிச் சுரங்க வயல்களை விதிகளை மீறி வழங்கியிருக்கிறார் என்பதுதான். அப்போது நிலக்கரி துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்காமல் பிரதமரே அந்தத் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்ததும், குறிப்பிட்ட சில ஒதுக்கீடுகளை இன்னின்னாருக்கு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமரின் அலுவலகம் அழுத்தம் கொடுத்ததும்தான் மன்மோகன் சிங்குக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யலாம் என ஆய்வுக் குழு அறிக்கை அளித்த பிறகும், மீண்டும் இந்த ஒதுக்கீட்டுக்கான கோப்புகளைப் பெற்று, ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு மாற்றி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றி வழங்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி வாயிலாக அழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்த வழக்கில் பிரதமரை விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது என்று நிலக்கரி முறைகேடு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று, அன்றைய நாளில் நிலக்கரித் துறைச் செயலராக இருந்த பி.சி. பரேக், ஹிண்டால்கோ நிறுவனத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா ஆகியோருக்கும் அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் மிக நீண்ட விளக்கம் அளித்தபோது, "நாட்டுக்கு மின்சாரம் அவசியத் தேவை. அதற்குத் தேவையான நிலக்கரியை வெட்டியெடுக்க, உடனடியாக நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்யும் அவசியம் இருந்தது. ஏல முறையில்தான் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும், அதற்கான சட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆகும் என்பதால் இவ்வாறு ஒதுக்கீடு செய்தோம்' என்று குறிப்பிட்டார். அதே விளக்கத்தை தற்போது மீண்டும் அவர் நீதிமன்றத்திலும் சொல்லக்கூடும்.
இதில் அவருக்கு சாதகமான ஒரே விஷயம், அவர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த காலத்திலும் சரி, தற்போது நீதிமன்றத்தில் உள்ள வழக்கிலும் சரி, மன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டு, ஒதுக்கீட்டில் விதிமீறல் என்பது மட்டுமே. அவர் பணப்பயன் அடைந்தார் என்று எதிர்க்கட்சிகள்கூட குற்றம்சாட்டவில்லை. வேறு யாரோ பலன் அடைந்திருக்கக்கூடும் என்றாலும் இந்த வழக்கில் மன்மோகன் சிங் பணப்பயன் அடைந்தார் என்ற குற்றச்சாட்டு இல்லை. அதேபோன்று, ஒதுக்கீடு பெற்ற ஹிண்டால்கோ நிறுவனம் இத்தனை கோடி ரூபாயை இவர்களுக்கு வேறுவகையில் அளித்து உதவியது என்பதற்கான ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை.
மன்மோகன் சிங் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கத் தேவையான முகாந்திரம் இல்லை என்று முன்பு சிபிஐ அறிவித்திருக்கும் நிலையில், இப்போது அதற்கான முகாந்திரம் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படவில்லை. சில ஒதுக்கீடுகளை விதிகளை மீறி, நடைமுறைக் காரணங்களுக்காக ஒரு பிரதமர் தனது விருப்புரிமையைப் பயன்படுத்தி வழங்கியிருந்தால் அது குற்றவியல் நடவடிக்கையாகக் கருதப்படுவதில்லை. அதேநேரத்தில், இப்போது நிலக்கரிச் சுரங்கங்களின் ஏலம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேலான வருவாயை அரசுக்கு பெற்றுத் தந்திருக்கும்போது, பொறுப்பான பதவியில் இருப்பவர் தனது விருப்புரிமையை தவறாகப் பயன்படுத்துவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அதனால், அரசுக்கு ஏற்பட்டதாகச் சொல்லப்படும் ரூ.1.86 லட்சம் கோடி இழப்புக்கு நீதிமன்றம் மன்மோகன் சிங்கை பொறுப்பாக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டத்தின் முடிவில், மன்மோகன் சிங்குக்கு ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் அனைவரும் மன்மோகன் சிங் வீட்டுக்கு நடந்தே சென்றிருப்பது, அவருக்கு நம்மை கட்சி கைவிட்டுவிடவில்லை என்ற நம்பிக்கையை தருவதற்காகவா, இல்லை, எங்களைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்வதற்காகவா? மன்மோகன் சிங்கை தேர்தலில் பிரதமராக முன்னிறுத்தி பிரசாரம் செய்யாதவர் இப்போது அவருக்கு துணை நிற்க நடைபயணம் மேற்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.
சுமார் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர், இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு உறுதுணையாக இருந்தவர்.
திறமையான அதிகாரி, நேர்மையானவர் என்ற எல்லாப் புகழையும் இந்த ஓர் அரசாணை, ஆதவனை மறைக்கும் மேகம் போல மறைத்துவிட்டது. நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து அரசுக்கு ஆலோசனை சொல்வதுதான் அமைச்சரின் தகுதி என்பதை மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் என்கிறது தமிழ் (வரும் பொருள் என்பதை காலம் வேறுவிதமாக அர்த்தப்படுத்திவிட்டது).
மன்மோகன் சிங் நேர்மையானவர் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. ஆனால், அவர் யாருக்காக இத்தகைய சமரசங்களை ஏற்றுக்கொண்டாரோ அவர்களது நேர்மை கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று மன்மோகன் சிங் மீது பரிதாபம் கொள்ள மட்டுமே முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

நடந்து சென்ற நபா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

