வடுக்கள் வலிப்பதில்லை!

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறியிருப்பதைப் போல பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம், "புதிய நம்பிக்கைகளுக்கு வித்திட்டிருக்கிறது'.
Updated on
2 min read

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறியிருப்பதைப் போல பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம், "புதிய நம்பிக்கைகளுக்கு வித்திட்டிருக்கிறது'.

இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, உள்நாட்டுப் போர் குறித்து குறிப்பிடுகையில், "இலங்கை சில பதின்ஆண்டுகளாக போரையும் வன்முறைகளையும் சந்தித்து வந்தது. இப்போது நீங்கள் தீவிரவாதத்தை முறியடித்து, போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்' என்று பேசியிருப்பது தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கு உடன்பாடில்லாதது. தீவிரவாதம் என்ற சொல் அவர்களைக் கொதிப்படையச் செய்கிறது. அது ஓர் உள்நாட்டுப் போர் என்பதை பிரதமர் மோடி பதிவு செய்திருக்க வேண்டும் என்பதே அவர்களது ஆதங்கம்.

அந்த ஆதங்கம் நியாயமானது. இருப்பினும், இன்னொரு நாட்டுக்கு விருந்தினராகச் செல்லும் வேளையில், அவர்களது நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு, அவர்கள் உணர்வுகளைப் புண்படுத்தாமல் பேசுவதும், சிலவற்றை மென்மையாகச் சுட்டிக் காட்டுவதுமே ராஜீய உறவுக்கு தொடர்ச்சியான பாதையை அமைக்கும். "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' என்ற பாரதியின் வரிகளை இலங்கை நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்ட மோடி, "இரு நாடுகளுக்கு இடையிலான நம்பகத்தன்மை, கலாசாரம், பரஸ்பர ஆதரவு ஆகிய தூண்களின் மீது உறவுப் பாலம் அமைக்க வந்துள்ளேன்' என்று குறிப்பிட்டதன் மூலம், சில கசப்பான விவகாரங்களை மென்மையாகவே அணுக வேண்டியவராக இருக்கிறார்.

இன்று இந்திய அரசின் முன்பிருக்கும் தவிர்க்கவியலாத் தேவை, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், தொழில், சுற்றுலா ஆகியவற்றுக்கான அடிப்படை உறவுகளை முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு மீட்டெடுப்பதுதான். அத்துடன், இலங்கை வாழ் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், அரசியல் அதிகாரப் பகிர்வு பெற்றுத் தருதல், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது தாய்நாட்டுக்கு பாதுகாப்பாகத் திரும்புதல் ஆகியவையும் இடம் பெறுகின்றன. முதலாவது, நாட்டின் பொருளாதாரம் சார்ந்தது. இரண்டாவது, தமிழகம் மற்றும் தமிழர்தம் உணர்வுகளின் மீதான அக்கறை. இரண்டையும் சாதிக்க வேண்டும் என்றால்,காய்களை மெல்லத்தான் நகர்த்த வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியல் அமைப்புகள் அனைத்துமே நரேந்திர மோடியை இந்தியப் பிரதமராகப் பார்க்காமல், தமிழகப் பிரதிநிதியாக பார்ப்பதால்தான் இத்தகைய வருத்தங்கள் ஏற்படுகின்றன.

தமிழர்கள் மீதான அக்கறையை வெகு இயல்பான முறையில், அவர்கள் மனச்சங்கடம் கொள்ளாத வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார் மோடி. அவர் பேசியபோது, "சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் விருப்பங்களையும் இணைத்துக்கொள்ளும்போது, நாடு ஒவ்வொரு தனிநபரின் பலத்தையும் பெறுகிறது. மாநிலங்களை, மாவட்டத்தை, கிராமங்களை பரவலாக அதிகாரம் பெறச் செய்யும்போது, நாடு மேலும் மேலும் வலுப்படுகிறது. இது என்னுடைய பாரபட்சமான கருத்து என்று நீங்கள் சொல்லலாம். நான் 13 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளேன். தற்போது சில மாதங்களாகப் பிரதமராக இருக்கிறேன். எனது உச்சபட்ச முன்னுரிமை, இந்தியாவில் மாநிலங்களை வலுப்படுத்துவதற்குதான். கூட்டாட்சியில் முழு நம்பிக்கையுடையவன் நான்'' என்று பேசியிருக்கிறார்.

அதாவது, "நீங்களும் இங்குள்ள தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுங்கள், வடக்கு மாகாணத்தை வலுப்படுத்துங்கள்' என்பதை அவர்களது நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு, ஒரு பிரதமர் என்ற முறையில், எல்லை மீறாமல் உணர்த்தியிருக்கிறார். இது ஒரு நல்ல தொடக்கம்.

மீனவர் பிரச்னையில் அக்கறை காட்டவில்லை, ராஜபட்சவை சந்தித்துப் பேசியது ஏன் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் கேள்வி எழுப்பினாலும், இந்த விவகாரத்தில் மோடி மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும், இலங்கை நாட்டவருக்கு எரிச்சல் தராதபடியும் தனது கருத்தைப் பதித்துள்ளார். ஒரு ராஜீய விவகாரம் இத்தகைய நெளிவு சுளிவுகளுடன்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும்.

இந்தியாவின் உளவுப் பிரிவு "ரா' தனது தோல்விக்குக் காரணம் என்று ராஜபட்ச வெளிப்படையாகப் பேசிய பிறகும் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பதே, இந்தச் சந்திப்புக்கான காரணங்களை ஊகிக்கப் போதுமானது.

"மீனவர்களின் பிரச்னையில் இரு நாடுகளைக் காட்டிலும் இரு நாடுகளின் மீனவர்களின் உடன்பாடுதான் மிகவும் இன்றியமையாதது' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதையே வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோரும் தெரிவித்து வருகின்றனர். இரு நாடுகளின் மீனவர்களும் ஓர் இணக்கமான உடன்பாட்டுக்கு வந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த உடன்பாட்டை அவர்கள் காண்பதே சரியானதாக இருக்கும். இரு நாடுகளின் ஒப்பந்தங்கள் மூலம் இதற்குத் தீர்வு காண்பது அத்தனை எளிதல்ல.

தமிழர்களுக்கு மேலும் 47,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பும், புதிய தொழில்வாய்ப்பு, முதலீடுகளுக்கான கதவுகளை திறந்திருப்பதும் இந்தியாவின் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும். இந்த வர்த்தகத்தின் வழியாகப் பயன்பெறப் போகிறவர்களில் கணிசமானோர் வடக்கு மாகாணத் தமிழர்களாக இருப்பார்கள்.

மோடியின் இலங்கைப் பயணம் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பார்வையில் விமர்சனத்துக்கு உள்படுத்தப்பட்டாலும், இந்தப் பயணம் நல்லதொரு தொடக்கம். புண்களைக் கிளறாமல் இருந்தால் ஆறிவிடும். வடுக்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவை வலிப்பதில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com