கேள்விக்கு ஒருவரில்லை!

மேக்கேதாட்டு அணைக்கு தமிழக அரசு தெரிவித்த எதிர்ப்புகளை மீறி, உச்ச நீதிமன்றத்தில் ஓர் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும்கூட, கர்நாடக அரசு இந்த அணை குறித்த திட்ட அறிக்கை தயாரிக்க நிதிநிலை அறிக்கையில் ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்திருக்கிறது.
Updated on
2 min read

மேக்கேதாட்டு அணைக்கு தமிழக அரசு தெரிவித்த எதிர்ப்புகளை மீறி, உச்ச நீதிமன்றத்தில் ஓர் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும்கூட, கர்நாடக அரசு இந்த அணை குறித்த திட்ட அறிக்கை தயாரிக்க நிதிநிலை அறிக்கையில் ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த அணை மூலம் நீர்மின் உற்பத்தி செய்யவும், பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்கவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே காவிரி நதியில் ஐந்து இடங்களிலிருந்து ஆண்டுக்கு சுமார் 10 டி.எம்.சி. தண்ணீர் பெங்களூரு நகர பயன்பாட்டிற்குத் தருவதாக பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவரே பத்திரிகை பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை மூலமும் தண்ணீரைத் திருப்பிவிடும் என்றால், தமிழக எல்லைக்கு வரும் காவிரி நீரின் அளவு மேலும் குறையும்.

காவிரியின் கீழ்ப் பகுதியில் உள்ள மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகளை மீறி கர்நாடகம் அணை கட்டு

கிறது. மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவது உறுதி என்று தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, "தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் பயன்பெறும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததே இல்லை. இப்போது ஏன் தமிழக அரசு எங்கள் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழகத்திற்கு வந்து சேரும் காவிரி நீரைக் குடிநீருக்காக பயன்படுத்தினால், அதை தட்டிக் கேட்கும் உரிமை, நம்மிடமிருந்து 7 டி.எம்.சி. காவிரி நீர் பெறும் புதுச்சேரிக்கு மட்டுமே உள்ளது. இதில் ஆட்சேபணை சொல்ல கர்நாடகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது. அதேவேளையில், கர்நாடகம் தனது காவிரி நீர் சாகுபடிப் பரப்பை அதிகரித்தாலோ அல்லது குடிநீர்த் திட்டத்தின் மூலம் தண்ணீரைத் திருப்பிவிட்டாலோ அதைத் தட்டிக் கேட்கும் உரிமை தமிழகத்துக்கும், தொடர் பயனாளியாகிய புதுச்சேரிக்கும் உள்ளது. இது கர்நாடக முதல்வருக்கு தெரியாததல்ல.

"கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணை ஆகியவற்றுக்கு கீழே கர்நாடகத்தில் வேறு அணைகள் இல்லை. மேக்கேதாட்டு அணை கட்டுவதன் மூலம் தமிழ்நாட்டுக்கு வழங்கும் நீரை ஒழுங்குபடுத்தலாம்' என்கிறார் கர்நாடக முதல்வர். அதாவது, இயற்கை அதிக மழை தந்து, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், கிருஷ்ணராஜசாகரும் கபினியும் தேக்கி வைக்க முடியாமல் வேறு வழியின்றித் திறந்துவிடப்பட்டாலும், மேக்கேதாட்டுவில் அதைத் தேக்கி, திருப்பி விடுவதோடு, தமிழ்நாட்டுக்கு காவிரி ஆணையம் நிர்ணயித்த அளவுக்கு மேலாக துளி நீர்கூட சென்றுவிடக் கூடாது என்பதைத்தான், தமிழ்நாட்டுக்கு வழங்கும் நீரை ஒழுங்குபடுத்தலாம் என்று அவர் தெரிவிக்கிறார்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் எவ்வளவு தண்ணீர் தேக்க முடியும், மின் உற்பத்தி எவ்வளவு என்பவை திட்ட ஆய்வறிக்கையில் தெரியவரும். திட்ட அறிக்கை 8 முதல் 10 மாதங்களில் தயாராகிவிடும். இதற்கான உலக ஒப்பந்தப்புள்ளியில் 5 நிறுவனங்கள் பங்கெடுத்தன என்று சொல்கிறார் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.ஆர். பாட்டீல். அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்தாக வேண்டும். இருப்பினும்கூட, அதற்கு முன்பாகவே இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத திட்டம் என்று அழுத்தம் தருகிறது கர்நாடக அரசு.

இவ்வளவு சிக்கல்களுக்கும் ஒரே காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அதில் இடம் பெற்றிருந்த கட்சிகளும்தான். உச்சநீதிமன்றமும் நடுவர் மன்றமும் தமிழக அரசின் கோரிக்கைக்கு வலு சேர்த்த போதிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்கவில்லை.

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு விவசாய அமைப்புகளும் சில அரசியல் கட்சிகளும் சனிக்கிழமை (மார்ச் 28) முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ளன. இந்தப் போராட்டத்துக்கு காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நதிநீரை முறைப்படுத்தும் குழுவையும் அமைக்காத ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க.வும் ஆதரவு தெரிவித்துள்ளது. மத்தியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

காவிரி நதி கர்நாடக அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இத்தகைய அநியாயங்கள் அந்த அரசினால் தொடர்ந்து நடத்தப்படும். அவர்கள் சொல்வதைக் காட்டிலும் கூடுதலாக காவிரி நீர் பெங்களூருக்கு திருப்பிக் கொண்டு செல்லப்படுவது தொடரும். தற்போது மத்தியில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைப்பதோடு, மேக்கேதாட்டு அணைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காது என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் சுமார் 150 மீட்டர் அகலம் கொண்ட காவிரி, மேக்கேதாட்டு பகுதியில் உள்ள பாறைகளின் ஊடாக சுமார் 10 மீட்டர் இடைவெளியில் பாய்ந்து செல்கிறது. இந்த இடத்தை தமிழர் "ஆடுதாண்டும் பாறை' என்றே அழைக்கின்றனர். (கன்னடத்தில் மேக்கே என்றால் ஆடு, தாட்டு என்றால் தாண்டு என்று பொருள்). இது ஓர் உயர்வு நவிற்சியே. 10 மீட்டர் தொலைவை ஆடுகளால் தாண்ட முடியாது. ஆனால், கர்நாடக அரசு சட்டத்தைத் தாண்டுகிறது. ஏனென்றால், கேள்வி கேட்க ஒருவருமில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com