கல்வி உரிமைச் சட்டத்தின்படி கடந்த இரு ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஈட்டுறுதி செய்வதற்காக தமிழக அரசு ரூ. 97 கோடியை விடுவித்துள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை மே 16-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. 2013-14 கல்வியாண்டுக்கு ரூ.25 கோடியும், 2014-15 கல்வியாண்டுக்கு ரூ.72 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தந்தப் பள்ளிகளின் கணக்கில் இத்தொகை வரவு வைக்கப்படும். இனி, கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு தரவில்லை, ஆகவே மாணவர்களை சேர்க்கமாட்டோம் என்றெல்லாம் குறை சொல்ல முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கைப்படி 1.44 லட்சம் மாணவர்களை 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க முடியும். இருப்பினும், 2013-14 கல்வியாண்டில் 49,864 பேரும், 2014-15 கல்வியாண்டில் 86,729 பேரும் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். நிகழ் கல்வியாண்டில் நிச்சயமாக மேலும் அதிகமான மாணவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. இதற்குக் காரணம், இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுதான்.
இருப்பினும்கூட, பல பள்ளிகள் இந்தத் திட்டத்தில் குழந்தைகளைச் சேர்க்க வரும் பெற்றோரிடம், "கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தும் என்றாலும், எங்கள் பள்ளியில் பயிலும் மற்ற குழந்தைகளுக்கு நிகராக நீங்களும் உங்கள் குழந்தைக்கு செலவு செய்ய முடியுமா?' என்ற கேள்வியை எழுப்பிப் பயமுறுத்துகின்றன.
அதாவது குழந்தைக்கான உடை, உணவு, சுற்றுலா, கணினிப் பயிற்சி, நீச்சல் என இதர செலவினங்களைக் குறிப்பிட்டு, இந்த இடம் உங்களுக்கு உகந்ததல்ல என்று சொல்லாமல் சொல்லி அவர்களைப் பின்வாங்க வைத்து விடுகிறார்கள்.
25% இட ஒதுக்கீட்டில் குழந்தைகளைச் சேர்க்க வரும் பெற்றோருக்கு அதற்கான படிவத்தைக் கொடுத்து நிரப்பி வாங்குவதும், எண்ணிக்கையைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர் பட்டியலைப் பெற்றோர் முன்னிலையில் தேர்வு செய்வது மட்டுமேதான் பள்ளியின் கடமையே தவிர, ஏழைகளிலும்கூட இவர் நம் பள்ளிக்கு ஏற்ற ஏழையா, ஏற்பிலா ஏழையா என்று தரம் பார்ப்பது அநாவசியம்.
25% இட ஒதுக்கீட்டில் ஏழை என்பதற்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதே தவிர, இதில் இட ஒதுக்கீடு பற்றிய கட்டாயம் ஏதுமில்லை. ஆகவே, சிறுபான்மைப் பள்ளிகள் சில, தங்கள் மதத்தினரின் மாணவர்களையே முழுமையாகச் சேர்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளன. சட்டத்துக்குள்பட்டு செயல்படும் அதேநேரத்தில், அதன் நோக்கம் நிறைவேறாமல் செய்யும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுவதை அரசு தடுத்தாக வேண்டும். இதில் பள்ளிக் கல்வித் துறையின் பங்கைவிட, மாணவர் அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் பங்கு மிக அதிகம்.
25% இட ஒதுக்கீடு கல்வித் திட்டத்தில் ஒவ்வொரு பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர், அவரது பெற்றோர் பெயர்களுடன் முகவரி, அவருக்காக அரசு வழங்கிய கல்விக் கட்டணம் ஆகியவற்றை பள்ளி கல்வித் துறையின் இணையதளத்தில் கல்வி மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும். இத்தகைய வெளிப்படைத் தன்மையானது, எந்தெந்தப் பள்ளியில் எத்தகைய ஏழைகள் சேர்க்கப்பட்டார்கள், எந்த ஜாதியினர், மதத்தினர் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்தும்.
ஒவ்வொரு பள்ளியும் முதல் வகுப்பு தொடங்கி, கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25% ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று மட்டுமே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் பற்றி சட்டம் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் கல்வி முதல் வகுப்பில்தான் தொடங்குகிறது.
மழலையர் பள்ளிக்கான பாடத் திட்டத்தை அரசு வகுக்கவில்லை. பள்ளி நடத்த அனுமதி மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால், மழலையர் பள்ளி நிலையிலேயே 25% ஒதுக்கீடு என்பது அதிகப்பிரசங்கித்தனமான கோரிக்கை. இதை அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது.
கல்வி உரிமைச் சட்டம் வெற்றி பெறுவது என்பது அடித்தட்டு மக்களும் தரமான கல்வியைப் பெற வாய்ப்பளிக்கும் நடவடிக்கை. காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட கட்டாயக் கல்வித் திட்டத்தையும், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தையும்போல, சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி இந்தச் சட்டத்திற்கு உண்டு. குறிப்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் சமுதாயத்தினருக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது.
ஏதாவது ஓர் அரசியல் கட்சி முனைப்புடன் களத்தில் இறங்கி எல்லா தனியார் பள்ளிகளும் இந்தச் சட்டத்தின்படி 25% மாணவர் சேர்க்கை நடத்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்தினால், அந்தக் கட்சி தனக்கென்று கணிசமான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள முடியும். பிறகும் ஏன் எந்தவோர் அரசியல் கட்சியும் இதில் முனைப்புக் காட்டுவதில்லை என்று தெரியவில்லை.
அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டாவிட்டால் போகட்டும். ஒவ்வோர் ஊரிலும் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சமூக நோக்குடன் செயல்படும் இளைஞர்களின் அமைப்புகளும் கவனம் செலுத்தினால் ஆண்டுதோறும் 1.44 லட்சம் ஏழை மாணவர்கள் தரமான கல்வியை, ஏனையோருக்கு நிகராகப் பெறுவார்கள். "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்' என்பதை உறுதிப்படுத்தினால்தானே, இல்லாமை இல்லாத நிலையைத் தமிழ்ச் சமுதாயம் அடைய முடியும். ஏன் யாருக்குமே இதில் அக்கறை இல்லை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

