கேஜரிவாலின் பகல் கனவு!

அரவிந்த் கேஜரிவால் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. இப்போதைய புதிய சர்ச்சை - தில்லி தலைமைச் செயலராக
Updated on
2 min read

அரவிந்த் கேஜரிவால் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. இப்போதைய புதிய சர்ச்சை - தில்லி தலைமைச் செயலராக சகுந்தலா காம்லினின் நியமனம் கூடாது என்பதுதான். தான் குறிப்பிடும் அதிகாரியைத்தான் தலைமைச் செயலராக நியமிக்க வேண்டும் என்கிறார் கேஜரிவால். அதை ஏற்க மறுக்கிறார் தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங். இவர்களுக்கு இடையிலான பனிப்போரில் தில்லி அரசு இயந்திரம் தடதடக்கிறது.
 மாநில முதல்வர்கள் தமக்கு வேண்டியவர்களைத் தலைமைச் செயலர்களாக நியமித்துக் கொள்வது எல்லா மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள வழக்கம்தான். சில நேரங்களில் பணிமூப்பு விவகாரங்களையும்கூடப் புறந்தள்ளிவிட்டுத் தனக்கு வேண்டியவர்களைத் தலைமைச் செயலர்களாக நியமிப்பதும்கூட உண்டு. ஆனால், தில்லியில் அவ்வாறு செய்ய முடியாது. இதை முதல்வர் கேஜரிவால் தெரிந்து வைத்திருந்தும்கூட, வீம்புக்காகச் சர்ச்சையைக் கிளப்புகிறார் என்று தோன்றுகிறது.
 இந்திய குடிமைப் பணி அதிகாரிகளை மத்திய அரசு பணி நியமனம் செய்கிறது. அந்தந்த மாநிலத்தின் காலிப் பணியிடத் தேவைக்கு ஏற்ப, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாநிலங்களுக்கு அனுப்புகிறது. இந்த அதிகாரிகளை மாநிலத்துக்குள்ளே பணியிடமாறுதல் செய்வது மாநில அரசின் விருப்பம். சில அதிகாரிகள் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தங்கள் சொந்த மாநிலத்துக்கு பணியிடமாறுதல் பெற்றுச் செல்வதும், மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு மாறுதல் கோரிச் செல்வதும் இயல்பான ஒன்று.
 ஆனால், தில்லி ஒரு மாநிலம் அல்ல; யூனியன் பிரதேசம். தலைநகர் தில்லி பிராந்திய சட்டம் 1991-இன் படி இதன் நிர்வாகத்தை குடியரசுத் தலைவர், தன்னால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் மூலமாக நடத்துகிறார். இங்கே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நியமனங்கள் யாவும் துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு உள்பட்டவை.
 துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி மூப்பு அடிப்படையில் சகுந்தலா காம்லினைத் தலைமைச் செயலராக நியமித்தார். ஆனால், தில்லி முதல்வர் கேஜரிவால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். தன்னிடம் தனிச் செயலராக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர குமாரைத்தான் தலைமைச் செயலராக நியமிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.
 அத்துடன் அவர் நின்றிருக்கலாம். சகுந்தலா நியமன உத்தரவு வந்தவுடன், அந்த உத்தரவுக்கு ஒப்புதல் கையொப்பமிட்ட பணிகள் துறை முதன்மைச் செயலர் அனிந்தோ மஜும்தார் நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு ராஜேந்திர குமார் நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவு விதிமுறைக்குப் பொருந்தாதது என்று துணைநிலை ஆளுநர் மறுத்தவுடன் முதல்வர் கேஜரிவாலின் கோபம் மேலும் அதிகரித்துவிட்டது. மஜும்தாரின் அலுவலகத்தைப் பூட்டுகிற அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டார் கேஜரிவால்.
 ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சாதகமாகச் செயல்படுபவர் சகுந்தலா என்றும், அவர் மின் துறை முதன்மைச் செயலராகப் பதவி வகித்தபோது, ஆம் ஆத்மி அரசைச் சிக்கலில் மாட்டிவிடுவதற்காக ரிலையன்ஸ் மின் நிறுவனம் வாங்கவிருந்த வங்கிக் கடன் ரூ.11,000 கோடிக்கு தில்லி அரசைப் பிணையாக மாற்ற முற்பட்டவர் என்றும் முதல்வர் கேஜரிவால் வெளிப்படையாகப் பொதுக் கூட்டத்தில் குற்றம்சாட்டினார். ஓர் அதிகாரியை இவ்வாறு பொது மேடைக்கான விவாதப் பொருளாக மாற்றுவது சரியல்ல. இதனால், சகுந்தலா காம்லின் மட்டுமன்றி, அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கேஜரிவால் மீது வெறுப்புக் கொள்ளவும், பணியாற்ற விருப்பமின்மை தெரிவிக்கவும் ஏதுவான சூழலை கேஜரிவால் உருவாக்கியிருக்கிறார்.
 ஆதரவான பணிச்சூழல்; தான் கோருகிற பணியாளர்கள், அதிகாரிகள்; தான் கேட்கும் நிதியாதாரம் அனைத்தும் தடையில்லாது கிடைக்கும் என்றால் மட்டுமே ஆட்சி புரிய முடியும் என்றால் அது சாத்தியமற்றது. நடைமுறைக்கு ஒத்துவராது. மோசமான சூழலுக்கு நடுவிலும், ஊழல் அதிகாரிகளைத் தனக்கு அளித்தாலும், அவர்களை வைத்து வேலை வாங்கவும், மோசமான சூழலை மெல்ல மெல்ல தனது கவனமான உழைப்பாலும், நேர்மையாலும் ஆதரவான சூழலாக மாற்றுவதுதான் கேஜரிவால் செய்ய வேண்டியவை.
 அசுரப் பெரும்பான்மை கிடைத்த பிறகும்கூடத் தான் விரும்பியபடி செயல்பட முடியவில்லை என்கிற அரவிந்த் கேஜரிவாலின் விரக்திதான் இதற்குக் காரணம் என்றால் அதுவும் ஏற்புடையதல்ல. அரவிந்த் கேஜரிவால் முதல்வராகப் பணியாற்றுவது இது இரண்டாவது முறை. இத்தனை நாள்களில், தில்லி என்பது யூனியன் பிரதேசம்தான் என்பதையும், அதன் முதல்வருக்கும், அரசுக்கும் உள்ள அதிகாரங்கள் குறைவு என்பதையும்கூட அவர் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர் புத்திசாலி அரசியல்வாதியுமல்ல, நல்ல நிர்வாகியும் அல்ல.
 தில்லிக்கு மாநில அந்தஸ்துப் பெறுவதற்கான முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் முயற்சி இது என்று சொன்னால் அவரைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும், பாஜக ஆட்சியிலும் அவர்கள் கட்சியே தில்லியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தும் தராத தனி மாநில அந்தஸ்தை இப்போது முதல்வர் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் பெற்றுவிட முடியும் என்று நினைத்தால் அது பகல் கனவு.
 அரவிந்த் கேஜரிவாலுக்கு நல்லதொரு வாய்ப்பை மக்கள் அளித்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் அசுரப் பெரும்பான்மை இருக்கிறது. தனது அதிகாரத்துக்கு உள்பட்டு, பல மாற்றங்களை ஏற்படுத்தவும், திட்டங்களை நிறைவேற்றவும் அவர் முற்பட வேண்டுமே தவிர, ஆளுநருடனும், மத்திய அரசுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது அவருக்கும் நல்லதல்ல. தில்லிவாழ் மக்களுக்கும் நல்லதல்ல.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com