பாரிக்கரும் பாதுகாப்பும்!

இந்திரா காந்தி அரசின் காலத்திற்குப் பிறகு இந்திய ராணுவம் முறையாகவும், திறமையாகவும் வழி நடத்தப்படவில்லை
Updated on
2 min read

இந்திரா காந்தி அரசின் காலத்திற்குப் பிறகு இந்திய ராணுவம் முறையாகவும், திறமையாகவும் வழி நடத்தப்படவில்லை என்பது வேதனையான உண்மை. குறிப்பாக, போபர்ஸ் பீரங்கி ஊழல் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்த பிறகு, ராணுவத்திற்குத் தளவாடங்கள் வாங்குவது என்பதே அரிதாகி விட்டிருக்கும் நிலைமை. ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டும்கூட, அவை நிர்வாகச் செலவினங்களுக்கும், எல்லையோரப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும் செலவிடப்பட்டு வந்திருக்கின்றனவே தவிர, ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படாமலே இருந்து வந்தது.
 ஏதாவது ஊழல் ஏற்பட்டுவிடுமோ, இடைத்தரகர்களால் முறைகேடு என்று கெட்ட பெயர் வந்துவிடுமோ என்கிற பயத்திலேயே இதற்கு முன்னால் இருந்த பாதுகாப்பு அமைச்சர்கள் ராணுவத்திற்குத் தளவாடங்கள் பெறுவதிலும், விமானப் படை, கப்பல் படைக்குப் போதிய நவீன விமானங்களும், போர்த் தளவாடக் கப்பல்களும் வாங்குவதிலும் தயக்கம் காட்டி வந்தனர். இந்தத் தேக்கநிலை இப்போது அகற்றப்படுகிறது.
 நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுறுசுறுப்பாகச் செயல்படும், நிர்வாக இயல் புரிதலுள்ள அனுபவசாலி ஒருவர் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகி இருப்பது இந்திய ராணுவத்தின் அதிர்ஷ்டம். மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு, ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் பல புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானிய ராணுவத்தினர் ஊடுருவல் செய்தால், எல்லைப்புறக் காவலில் ஈடுபட்டிருக்கும் படை வீரர்கள், தில்லியிலுள்ள மேலதிகாரிகளிடமும், பாதுகாப்பு அமைச்சகத்திடமும்
 உத்தரவு பெற்றுத்தான் திருப்பித் தாக்குதல் நடத்த வேண்டும் என்கிற நிலைமைக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. திருப்பித் தாக்குவதும், எல்லையைப் பாதுகாப்பதும் அவர்களது பொறுப்பு என்று அதிகாரம் வழங்கி இருப்பதன் விளைவு, இப்போது எல்லையோர ஊடுருவல் கணிசமாகக் குறைந்து விட்டது.
 அடுத்தபடியாக, பாதுகாப்புக்குத் தேவையான தளவாடங்களைப் பெறுவதற்கு ரூ.70,000 கோடிக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், இந்தத் தளவாடங்கள் இந்தியாவில் தயாரித்ததாக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, ராணுவத் தளவாடத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
 அமைச்சர் மனோகர் பாரிக்கர் எடுத்திருக்கும் இன்னொரு முக்கியமான முடிவு, ராணுவத்துக்கான கொள்முதலில் தொடர்புடைய இடைத்தரகர்களை முறைப்படுத்துவது. உலகளாவிய அளவில், ராணுவத் தளவாட விற்பனை என்பது இடைத்தரகர்கள் இல்லாமல் நடைபெறுவது கிடையாது. அவர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட முடியாது. இப்போது ராணுவ அமைச்சகத்தின் முடிவின்படி, இடைத்தரகர்கள் அமைச்சகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்திருக்க வேண்டும். அவர்கள் எந்த நாட்டின், எந்தத் தயாரிப்பாளர்களின் இடைத்தரகர்களாகச் செயல்படுகிறார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
 இந்த இடைத்தரகர்கள், இந்திய ராணுவத்துக்குப் பெறப்படும் தளவாடங்களுக்கு கமிஷன் பெற முடியாது. ஆனால், அவர்கள் முகவராக அல்லது தொடர்பாளராகச் செயல்பட்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடமிருந்து அவர்களது செயல்பாட்டுக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதை இந்திய அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதன்மூலம், இடைத்தரகர்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.
 பாதுகாப்பு அமைச்சகம் எடுத்திருக்கும் மிக முக்கியமான முடிவு, எல்லையோரச் சாலைகள் அமைக்கும், பராமரிக்கும் பொறுப்பை தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து மாற்றி முழுமையாக ராணுவத்திடம் ஒப்படைத்திருப்பது. எல்லைப்புறச் சாலைகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது. சீனா தனது எல்லையோரம் முழுவதும் சாலைகள் அமைத்திருப்பது மட்டுமல்ல, ரயில் தொடர்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. போர்க்காலங்களில் உடனடியாக ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும், உணவுப்பொருள்களையும் எல்லைப்புறத்துக்கு எடுத்துச் செல்லும் அவசியத்தை சீனா உணர்ந்திருப்பதுபோல நாம் உணராமல் இருந்திருக்கிறோம்.
 கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், தத்ரா டிரக் வாகன முறைகேட்டைத் தொடர்ந்து, ராணுவத்திற்குப் பொருள்கள் வழங்கி வந்த பல நிறுவனங்கள் தடை செய்யப்பட்டன. இதனால், ராணுவத்திற்குத் தேவையான உபகரணங்கள், உதிரிப்பாகங்கள் ஆகியவை வாங்க முடியாமல் தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிறுவனத்தின் செயல்பாட்டையும் தனித்தனியாக ஆய்வு செய்து, உண்மையிலேயே தரக்குறைவு, முறைகேடுகளில் ஈடுபட்ட நிறுவனங்களை மட்டும் நிரந்தரமாகத் தடை செய்யும்படியும், ராணுவத்திற்குத் தேவையான உபகரணங்களும், உதிரிப்பாகங்களும் தடையில்லாமல் பெறுவதற்கு ஆவன செய்யும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 ராணுவத்தின் தேவைகள் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்யப்படுவதும், இந்திய ராணுவம் தயார் நிலையில் எப்போதும் இருப்பதை உறுதிப்படுத்துவதும் அரசின் தலையாய கடமை. அமைச்சர் பாரிக்கரின் முனைப்பும், நிர்வாகத் திறனும், நீண்ட நாள் தொய்வைக் குறுகிய காலத்தில் ஈடு செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
 எப்போதோ செய்திருக்க வேண்டியது. இப்போதாவது செய்யத் தொடங்கியிருக்கிறோமே என்பது ஆறுதல்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com