கடந்த 68 ஆண்டுகளில், முந்தைய 14 பிரதமர்களாலும், 53 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலும் சாதிக்க முடியாததைப் பிரதமர் நரேந்திர மோடி, ஒரே ஆண்டில் சாதித்துக் காட்டுவார் என்று யாராவது எதிர்பார்த்தால், அது அவர்களது தவறு. மேலும், ஓர் ஆட்சியின் வெற்றி - தோல்வியை ஒரு வருட செயல்பாட்டை வைத்துக் கணக்கிடுவதும் முறையல்ல.
இதற்கு முந்தைய பிரதமர்கள் யாருமே எதிர்கொள்ளாத அளவு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பிரதமர் மோடி எழுப்பி இருந்தார் என்பது உண்மை. அவரது தேர்தல் பிரசாரம் அதற்கு ஒரு முக்கியமான காரணம். ஊழலும், முறைகேடுகளும் மலிந்த, முற்றிலும் செயல்படாமல் ஸ்தம்பித்துவிட்ட முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த சலிப்பும், விரக்தியும் அதைவிட முக்கியமான காரணம்.
அப்படிப்பட்ட சூழலில் மோடியின் அனல் தெறிக்கும் பிரசாரமும், குஜராத் மாநிலத்தில் அவர் செய்து காட்டியிருந்த வளர்ச்சிப் பணிகளும், ஏதோ இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒரு தேவ தூதர் வந்திருப்பது போன்ற பிரமையை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட்டது. மோடி அரசின் அபரிமிதமான ஓராண்டு சாதனை, அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புக்கு முன்னால், நியாயமாகப் பெற வேண்டிய பாராட்டைப் பெறவில்லை என்பதுதான் உண்மை.
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய ஓராண்டு என்பது மிகக் குறுகிய காலம் என்றாலும், அந்த எதிர்பார்ப்புதான் மோடி அரசு எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால். ஆனால், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது திட்டங்களை செயல்படுத்த விடாமல் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டும்கூட, ஓராண்டு சாதனைப் பட்டியல் பாராட்டும்படியாகத்தான் இருக்கிறது.
கடந்த 12 மாதங்களில் விலைவாசி உயர்வு பாதியாகக் குறைந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறை 4% ஆகவும், வருவாய்ப் பற்றாக்குறை 2.8% ஆகவும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மின் உற்பத்தி இலக்கு 17,830 மெகாவாட்டாக இருந்தும்கூட 23,566 மெகாவாட்டாக அதிகரிக்க முடிந்திருக்கிறது. கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைப் பணி நாளொன்றுக்கு 2 கி.மீ. ஆகச் சுருங்கி இருந்தது, இப்போது 10 கி.மீ. ஆக அதிகரித்து விரைந்து செயல்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டில் ரூ.29,381 கோடிதான் பங்கு மூலதனமாக நமது தொழில் நிறுவனங்கள் பெற முடிந்தது. இப்போது பங்கு மூலதனம் ரூ.56,801 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கும் முத்ரா வங்கியின் மூலம் ரூ.1 லட்சம் கோடி சாமானிய வியாபாரிகளுக்குத் தரப்படுவதன் வாயிலாக சில்லறை வணிகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை அடுத்த இரண்டாண்டுகளில் காண முடியும்.
மோடி அரசின் ஸ்வச் பாரத் அபியான் (தூய்மை இந்தியா இயக்கம்), ஜன்தன் யோஜனா (மக்கள் நிதித் திட்டம்), அடல் பீமா யோஜனா (ஓய்வூதியத் திட்டம்) ஆகியவை தாங்கள் தொடங்கிய திட்டங்கள்தான் என்று முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு சொந்தம் கொண்டாடக்கூடும். அது உண்மையும்கூட. ஆனால், வெறும் திட்டமாகக் காகிதத்திலும் அறிவிப்பிலும் இருந்தவற்றை தூசி தட்டிப் புதிய பெயரில் செயல்படுத்தி மோடி வெற்றி கண்டிருப்பதை நாம் பாராட்டத்தானே வேண்டும். முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் எதையும் மோடி அரசு கிடப்பில் போடாமல் தொடர்கிறது என்பதே வரவேற்புக்குரிய ஒன்றல்லவா?
வளர்ச்சிதான் ஓர் அரசின் வெற்றிகரமான செயல்பாட்டுக்கான குறியீடு என்றால், இந்த அரசின் செயல்பாடு சிறப்பாகவே இருக்கிறது. வாஜ்பாய் தலைமையிலான அரசு 1998-இல் பதவி ஏற்ற போது வளர்ச்சி விகிதம் 4.5%. 2004-இல் மன்மோகன் சிங் அரசிடம் வாஜ்பாய் ஆட்சியை ஒப்படைத்தபோது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.4%. கடந்த மே மாதம் மோடி பிரதமராகப் பதவி ஏற்றபோது வளர்ச்சி விகிதம் 4.4%. கடந்த ஓர் ஆண்டில் இந்த நிலைமை மாறி, மோடியின் ஆட்சியில் வளர்ச்சி விகிதம் 5.7% ஆக உயர்ந்திருக்கிறது.
பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 30 கோடி சாமானிய மக்கள் வங்கிக் கணக்குகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, தொடர் விளைவாக விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் ஆகியன பெற வழிகோலப்பட்டிருக்கிறது. முந்தைய அரசு வரிப் பணத்தை நூறு நாள் வேலைத் திட்டம் என்கிற பெயரில் விரயம் செய்ததுபோய், உருப்படியான மக்கள் நலத் திட்டங்கள் இந்த அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தனைக்குப் பிறகும் மோடி அரசின் ஓராண்டு சாதனையை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதற்குக் காரணம் மனத் தடையே தவிர வேறொன்றும் காரணம் அல்ல.
மோடி அரசின் மிகப் பெரிய வெற்றி, கடந்த ஓராண்டில் எந்தவோர் ஊழல் அல்லது முறைகேடும் நிகழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது. ஒரு சிறிய உதாரணம் - கடந்த ஆட்சியில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட இருந்த ரூ.1,74,000 கோடி இழப்பை, வெறும் 10% நிலக்கரிச் சுரங்கங்களின் வெளிப்படையான ஏலத்தின் மூலம் ரூ.2,00,000 கோடி ஆதாயமாக மாற்றி இருப்பது. இதை யாரால் மறுக்க முடியும்? ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் ஓராண்டு ஆட்சி என்பதே இந்தியாவைப் பொருத்தவரை நினைத்துப் பார்க்கவே முடியாத அதிசயம் என்பதை நாம் உணர வேண்டும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

