பிகாரில் நிதீஷ் குமார் ஐந்தாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றிருக்கிறார். பாட்னா காந்தி மைதானத்தில் நடந்த பிரம்மாண்டமான பதவி ஏற்பு விழாவில் அரவிந்த் கேஜரிவாலிலிருந்து ராகுல் காந்தி வரை, சீதாராம் யெச்சூரியிலிருந்து மம்தா பானர்ஜி வரை, தேவெ கெளடாவிலிருந்து சரத் யாதவ் வரை, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தலைவர்கள் அனைவரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து மேடையில் அணி திரண்டிருந்தது, காங்கிரஸுக்கு எதிராக 1977-லும், 1989-லும் நடந்த எதிர்க்கட்சி அணிவகுப்புகளை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது.
இதற்கு முன்னால் நிதீஷ் குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து வென்று ஆட்சி அமைத்தபோது, எண்ணிக்கை பலமுள்ள கட்சியாக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்தான் இருந்தது. இப்போது அப்படியல்ல.
எண்ணிக்கை பலமுள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்குத் துணை முதல்வர் பதவியை நிதீஷ் குமார் அளித்ததில் தவறில்லை. ஆனால், துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவை ஏற்றுக் கொண்டதுதான் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்களும் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் கேட்டுப் பெற்றிருப்பது, மிக அதிகமாக நிதி ஒதுக்கீடு பெறும், பெரிய அளவில் முறைகேடுகளுக்கு வாய்ப்பு அளிக்கும் சாலைகள் துறையும், மக்கள் நல்வாழ்வுத் துறையும்!
பல மூத்த அமைச்சர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல்வர் நிதீஷ் குமாரைத் தொடர்ந்து, முதல் முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்வியும், தேஜ் பிரதாப்பும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது எந்த அளவுக்கு லாலு யாதவின் ஆதிக்கம் இருக்கும் என்பதையும் முதல்வர் நிதீஷ் குமார் எப்படியெல்லாம் வளைந்தும் குனிந்தும் அவரை அனுசரிக்க வேண்டி வரும் என்பதன் முன்னோடி. மாட்டுத் தீவன வழக்கில் கைது செய்யப்பட்டபோது, தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிச் சிறையிலிருந்த வண்ணம் பிகார் அரசை நடத்த முடிந்த லாலு பிரசாத் யாதவுக்கு, இப்போது 80 உறுப்பினர்களில் பலரும், துணை முதல்வராகத் தனது மகனும் இருக்கும்போது என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நிதீஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ் - காங்கிரஸ் உறவு என்பது அடிப்படையில் மிகப்பெரிய முரண். இதைப் புரிந்து கொள்ள கடந்த 40 ஆண்டு கால பிகார் அரசியலைத் திரும்பிப் பார்க்க வேண்டும். காங்கிரஸுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் 1975-இல் நடத்திய "நவ நிர்மாண்' போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்த பிகார் பல்கலைக்கழக மாணவர்கள் நிதீஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும். அவசரநிலைச் சட்டத்திற்கு எதிரான போராளிகள் அவர்கள். பிகார் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியைப் பூண்டோடு வேரறுத்தவர்கள் இவர்கள் இருவரும். இப்போது அதே காங்கிரஸ் கட்சியுடன் இவர்கள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்திருக்கிறார்கள்.
1990-இல், பிகாரில் ஜனதா தளம் வெற்றி பெற்றபோது, நிதீஷ் குமார் மக்களவை உறுப்பினர். முதல்வர் வேட்பாளராக அன்றைய பிரதமர் வி.பி. சிங்கின் ஆதரவு பெற்றிருந்தவர் முன்னாள் முதல்வரும் நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் பெயர் போன ராம் சுந்தர்தாஸ் என்கிற மகா தலித். தேவி லாலின் வேட்பாளர் லாலு பிரசாத் யாதவ். வி.பி. சிங்கின் வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தேவி லாலின் வேண்டுகோள்படி சந்திரசேகரின் ஆதரவாளரான ரகுநாத் ஜா முதல்வர் போட்டியில் களமிறக்கப்படுகிறார். மும்முனைப் போட்டி ஏற்பட்டதால் லாலு பிரசாத் யாதவ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
லாலு பிரசாத் யாதவின் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் முக்கியமான ஜாதிகளில் ஒன்றான யாதவர்களின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. யாதவரல்லாத ஏனைய பிற்பட்ட வகுப்பினரான குர்மி, கோரி, லோத் போன்ற ஜாதியினர், யாதவர்களின் மேலாதிக்கத்தை வெறுக்கத் தொடங்கினார்கள். குர்மி இனத்தவரான நிதீஷ் குமார், லாலு எதிர்ப்பு அணிக்குத் தலைமை தாங்கினார். ஜனதா தளம் பிளவுபட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை லாலு பிரசாத் யாதவ் தொடங்கியதற்கு மூல காரணம் நிதீஷ் குமாருடனான மோதல்தான். இப்போது இவர்கள் கைகோத்திருக்கிறார்கள்.
இதுவரை, நரேந்திர மோடியையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் தோற்கடித்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைந்து செயல்பட வைத்தது. தேர்தலில் போட்டியிடுவது என்பது வேறு, ஆட்சியைப் பிடித்த பிறகு ஒருங்கிணைந்து அரசு நடத்துவது என்பது வேறு. அடிப்படையில் முரணுடன் கூடிய இவர்களது கூட்டணி எப்படி ஒருங்கிணைந்து செயல்படப் போகிறது என்பதை அடுத்துவரும் அவர்களது செயல்பாடுகள்தான் தெளிவுபடுத்தும்.
நிதீஷின் பதவி ஏற்பு விழாவில் பங்குபெற்ற பல அரசியல் தலைவர்களும் அவரை வருங்காலப் பிரதமர் வேட்பாளர் என்று குறிப்பிட்டது காங்கிரஸைமட்டுமல்ல, லாலு பிரசாத் யாதவையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. நிதீஷ் குமாரைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் அறிவித்துவிட்டது. லாலு பிரசாத் யாதவ், அரவிந்த் கேஜரிவால் போன்றவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை, அவ்வளவே.
அமைச்சரவையிலும் முழு அதிகாரம் இல்லாமல், மத்திய அரசுடனும் இணக்கமான உறவு இல்லாமல் முதல்வர் நிதீஷ் குமார் பிகாரில் நல்லாட்சி கொடுக்க முடிந்தால், நிச்சயமாக அவர் பிரதமர் வேட்பாளருக்கான தகுதியானவர்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!

தன் 7-வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் சூரி!
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

