இந்தியப் பண்பாட்டுக்கும் உலகத்தின் ஏனைய கலாசாரங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழிலும், "வசுவைத குடும்பகம்' என்று சம்ஸ்கிருதத்திலும் உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாக, ஒரே குடும்பத்தினராகப் பார்க்க முற்பட்ட ஒரே சமுதாயம் நமது இந்திய சமுதாயம் மட்டுமே!
அதுமட்டுமல்ல, ஏனைய மதங்களும், நம்பிக்கைகளும் தங்களது கோட்பாடுகளும், நம்பிக்கையும் மட்டுமே சரி, பிற நம்பிக்கைகள் ஏற்புடையவை அல்ல என்று கருதும்போது, நாம் மட்டும்தான் அனைத்து மத நம்பிக்கையையும் எல்லாம்வல்ல இறைப் பரம்பொருளை அடையும் வெவ்வேறு வழிமுறைகள் என்று ஏற்றுச் செயல்பட்டவர்கள். அதனால்தான், உலகிலுள்ள அனைத்து இன, மதத்தினரும் இந்தியாவில் ஒற்றுமையாக வாழ முடிந்தது.
சகிப்புத்தன்மையும், பிற மதத்தினரைச் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும்தான், இந்தியாவை உலகத்தின் ஆன்மிக வழிகாட்டியாக அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்தது. இந்தப் பெருமைக்கும் தனித்தன்மைக்கும் பங்கம் விளைவிப்பது, நாமே நமது முகத்தில் கரியைப் பூசிக்கொள்வதற்கு ஒப்பானது.
தலைநகர் தில்லியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் இருக்கிறது உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரியை அடுத்த பிஷாடா என்கிற கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி, 50 வயதான முகமது இக்லாக் என்கிற இஸ்லாமியரின் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாகவும், உண்பதாகவும் வதந்தி கிளப்பப்பட்டது. உடனே ஒரு கும்பல் அந்த வீட்டிற்குப் போய், முகமது இக்லாக்கை வெளியே இழுத்துவந்து அடித்தே கொன்றுவிட்டது. அவரது மகன் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று சொன்னால், இந்திய மக்கள்தொகையில் கணிசமானவர்கள் உயிரிழக்க வேண்டியிருக்கும். ஒருவர் என்ன சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என்பதை அரசோ, கலாசாரக் குழுக்களோ தீர்மானிப்பது என்பது ஏற்புடையதல்ல, அதை அனுமதிக்கவும் முடியாது. ஓரினச் சேர்க்கை, மது விலக்கு போன்றவையே தனி நபர் உரிமை எனும்போது, மாட்டிறைச்சி உண்பது தடுக்கப்படுவது என்பதை ஏற்றுக்கொள்ளவா முடியும்?
அண்ணல் காந்தியடிகள், ஆச்சாரிய வினோபா பாவே உள்ளிட்ட இந்தியாவின் அரசியல், ஆன்மிக வழிகாட்டிகள் அனைவருமே "பசுவதைத் தடை'யை ஆதரித்தனர். அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது காரணம், இந்திய மரபணுவுள்ள பசுக்களின் தனித்தன்மையான குணாதிசயங்கள். "திமில்' உள்ள இந்தியப் பசுக்களின் மேன்மை பற்றி மேலைநாட்டு விஞ்ஞானிகள் வியக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளில் இந்தியப் பசுக்களை இனப் பெருக்கம் செய்து பராமரிக்கவும் முற்பட்டிருக்கிறார்கள். இரண்டாவது காரணம், பெருவாரியாக விவசாயம் சார்ந்த நாடான இந்தியாவில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்பவை பசுக்களும், காளைகளும் என்பது. பசுக்கள்தான் செல்வம், சொத்து என்று கருதிய காலகட்டம் இருந்தது.
இப்போது, நிலைமை அதுவல்ல. நாட்டுப் பசுக்களின் பால் மேன்மையானது என்றாலும்கூடப் பெருகிவிட்ட மக்கள்தொகைக்கு ஈடுகட்டும் அளவிலான உற்பத்தி அவற்றில் கிடையாது. மேலைநாட்டு ஜெர்ஸி, ஹோல்ஸ்டின் போன்ற பசுக்களுடனான கலப்பினங்கள்தான் அதிக அளவிலான பால் உற்பத்திக்கு வழிகோலும் என்கிற யதார்த்தத்தை இந்திய விவசாயிகள் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.
கலப்பை வைத்து உழுவது, மாட்டு வண்டியில் சரக்குக் கொண்டு செல்வது போன்ற நடைமுறைகளுக்கு இனிமேல் வேலையில்லை என்கிற நிலையில் "பசு வளர்ப்பு' என்பது அரை நூற்றாண்டு காலத்துக்கு முற்பட்ட முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. முழுக்க முழுக்க இந்திய மரபணுவுள்ள பசுக்களை நாம் பிரேசிலிலோ, ஸ்வீடனிலோதான் போய்ப் பார்க்க வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டால்கூட வியப்படையத் தேவையில்லை.
இன்றைய நிலையில் உலகிலேயே மிக அதிகமாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். ஆண்டொன்றுக்கு 24 லட்சம் டன். உலகின் மொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 23.5%. இதனால் கிடைக்கும் அன்னியச் செலாவணியை இழந்துவிட முடியுமா?
மாட்டிறைச்சியைப் பிரச்னையாக்கி முகமது இக்லாக் வெறிபிடித்த கூட்டத்தினரால் அடித்துக் கொல்லப்படுவதற்கு, அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது என்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் பயனடையப் போவது யார் என்று பார்த்தால், மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் என்பது ஊர் அறிந்த ரகசியம்.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. சட்டம் - ஒழுங்கு மாநில அரசின் கையில்தான் இருக்கிறது. பிரச்னையை வளர விடாமல் துணிந்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? மத்தியில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அமைச்சர்களும், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும், சம்பவத்தைக் கண்டிக்காமல் மாட்டிறைச்சி சாப்பிடுவதைக் குற்றம் கூறுவது ஏன்?
பிரச்னையை வளர விட்டால் இந்துக்கள் பா.ஜ.க.வையும், முஸ்லிம்களும், யாதவர்களும் சமாஜவாதி கட்சியையும் சார்ந்து வாக்களிப்பார்கள் என்கிற வாக்கு வங்கி எதிர்பார்ப்புதான் காரணம் என்றால், இந்திய ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, நமது பண்பாட்டுக்கும் பாரம்பரியத்துக்கும் இதைவிடப் பெரிய தலைகுனிவு எதுவும் இருக்க முடியாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.