திட்டம் பலிக்கவில்லை!

இலவசங்களும், மானியங்களும் ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாத அம்சங்கள். இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ள ஒரு நாட்டில், மானியங்களை முற்றிலுமாக அகற்றுவது அசாத்தியம்.
Updated on
2 min read

இலவசங்களும், மானியங்களும் ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாத அம்சங்கள். இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ள ஒரு நாட்டில், மானியங்களை முற்றிலுமாக அகற்றுவது அசாத்தியம். அது நியாயமாகவும் இருக்காது. அதேநேரத்தில், மானியங்கள் உரியவர்களுக்குப் போய்ச் சேராமலும், முழுமையாகப் போய்ச் சேராமலும் மக்களின் வரிப்பணம் வீணாவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய அரசு மட்டும் இதுவரை மானியங்களுக்காகச் செலவழித்திருக்கும் வரிப்பணம் எவ்வளவு என்கிற புள்ளிவிவரம் தலைசுற்ற வைக்கிறது. வாக்குவங்கியை உறுதிப்படுத்த நமது அரசியல்வாதிகள் வீணாக்கி இருப்பது ஒன்று இரண்டல்ல, ஏறத்தாழ ரூ.380 லட்சம் கோடி!

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் (பிப்ரவரி 2) பத்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. வறட்சி மற்றும் விவசாயம் இல்லாத நாள்களில் கிராம மக்கள், குறிப்பாக, விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கி இடம்பெயரும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதாக முந்தைய மன்மோகன் சிங் அரசு, இதை அறிமுகப்படுத்தியபோது தெரிவித்தது.

கடந்த பத்து ஆண்டுகளில் 1980 கோடி வேலைநாள்களை இந்தத் திட்டம் உருவாக்கிக் கொடுத்திருப்பதாக அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால், கிராமப்புறங்கள் இதனால் செழிப்படைந்ததாகவோ, விவசாய கூலித் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கி நகருவது தடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை.

2015-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் ரூ.3,13,844 கோடி இதற்காக செலவிடப்பட்டுள்ளது. இதில் 71% தொகை தொழிலாளர் ஊதியமாக வழங்கப்பட்டது. எடுத்துக்கொள்ளப்பட்ட வேலைகளில் 65% வேளாண்மை சார்ந்தவை என்று அரசு தெரிவிக்கிறது. இதனால் பயன் பெற்றவர்களில் பெண்களின் பங்கேற்பு 57%. கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டத்தால் பயனடைந்தவர்களில் தாழ்த்தப்பட்டோர் 20% பேர், பழங்குடியினர் 17% பேர் என்கிறது அரசின் புள்ளிவிவரம்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, இத்திட்டத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் தொகை ரூ.183. ஆனால், ஆந்திரத்தில் ரூ.180 ஆகவும், கேரளத்தில் ரூ.229, பஞ்சாப்பில் ரூ.210 ஆகவும் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் திறனுறு தொழிலாளி, சாதாரண தொழிலாளிக்கான கூலி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு ஏற்ப, வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான சம்பளத்தை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.

இத்திட்டத்தின் செயல்பாட்டிலும், செயல்படுத்தும் காலங்களிலும் கருத்து முரண்பாடுகள் உண்டு. விதைத்தல், நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை என்று விவசாயப் பணிக்கு ஆள்கள் தேவைப்படும் நேரங்களில், இத்திட்டத்துக்கு ஆள்களை அழைத்துச் செல்வது முதலில் வழக்கமாக இருந்தது. வேலை செய்யாமல், வெறுமனே போக்குக் காட்டி ஊதியம் தரப்படுவதும், அதிகாரிகள் முறையான ஊதியத்தைத் தராமல் குறைத்து வழங்குவதும் வழக்கமாகவே இருந்தன. வேலையே செய்யாமல் கூலி கிடைப்பதால், விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைக்காமல் பலரும் விவசாயம் செய்யாமல் கைவிடும் அவலத்துக்கு இந்தத் திட்டம் வழிகோலியது என்பதுதான் திட்டத்தின் மறுபக்கம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இத்திட்டத்தின் கூலியை, கிராம மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டம் அமலுக்கு வந்தபிறகு, குறைவான கூலி கொடுத்து ஏமாற்றுவது இல்லாதொழிந்தது. ஆனாலும்கூட, இந்தத் திட்டத்தால் பயனுள்ள எத்தனைச் செயல்பாடுகள் நடந்தன என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ÷இப்போதைய புகார் உரிய நேரத்தில் கூலி கிடைப்பதில்லை என்பது. இதற்கு மாநில அரசு சொல்லும் காரணம் - மத்திய அரசு இத்தொகையை விடுவிப்பதில் காலதாமதம் செய்கிறது என்பதுதான். பத்து ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் இப்போது வேலைகளை தணிக்கைக்கு உள்படுத்துதல், தாமதமின்றி உடனடியாகக் கூலியை வழங்குதல், தற்போதைய கூலியை உயர்த்துதல் ஆகியவை குறித்து அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் பின்னால் ஒரு மறைமுக நோக்கம் முந்தைய அரசுக்கு இருந்தது. விவசாயத்திற்குக் கூலித் தொழிலாளர்கள் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி விவசாயிகள் பலரும் விவசாயத்தைக் கைவிடுவதை உறுதிப்படுத்துவதுதான் அந்த நோக்கம். அதன் விளைவாக வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் (கார்ப்பரேட்) விவசாயத்தில் ஈடுபடவும், விவசாயத்தை மேற்கத்திய நாடுகளைப் போல லாபகரமான தொழிலாக நடத்தவும் வழிகோலலாம் என்பதுதான் அதற்கு காரணம். முந்தைய ஆட்சியில் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக இருந்த மாண்டேக்சிங் அலுவாலியாவின் அந்த மறைமுகத் திட்டம் நிறைவேறவில்லை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு தரவேண்டிய நிலுவையிலுள்ள கூலித் தொகை ரூ.3,200 கோடி என்பது கண்டனத்துக்குரியது என்பதில் சந்தேகமில்லை. ஊரக வேலைவாய்ப்பு என்கிற பெயரில் மக்களின் வரிப்பணம் விரயமாகிறது என்றாலும்கூட, அரசு தருவதாக ஏற்றுக்கொண்ட கூலியைத் தராமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதுமட்டுமல்லாமல், பல மாநிலங்களில் வறட்சி காணப்படும் நிலையில், விவசாயம் முற்றிலுமாக ஸ்தம்பித்திருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறக் குடும்பங்களுக்குக் குறைந்தபட்ச வருமானம் தரப்படுவது வரவேற்புக்குரியது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com