ஒதுக்கீடும் குறைபாடும்!

தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்), தாம் நடத்த இருக்கும் 2016-ஆம் ஆண்டுக்கான அலைக்கற்றை ஏலத்தில், சில அலைக்கற்றைக்கான ஏலத்தொகையைக் கூடுதலாக நிர்ணயித்து, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது. அரசு எந்த அளவுக்கு அடிப்படை ஏலத் தொகையைக் குறைக்கும் என்று தெரியவில்லை.
Updated on
2 min read

தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்), தாம் நடத்த இருக்கும் 2016-ஆம் ஆண்டுக்கான அலைக்கற்றை ஏலத்தில், சில அலைக்கற்றைக்கான ஏலத்தொகையைக் கூடுதலாக நிர்ணயித்து, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது. அரசு எந்த அளவுக்கு அடிப்படை ஏலத் தொகையைக் குறைக்கும் என்று தெரியவில்லை.

இந்தியாவில் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதனால், செல்லிடப்பேசியிலேயே இணைய சேவைகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விரைவிலேயே 50 கோடி பேர் இணைய நுகர்வோராக மாறுவர் என அரசு தெரிவித்துள்ள நிலையில், இணைய சேவைகளுக்கு மிகவும் உகந்த 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையைப் பெறுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது.

போட்டி அதிகம் என்பதால் இதன் ஏலத் தொகையையும் வழக்கத்தைவிட மிக அதிகமாக நிர்ணயித்துள்ளது டிராய். 2015-ஆம் ஆண்டு ஏலத்தில் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.1,10,000 கோடி. இதைவிட ஐந்து மடங்கு அதிக வருவாய் 2016-ஆம் ஆண்டில் கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

இதில், 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விலை ஓர் அலகு ரூ.11,485 கோடி! ஒரு நிறுவனத்துக்கு குறைந்தது 5 அலகுகள் இருந்தால்தான் நல்ல முறையில் சேவை வழங்க முடியும். ஆக, ரூ.55,000 கோடி குறைந்தபட்சம் தேவை. இவ்வளவு பெரிய தொகைக்கு அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்து, முதலீட்டை மீட்க முடியாது என்பதுதான் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் புலம்பல்.

"டிராய்' இந்த அளவுக்கு ஏலத் தொகையை உயர்த்தி இருப்பதன் காரணத்தை ஊகிப்பது எளிது. என்னதான் நியாயமான விலையை நிர்ணயித்தாலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஏலத் தொகையை உயராமல் பார்த்துக்கொள்கின்றன. ஆகவே, நிர்ணயிக்கும்போதே அதிக விலையை நிர்ணயித்தால், அவர்கள் என்னதான் கூட்டணி அமைத்தாலும் அரசுக்கு நஷ்டம் ஏற்படாது. இந்த நல்ல எண்ணத்தில்தான், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறிவைத்துக்கொண்டிருக்கும் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கு மட்டும் அதிக விலையை நிர்ணயித்திருக்கிறார்கள்.

இந்தப் புலம்பல்கள் காரணமாக, மத்திய அமைச்சரவை இந்தத் தொகையை சற்று குறைக்கும் என்பதை இப்போதே சொல்லிவிடலாம். "டிராய்' நிர்ணயித்த தொகையில், அதிகபட்சமாக நான்கில் ஒரு பங்கு தொகையை மத்திய அரசு குறைக்கக்கூடும். அப்படிச் செய்தாலும்கூட அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

2015-ஆம் ஆண்டு அலைக்கற்றை ஏலத்தில் அதிகப் போட்டி நிலவியது 800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்குத்தான். 2016-இல் அலைக்கற்றை ஏலத்துக்கான இதன் விலை ஓர் அலகுக்கு ரூ.5,819 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் 60% அதிகம். ஆகவே, 700 மெகாஹெர்ட்ஸ் விலை குறைக்கப்படாவிடில், இந்த முறையும், இதற்குத்தான் அதிகப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது என்றாலும், இவர்கள் தரும் சேவை பல்வேறு குறைபாடுகள் உடையதாக, ஏமாற்றுகள் கொண்டதாக இருக்கிறது. அழைப்பு முறிவு (கால் டிராப்) பிரச்னைக்கே இன்னும் முடிவு காண இவர்கள் முன்வரவில்லை. அபராதம் செலுத்தும் நடைமுறைக்கு பெரும் எதிர்ப்பு சொல்கிறார்கள்.

நுகர்வோர் குறைதீர்ப்பு என்பது அரிதிலும் அரிது. அந்த சேவை வேண்டுமா? இந்த சேவை வேண்டுமா? என்று இந்த நிறுவனங்களின் குறுந்தகவல் வந்து கொண்டே இருக்கும். விவரம் தெரியாமலும், புரியாமலும் அதை ஏற்றுக் கொண்டால், உடனே நன்றி சொல்லிப் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அந்த சேவை வேண்டாம் என்று விடுவித்துக்கொள்ளப் பெரும்பாடு பட வேண்டும்.

முன்பணம் செலுத்தும் (பிரீபெய்டு) நுகர்வோர் கணக்கில் இணையசேவைக்கான கட்டணம் காலியானவுடன், அந்த சேவை நிறுத்தப்படாமல், அந்த நுகர்வோரின் பொதுஅழைப்புகளுக்கான தொகையிலிருந்து இணைய பயன்பாட்டுக் கட்டணத்தை கழித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களைக் கட்டுப்படுத்தும் டிராயின் முயற்சிகள் எதுவும் எடுபடுவதில்லை. புதிது புதிதாக உத்திகளைக் கண்டுபிடித்து, நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலித்து விடுகிறார்கள்.

அலைக்கற்றை ஏலத்தில் கிடைக்கும் தொகையில் 50 விழுக்காடு, தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களுக்கான ஏலத்திலேயே கிடைத்துவிடுகிறது. ஆனால், இந்தப் பெருநகரங்கள் அமைந்துள்ள மாநிலங்களுக்கு இந்த அலைக்கற்றை ஏலத்தால் என்ன பயன்? அந்தந்த மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டில் கிடைக்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை அந்த மாநிலத்துக்கு ஏன் வழங்கக் கூடாது?

அதேபோல, கூகுள் நிறுவனம் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்நிலையங்களிலும் சில கிராமங்களிலும் வை-ஃபை வசதியை அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது. அவர்களும் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை கேட்கிறார்கள். ஆனால், அதை வழங்குவது சாத்தியமில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுத்துவருகிறது. அதாவது, இலவச அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்க முன்வருவோரை அரசு ஏன் புறக்கணிக்க வேண்டும்?

அலைக்கற்றையை அதிக விலை கொடுத்து வாங்கினால், அந்த முதலீட்டை மீட்டெடுக்க, தனியார் தொலைபேசி நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தும். இதனால் பாதிக்கப்படப்போவது தொலைபேசி அல்லது இணைய நுகர்வோர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com