முஃப்தி முகம்மது சயீது காலமான ஒரு மாதத்திற்கு மேலாகியும்கூட ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சூழ்ந்திருக்கும் அரசியல் பனிமூட்டம் விலகக் காணோம். ஆட்சியில் இருந்த பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சிக் கூட்டணிக்குத் தெளிவான பெரும்பான்மை சட்டப்பேரவையில் இருந்தும்கூட, அவர்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகள் தொடர்வதால், பதவிப் பேரம் படியாததால், சட்டப்பேரவை கலைக்கப்படாமல் ஜம்மு - காஷ்மீர் ஆளுநரின் ஆட்சிப் பொறுப்பில் தொடர்கிறது. மக்கள் தீர்ப்புக்கு இதைவிடப் பெரிய அவமரியாதை வேறு எதுவுமே இருக்க முடியாது.
ஆட்சி அமைப்பதற்கான சுமுகச் சூழல் ஏற்படுத்தப்படாமல் கூட்டணியும் தொடராது, ஆட்சியும் அமையாது என்று மெகபூபா முஃப்தி தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. மத்திய அரசு காஷ்மீர மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலொழியக் கூட்டணி தொடராது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (ம.ஜ.க.) 28 இடங்களும், பாரதிய ஜனதாக் கட்சிக்கு (பா.ஜ.க.) 25 இடங்களும் இருக்கும் நிலையில், இரண்டு கட்சிகளும் கடந்த ஆண்டு கூட்டணி அமைத்து ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தபோதே, இந்தக் கொள்கையற்ற கூட்டணி அதிக காலம் நிலைக்காது என்று விவரம் தெரிந்த பலரும் வெளிப்படையாகவே எச்சரித்தனர். கொள்கையால் மாறுபட்டவர்கள் கரம் கோத்திருப்பதால் காஷ்மீர் மாநிலத்தில் அமைதி ஏற்பட்டுவிடும் என்று பகல் கனவு கண்டவர்களின் எதிர்பார்ப்பு, கடந்த ஓராண்டில் பொய்த்திருக்கிறதே தவிர நனவாகவில்லை.
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, ஜம்மு - காஷ்மீர் முதல்வராக முஃப்தி முகம்மது சயீது பதவியேற்ற விழா மேடையிலேயே, காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடக்கக் காரணமான பாகிஸ்தானுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தபோதே, மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி ம.ஜ.கவுடனான அந்தக் கூட்டணியை முறித்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது, குறைந்தபட்சம், "தேர்தல் அமைதியாக நடந்ததற்கு இந்தியத் தேர்தல் ஆணையமும், மாநிலக் காவல் துறை மற்றும் இந்திய ராணுவமும், அமைதி திரும்ப வேண்டும் என்கிற காஷ்மீர மக்களின் விருப்பமும்தான் காரணமேயொழிய, பாகிஸ்தானோ, பயங்கரவாதிகளோ அல்ல' என்று முகத்தில் அடித்தாற்போல பதிலாவது தந்திருக்க வேண்டும். பா.ஜ.க. அதைப் பொறுத்துக் கொண்டதுதான் இன்று மெகபூபா புதிய நிபந்தனைகளை விதிப்பதற்கு அச்சாரமாக அமைந்த நிகழ்வு.
அதேபோல, முஃப்தி முகம்மது சயீது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் எடுத்த முக்கியமான முதல் முடிவு பிரிவினைவாதத் தலைவர் மஸ்ரத் ஆலமை விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்துதான் காஷ்மீரில் மட்டுப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் மீண்டும் அதிகரித்தன. ஸ்ரீநகரில் கிலானி தலைமையில் நடந்த பேரணியில் மஸ்ரத் ஆலம் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றி இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பும் அளவுக்கு நிலைமை மோசமாவதற்கு முஃப்திதான் காரணம்.
காலம் சென்ற முஃப்தியும் சரி, இப்போது அவரது மகள் மெகபூபாவும் சரி, மிகவும் ராஜதந்திரமாக பா.ஜ.க.வின் பதவி ஆசை பலவீனத்தைப் பயன்படுத்தித் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள 46 இடங்களில் ம.ஜ.க.வால் 25 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. ஏனைய 21 இடங்களில் உமர் அப்துல்லாவின் காஷ்மீர் மாநாட்டுக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஜம்முவில் உள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியிலுள்ள 12 இடங்களில் ம.ஜ.க.வால் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
பா.ஜ.க.வுக்கு நிபந்தனைகளை விதிப்பது, எரிச்சலூட்டிக் கூட்டணியைவிட்டு விலகச் செய்வது, மறுதேர்தலுக்கு வழிகோலுவது என்பதுதான் மெகபூபா முஃப்தியின் மறைமுகத் திட்டம். அப்படியொரு நிலைமை உருவானால், காஷ்மீரில் ஆட்சி அமையாததற்கு பா.ஜ.க.தான் காரணம் என்று பிரசாரம் செய்து, மறு தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள 46 இடங்களையும், ஜம்முவிலுள்ள முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளான 12 இடங்களையும், குறைந்தபட்சம் இந்த 56 தொகுதிகளில் 45 தொகுதிகளையாவது வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதுதான் ம.ஜ.க.வின் மறைமுகத் திட்டம். அதையே காரணம் காட்டி, பிரிவினை சக்திகளுடன் கைகோத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைக்கு அவர்கள் வழிகோலமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
பா.ஜ.க. பதவி ஆசையால் மெகபூபா முஃப்திக்கும், ம.ஜ.கட்சிக்கும் அடிபணியாமல், கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வதுதான் இந்தச் சிக்கலுக்கு ஒரே ஒரு தீர்வு. மெகபூபா காங்கிரûஸயும், சுயேச்சைகளையும் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க முற்படுவாரே தவிர, ஆளுநர் ஆட்சி தொடர்வதை விரும்ப மாட்டார். அப்படி செய்யும்போது ஜம்மு - காஷ்மீரின் லகான் மத்திய அரசிடம் இருக்கும்.
பா.ஜ.க., ம.ஜ.க. கூட்டணி அமைத்தபோது 20.4.2015}இல் நாம் எழுதிய "போதுமே இந்தக் கூட்டணி' என்கிற தலையங்கத்தின் கடைசி வரிகள் மெகபூபா முஃப்தி நிபந்தனைகள் விதித்திருக்கும் இந்த வேளையிலும் பொருத்தமாகவே இருக்கிறது -- "ஆதரவை விலக்கிக் கொண்டு ம.ஜ. கட்சிக் கூட்டணியிலிருந்து பா.ஜ.க. வெளியேறாவிட்டால், இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும், எச்சரிக்கை!'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.