சரிபாதி!

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இன்னமும் விவாதத்துக்கு உரிய பொருளாகவே இருந்துகொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலமும் தம்மளவில் இத்தகைய சமூக மாற்றத்துக்கு வழிகோலுவது பாராட்டுக்குரியது. அரசியல் கட்சிகள் தங்களது கட்சி நிர்வாகிகள் அளவிலும், தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்கள் எண்ணிக்கையிலும் பாதிக்குப்பாதி பெண் வேட்பாளர்களைக் களமிறக்கினாலே
Updated on
2 min read

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டு அளவை 33%-லிருந்து 50%-ஆக உயர்த்தும் மசோதா தமிழக சட்டப் பேரவையில் பிப்ரவரி 20-ஆம் தேதி நிறைவேறியிருப்பதால், வருங்காலத்தில் தமிழக உள்ளாட்சிகளில் பெண்களின் பங்கு சரிபாதியாக இருக்கும்.
 தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஒன்றியம் என்ற அளவில் 1,32,458 பதவிகள் உள்ளன. ஆக, பெண்களுக்கு இதில் 66,229 பதவிகள் இந்த மசோதா மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 33% இடஒதுக்கீடு இருந்தாலும்கூட, உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்று, பதவிகளைப் பெற்ற பெண்கள் எண்ணிக்கை 39% என்பதைப் பார்க்கும்போது, ஒருவேளை, ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்த மற்ற இடங்களிலும் பெண்கள் போட்டியிட்டு வெற்றிபெறும் வேளையில், உள்ளாட்சிகளில் பெண்களின் பங்கேற்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
 குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்கள் ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளன. இப்போது தமிழகமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.
 நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இன்னமும் விவாதத்துக்கு உரிய பொருளாகவே இருந்துகொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலமும் தம்மளவில் இத்தகைய சமூக மாற்றத்துக்கு வழிகோலுவது பாராட்டுக்குரியது. அரசியல் கட்சிகள் தங்களது கட்சி நிர்வாகிகள் அளவிலும், தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்கள் எண்ணிக்கையிலும் பாதிக்குப்பாதி பெண் வேட்பாளர்களைக் களமிறக்கினாலே போதும், இப்படியொரு சட்டம் கொண்டுவந்து உறுதிப்படுத்தும் அவலநிலை ஏற்பட்டிருக்காது.
 முதன் முதலாக 33% இடஒதுக்கீடு பெற்று, தமிழக உள்ளாட்சி அமைப்புப் பதவிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டபோது, அவர்கள் பெரும்பாலும், ஏன் அனைவருமே என்றும் சொல்லிவிடலாம், அரசியல்வாதியின் மனைவி அல்லது குடும்ப அங்கத்தினராக இருந்தனர். இந்த நிலை அடுத்தடுத்து வந்த தேர்தல்களிலும் தொடர்ந்தது, தொடர்கிறது. அரசியல் தொடர்பில்லாமல் அரசியலுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், படித்த பட்டதாரிப் பெண்கள் தேர்தல் களத்தில் இறங்க வேண்டும்.
 அரசியல்வாதியின் குடும்ப அங்கத்தினரான பெண்ணுக்கும், அரசியல் சாராத பட்டதாரிப் பெண்ணுக்கும் என்ன வேறுபாடு வந்துவிடப்போகிறது என்று கேட்கத் தோன்றும். அரசியல் சார்ந்த குடும்பங்களிலிருந்து பெண்கள் அரசியலுக்கு வரும்போது அவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதில்லை. அவர்களை அந்தக் குடும்பத்து ஆண்கள் செயல்படவிடுவதில்லை. இந்த நிலைமையில் மாற்றம் நிகழ வேண்டுமானால், அரசியல் சாராத பெண்கள் அதிக அளவில் களம் இறங்க வேண்டியது அவசியம்.
 அரசியல்வாதிகளின் குடும்ப அங்கத்தினர் உள்ளாட்சிப் பதவிகளில் அமரும்போது, அவர் கணவரின் தலையீடு இல்லாமல் செயல்படுவது அரிதாகவே இருக்கிறது. கணவரின் அரசியல்தொடர்புதான் அவருக்கு இந்தப் பதவியைப் பெற்றுத்தந்துள்ளது என்பதால், கணவரின் சொற்படி நடக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. காலப்போக்கில் தொடர்ந்து அரசியலில் பதவி வகிக்கும்போது, இந்த நிலையில் மாற்றம் ஏற்படுகிறது என்றாலும்கூட, முற்றிலுமாகத் தலையீட்டைத் தவிர்த்துவிட முடிவதில்லை.
 ஆனால் பெண்கள், அரசியல் சாராமல் அல்லது கணவரின் அரசியல் செல்வாக்கு இல்லாமல் இப்பதவிகளில் அமரும்போது, அவர்கள் யாருடைய முடிவும் தன் மீது திணிக்கப்படுவதை ஏற்பதில்லை. இத்தகைய நிலையை உருவாக்க வேண்டுமானால், தமிழகத்தில் உள்ள படித்த பட்டதாரிப் பெண்கள் பெருமளவில் தேர்தல் களத்தில் குதிக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல முதல் தலைமுறை அரசியல் பெண்களை உருவாக்கி இருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மக்களின் அன்றாடப் பிரச்னைகள் முன்னுரிமை பெற்றுத் தீர்வு ஏற்படும். வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும்.
 உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும்போது அதற்கான பரப்பு குறைவு, வாக்காளர் எண்ணிக்கையும் குறைவு. குறிப்பிட்ட நாள்களுக்குள் வாக்காளர் அனைவரையும் நேரில் ஒருமுறை பார்த்து பேசிவிடவும் முடியும். அதே பகுதியில் புழங்கி, அதே பகுதியில் வாழும் பெண்கள், தங்களுக்கான பெண்கள் வாக்குகளைத் திரட்டுவதும் எளிது. நகராட்சி நீங்கலாக, உள்ளாட்சி அமைப்புகளின் பல பதவிகள் அரசியல் கட்சிச் சின்னம் இல்லாதவை. ஆகவே, அரசியல் தாக்கம் இருக்காது. வேட்பாளரின் அறிமுகம், முன்வைக்கும் பிரச்னை, உருவாக்கும் நம்பிக்கை ஆகியவையே வெற்றிக்குத் தேவையான அடிப்படை.
 உள்ளாட்சிகளை மாநில அரசியலின் செல்வாக்கிலிருந்து விடுவிப்பது எந்த அளவுக்கு நடைபெறுகிறதோ அந்த அளவுக்கு உள்ளாட்சியில் ஊழல் குறையும், செயல்பாடு அதிகரிக்கும், அரசியல் தலையீடும் குறையும். இதை நிகழ்த்த வேண்டுமானாலும், 50% உள்ளாட்சி இடங்களில் வெற்றி பெறும் பெண்களில் பெரும்பான்மையோர் அரசியல் சாராதவர்களாக இருக்க வேண்டும். அரசியல் சாராத பெண்களின் செயல்பாடுகளைப் பார்த்து, அரசியல்வாதிகளால் பதவிக்கு வந்த பெண்களும்கூட, தங்களை பின்நின்று இயக்குவதை விரும்பாமல், சுயமாக செயல்படத் தொடங்குவார்கள்.
 உள்ளாட்சிப் பதவிகள் மட்டுமல்ல, அனைத்துத் தளத்திலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கையிலும் சரிபாதியாக பெண்கள் இருப்பதை அரசியல் கட்சிகள் ஏன் உறுதிப்படுத்தக் கூடாது? இதற்கெல்லாம் சட்டம் போட்டு உறுதிப்படுத்துவது என்பது இன்னும் நமது சமூகம் ஆணாதிக்கச் சிந்தனையில் பாற்பட்டதாகத் தொடர்வதைத்தான் வெளிச்சம் போடுகிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com