நோக்கம் நிறைவேறாது!

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மக்களவையில் நிறைவேறிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மசோதா தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. ஆகவே, இதன் மூலம் ஈடுசெய் காடு வளர்ப்பு, மேலாண்மை, திட்டமிடல் ஆணையம் (CAMPA)  விரைவில் அமைக்கப்படும்.
Updated on
2 min read

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மக்களவையில் நிறைவேறிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மசோதா தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. ஆகவே, இதன் மூலம் ஈடுசெய் காடு வளர்ப்பு, மேலாண்மை, திட்டமிடல் ஆணையம் (CAMPA)  விரைவில் அமைக்கப்படும்.

காடு வளர்ப்பை மையப்படுத்துவதாக இந்த மசோதா அமைந்திருத்தபோதிலும், இதன் உண்மையான நோக்கம், ஈடுசெய் காடு வளர்ப்புக்கு கிடைக்கும் நிதியை முறையாக செலவிடுவதற்கான அதிகாரம் பெறும் ஓர் அமைப்பை உருவாக்குவதாக மட்டும் இருக்கிறதே தவிர, காட்டை இழந்தவர்கள் யார் அல்லது காடு இழந்தது என்ன, யார் பயன்பெறப் போகிறார்கள், இதில் காடுவாழ் பழங்குடியினரின் பொறுப்பு அல்லது அவர்களுக்கான இழப்பீடு என்ன என்பது குறித்து விளக்கமாகக் கூறப்படவில்லை. ஏற்கெனவே அமலில் உள்ள வன உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு உரிமைகளைப் பெற்றுள்ள காடுவாழ் பழங்குடியினர் எந்த வகையில் இந்த ஆணையத்தால் பயன் அல்லது பாதுகாப்பு அல்லது வேலைவாய்ப்புப் பெறுவர் என்ற விளக்கமும் இந்த மசோதாவில் இல்லை.

ஆணையம் தனக்கான விதிகளை அமைத்துக்கொள்ளும் என்றும், மத்திய அளவிலான ஒரு குழுமம், மாநில அரசு அளவிலான ஒரு குழுமம் எனத் தனித்தனியாக அமைக்கப்பட்டு, இந்த நிதி மேலாண்மை மற்றும் செலவிடலை மேற்கொள்ளும் என்கிறது மசோதா. இருப்பினும், மத்திய அரசின் உத்தரவு இறுதியானது. ஆனால் இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்கின்ற நிபந்தனைகளில் வன உரிமை சட்டம் குறித்தோ, பழங்குடியினர் குறித்தோ எந்தக் குறிப்பும் இல்லை.

இந்த மசோதாவுக்கு அடிப்படைக் காரணம், இத்தகைய ஓர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பது ஒன்றுதான் போலும். இந்த ஆணையம் அமைக்கப்படுவதற்கான அவசியம் என்னவென்றால், பணத்தைச் செலவிட ஒரு அமைப்பு தேவை. அவ்வளவுதான்.

வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், காடு அல்லாத தேவைகளுக்காக நிலங்கள் வழங்கப்படும்போது பயனாளிகள் தரும் ஈட்டுறுதிப் பணம், அல்லது காட்டுக்கு அழிவு ஏற்படுத்தியதற்காக நீதிமன்றங்கள் விதிக்கும் அபராதத் தொகை, காட்டின் நிலம் மற்றும் விளைபொருள் அனைத்துக்குமான மதிப்பீடு, வனத்துறை அல்லது அரசு பெறும் தொகை இவை யாவும் காடு வளர்ப்புக்காகத்தான் பயன்

படுத்தப்பட வேண்டும் என்று 2006-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், இத்தகைய பணம் முழுவதும் தனியாக வங்கிக் கணக்கில் போடப்படுகிறது. இதுவரை வட்டியும் முதலுமாக ரூ.42,000 கோடி சேர்ந்துள்ளது.

அந்தந்த மாநிலங்கள் தங்கள் தொகையில் 90 விழுக்காட்டை எடுத்துக்கொண்டு, மீதி 10 விழுக்காட்டை மத்திய அரசுக்கு கொடுத்துவிடவேண்டும். ஆணையம் மத்திய நிதிக் குழு, மாநில நிதிக்குழு என இரண்டு காடுவளர்ப்பு குழுக்களை அமைக்கும். இவர்கள் தற்போது இருப்பில் இருக்கின்ற நிதியையும், இனி வரக்கூடிய நிதியையும் காடு வளர்ப்புக்காகச் செலவிடுவார்கள். இந்த செலவிடும் அதிகாரத்தை அளிப்பதுதான் இந்த மசோதாவின் நோக்கமாக இருக்கிறது.

மீண்டும் ஓர் அதிகாரக் குழுவிடம் இந்தப் பொறுப்பு முழுமையாக ஒப்படைக்கப்படுமேயானால், இதில் மக்கள் பங்கேற்பு, குறிப்பாக, பழங்குடியினர் பங்கேற்பு இல்லாதபட்சத்தில் எவ்வாறு காடு வளர்ப்பு முறையாகவும், நிஜமாகவும் நடைபெறும் என்பது புரியவில்லை.

உதாரணமாக, அண்மையில் யமுனா நதியின் வெள்ளப் படுகையில் மாபெரும் பந்தல் போட்ட வாழும்கலை அமைப்புக்கு ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதித்தது பசுமைத் தீர்ப்பாயம். இந்த ஐந்து கோடி ரூபாய் என்பது அந்த ஆன்மிக மாநாட்டினால் அப்பகுதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிப்படுத்துவதற்கான தோராய மதிப்பீட்டுத் தொகை. இந்த நிதியினால் யமுனையில் மீண்டும் பழைய நிலைமை உருவாகிவிட்டது அல்லது உருவாக்க முடியவில்லை என்று யார் தீர்மானிப்பது? உள்ளூர்க்காரர்களின் கருத்து இல்லாமல் அதிகாரிகள் தீர்மானிப்பது எப்படி சரியாக இருக்கும்?

அண்மையில் திருச்சியில், ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமான ஜி-கார்னர் என்ற இடத்தில் இருந்த மரங்கள், ஒரு அரசியல் நிகழ்வுக்காகப் பாதுகாப்பு கருதியும், ஹெலிபேட் அமைக்கவும் வெட்டப்பட்டன. இதற்காக ரயில்வே நிர்வாகம் ரூ.18 லட்சம் இழப்பீடு கோரி, அதனைப் பெறவும் முடிந்தது. அரசு நிறுவனம் ஒன்று, இயற்கைக்கு ஈட்டுறுதித் தொகை பெற்றால் அந்தத் தொகையை அந்த நிறுவனமே செலவிட்டுக்கொள்ளலாமா அல்லது ஆணையத்தின் கணக்கில் சேர்க்கப்பட வேண்டுமா என்பது போன்ற கேள்விகளுக்கு விளக்கம் புதிய மசோதாவில் இல்லை.

காடுகளை உருவாக்குதல், இருக்கும் காடுகள் மேலும் வலுப்பெற உதவுதல், வேலைவாய்ப்பு என்ற சொற்களுடன் பணியைத் தொடங்கவிருக்கும் இந்த ஆணையம் மற்றும் அதன் குழுக்களில் வனத்துறை அதிகாரிகள், ஓய்வுபெற்ற உயர் அலுவலர்கள், அரசியல்வாதிகள் கூறும் பிரபலங்கள் என எல்லாரும் இடம்பெறுவார்கள். இவர்கள் தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியைக் கொடுத்து காடு வளர்க்கச் செய்வார்கள் என்பது நிச்சயம்.

காடுவாழ் பழங்குடியினர் காட்டை வளர்க்கவும், வாழ்வாதாரத்துக்காக மரங்களை வெட்டாமல் இருக்க அவர்களுக்கு சிறு இழப்பீட்டுத் தொகையை மழைக்காலங்களில் (மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு மாதா மாதம் வழங்குவது போல) அவர்களுக்கு சிறுஉதவித்தொகை வழங்கவும் செய்தால், காடு நிச்சயமாக வளரும். தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் முயற்சிதான் இந்த ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மசோதா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com