"ஆதார்' என்கிற ஆதாரம்!

வியாழக்கிழமை மக்களவையின் நிகழ்வுகள் அனைத்தும் முடங்கவும் திரும்பத் திரும்ப அவை ஒத்தி வைக்கப்படவும் காரணமாக இருந்தது ஆதார் அட்டை விவகாரம். "அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்பதால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று எதிர்க்கட்சிகள் கூறின. இதே பிரச்னை மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டு, கூச்சல் குழப்பம் நிலவியது.
Updated on
2 min read

வியாழக்கிழமை மக்களவையின் நிகழ்வுகள் அனைத்தும் முடங்கவும் திரும்பத் திரும்ப அவை ஒத்தி வைக்கப்படவும் காரணமாக இருந்தது ஆதார் அட்டை விவகாரம். "அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்பதால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று எதிர்க்கட்சிகள் கூறின. இதே பிரச்னை மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டு, கூச்சல் குழப்பம் நிலவியது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், எதிர்க்கட்சிகள் தங்களை ஏழைப் பங்காளர்களாகக் காட்டிக் கொள்ளவும், ஊடகங்களில் இடம்பெறவும் இப்படியெல்லாம் செய்கின்றன. இந்த எதிர்ப்புகள் பயனற்றவை எனத் தெரிந்தும் நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றன.

அரசின் நல உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமல்ல என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சமாதானமாக ஒரு பதிலை அளித்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்தியாவில் ஆதார் எண் இல்லாமல் அரசு நல உதவிக் கேட்டு எந்த ஒரு படிவத்தையும் பூர்த்தி செய்ய இயலாது என்பது நன்றாகத் தெரியும். வங்கிக் கணக்கு தொடங்க, வாகனம் வாங்கிட, பதிவு செய்ய என எல்லாவற்றுக்கும் ஆதார் எண் கேட்கப்படுகிறது. ஆதார் எண் இல்லாவிட்டால் வேறு ஏதாவது ஆதாரம் கேட்கிறார்கள். இருப்பினும் இது ஒருவகையான எச்சரிக்கை. "உடனே ஆதார் அட்டை பெறுங்கள்" என்கின்ற அரசின் எச்சரிக்கை குரல் அந்தப் படிவத்தில் ஒலிக்கிறது.

ஆதார் எண் அமலுக்கு வந்த பிறகு 3.5 கோடி போலி சமையல் எரிவாயு இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டன. இந்தப் போலியான இணைப்புகள் ஏழைகளுடைய வீடுகளுக்கானவை அல்ல. அவை வணிகத்துக்கானவை. அரசின் மானியத்தை கொள்ளையடித்த போலி இணைப்புகள். ஏழை மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்காக அளிக்கப்படும் மானியத்தை முறைகேடாகப் பெற்றவர்கள். 3.5 கோடி போலி இணைப்புகள் நீக்கப்பட்டதால்தான், தற்போது ஏழை எளிய மக்களுக்கு சமையல் எரிவாயு கொடுக்கும் திட்டம் சாத்தியமாகியுள்ளது.

ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்கும் திட்டம் இன்னும் முழுமையாக அனைத்து மாநிலங்களிலும் நிறைவேறவில்லை. ஆனால், இதுவரை நாட்டில் 1.6 கோடி போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ.10,000 கோடி மானிய இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. ஆதார் எண் இணைக்கப்பட்ட பிறகு, குடும்ப அட்டை ஸ்மார்ட் கார்டாக மாறப்போகிறது. ஸ்மார்ட் கார்டை பயன்படுத்த குடும்பத் தலைவர் அல்லது அந்தக் குடும்ப அட்டையில் உள்ள ஒரு நபர் நேரடியாக நியாயவிலைக் கடைக்கு வந்து, விரல் ரேகையைப் பதிந்தால் மட்டுமே, பொருள் வாங்க முடியும்.

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் இந்த விழிப்புணர்வை நுகர்வோருக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். "இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஆதார் எண் பெறுங்கள், இல்லையானால் டிசம்பருக்குப் பிறகு இந்தக் குடும்ப அட்டை செல்லாததாகிவிடும்' என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், தமிழகத்தில் ஆதார் அட்டைகான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் குடும்ப அட்டையுடனும், சமையல் எரிவாயு திட்டத்துடனும் ஆதார் எண் இணைக்கப்படுமேயானால், போலிகள் தடுக்கப்பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும். இந்த ஆதார் எண் மூலம் போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு நீக்கும் பணியும் மிக எளிதாக நடைபெறும்.

மிக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், போலியை ஒழித்து தகுதியான நபர்கள் பயன் பெற வேண்டுமானால் ஆதார் அட்டை அவசியம். இதனால் நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்கள் கசியும் என்று எதிர்ப்போர் தெரிவித்தாலும், அதற்கான வாய்ப்புகள் குறைவு. அதை தடுக்கவும் முடியும்.

தனிநபர் குறித்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையில் இனிமேல் எந்தவித அர்த்தமும் கிடையாது. செல்லிடப்பேசி, கடன் அட்டை, வங்கிக் கடன் என்று தொடங்கி எல்லா தேவைகளுக்கும் ஒருவருடைய தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பெற்று பதிவு செய்து கொண்டு விடுகிறார்கள். இதற்கெல்லாம் நாம் தகவல்களை அளிக்கும்போது ஆதார் அட்டைக்கு தகவல்களை தராமல் இருப்பதால் என்ன பயன்?

ஆதார் எண் விவகாரத்தைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகள் மிகத் தெளிவாக முன்வைக்க வேண்டிய கோரிக்கை, ஊதியம், காப்பீடு, இழப்பீடு போன்றவற்றுக்கான பணப்பலன்களை நேரடி வங்கிக் கணக்கில் செலுத்துவதைப்போல, உணவுப் பொருள்களுக்கான மானியத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தக்கூடாது என்பதுதான். நியாயவிலைக் கடையில் தற்போது கிடைக்கும் அரிசி, கோதுமைக்கு அரசு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தினால் அது மது அருந்துதல் உள்ளிட்ட வேறு பல ஆடம்பரத் தேவைகளுக்கு செலவாகி விடும். அந்தப் பணம் வெளிச்சந்தையில் அரிசி கோதுமையை வாங்குவதற்கு பயன்படாது. இதனால், வறுமை, உடல்நலக்கேடு, குடும்ப அமைதி குலைதல் எல்லாமும் ஏற்படும்.

"ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணையுங்கள். போலி அட்டையை ஒழியுங்கள். ஆனால் உணவுப் பொருள் மானியத்தை பணமாக வங்கிக் கணக்கில் போடாதீர்கள்' என்பதைத்தான் எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும். ஆதார் எண், போலி குடும்ப அட்டையை ஒழிப்பதாக இருக்கட்டும். ஏழை குடும்பங்களின் வயிற்றில் அடிப்பதாக இருக்கக்கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com